Wednesday, 28 July 2010

அமெரிக்க ராணுவம் ரகசியமாக வைத்திருந்த போர் தகவல்கள்-கசிவு


அமெரிக்க ராணுவம் ரகசியமாக வைத்திருந்த போர் தகவல்கள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. அத்தனையும் அமெரிக்க உளவுப்படையின் ஆட்கள் ஆப்கானிஸ்தானில் சேகரித்தவை. தலிபான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக நட்பு நாடுகளை சேர்த்துக் கொண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் போர் ஒன்பது ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நேரத்தில் கசிந்துள்ள இந்த தகவல்கள், போரின் போக்கையே மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போரில் உதவுவதற்காக அமெரிக்காவிடம் ஆண்டுக்கு ஐயாயிரம் கோடி டாலர் வாங்கும் பாகிஸ்தான் மறைமுகமாக தலிபான்களுக்கும் உதவுகிறது என்ற உண்மை ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ எப்படி இரட்டை வேடம் போட்டு இரு அரசுகளையும் ஏமாற்றி வருகிறது என்பது சுவாரசியமான கூடுதல் தகவல்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளை திட்டமிட்டு நிறைவேற்றும் பொறுப்பை எஸ் விங் என்ற பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ் விங் 'எவருக்கும் பதில் சொல்ல அவசியமில்லாத வானளாவிய அதிகாரத்துடன் செயல்படுகிறது; அதனிடம் கணக்கு வழக்கு இல்லாமல் ஏராளமாக பணம் புரள்கிறது’ என்பது கசிந்த ரகசியங்களில் ஒன்று.

வியட்நாம் போரின்போது ராணுவத்தின் ரகசிய தகவல்கள் அம்பலமானதன் விளைவே அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக கொதித்தெழுந்தனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல் இப்போதும் நடக்க சாத்திய கூறுகள் உள்ளதாக சிலர் கணிக்கின்றனர்.

"விக்கிலீக்ஸ்" (www.wikileaks.com) என்ற இணையதளம் 92 ஆயிரம் ஆவணங்களை கொண்ட இந்த ரகசியங்களை மிகப்பிரபல்யமான மூன்று பத்திரிகைகள் வாயிலாக வெளிக்கொணர வழி வகுத்துள்ளது. அரசாங்கத்தின் அளவுக்கு மீறிய ரகசிய நடவடிக்கைகளுக்கு எதிராக உருவானதே இந்த இணையதளம்.

‘வெளிப்படையான நிர்வாகத்தில் மட்டுமே அனைவருக்கும் நீதி கிடைக்கும். அனாவசியமான ரகசியங்கள் தவறுகள் நடக்கவே வாய்ப்பளிக்கும்’ என்பது அந்த இணையதள நிறுவனத்தின் தத்துவம்.

அமெரிக்க போர் விமானம் இராக்கிய அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி 12 பேர் இறந்த காட்சி அந்த விமானத்தின் வீடியோவில் பதிவாகி இருந்ததை வெளியிட்டு பிரபலமானதே இந்த இணையதளம். தற்போது 12 நாடுகளில் தன்னார்வலர்கள் உதவியால் செயல் பட்டுவரும் 'விக்கிலீக்' - ஐ, ஒபாமா அரசு முடக்க எடுக்கும் முயற்சிக்கு உலகெங்கும் உள்ள அரசுகள் மானசீகமான ஆதரவு அளிக்கும் என்பதும் உலகமறிந்த ரகசியம்.

அதேவேளை சம்மந்தப்பட்டவர்களே இப்படியான இரகசியங்களை கசிய விடுவதும் ஓர் இராணுவ உத்தியே என்பதையும் திருவாளர் பொதுஜனம் சிந்திக்க இடமிருக்கிறது.

No comments: