Sunday, 18 July 2010

இந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு

CBI கண்காணிப்பில் RSS - இந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு
Source: http://www.satyamargam.com/1503


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த அஷோக் பெர்ரி, அஷோக் வர்ஷ்னே ஆகிய இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவ்விருவரும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியாகிய தேவேந்தர் குப்தாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

புலனாய்வுத் துறை கண்காணிப்பில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இரு மூத்த செயல்வீரர்களின் விசாரணை அறிக்கை, தற்போது CNN-IBN நிருபர்கள் கைவசமுள்ளது. முக்கியக் குற்றவாளியோடு அவ்விருவருக்கும் தொடர்புள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், ஆர்.எஸ்.எஸுக்குப் புதிய தலைவலியாக இப்போது உருவாகியுள்ளவர் அதனுடைய தலைமைச் செயற்குழுவின் உறுப்பினரும் மூத்தத் தொண்டருமான இந்திரேஷ் குமார் என்பவராவார். இவருக்குத் தீவிரவாதச் செயல்களோடு தொடர்புடைய பல குற்றவாளிகளோடு நெருக்கமுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்தோரில் உள்ள 12 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்டு அப்பன்னிருவரும் தற்போது புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களும் இந்திரேஷுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஸீபிஐ எனும் புலனாய்வுத்துறை இத்தகவல்களை வெளியே விடாமல் இருப்பதற்கு எவ்வளவோ முயன்றும் இத்தகவல் இப்போது கசிந்து வெளிவந்திருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிகப் பெரும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்பதால் சென்ற வாரம் ஆர்.எஸ்.எஸின் உயர்மட்டத் தலைவர்கள் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டும் கட்டாயத்துக்குள்ளாயினர்.

கூட்டத்திற்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், "சங் பரிவாரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்" என்று வாக்குறுதியளித்தார்.

"நாங்கள் எவ்வித விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், அதில் எங்களைக் களங்கப் படுத்தும் முயற்சியோ முறைக்கேடோ இருக்கக் கூடாது" என்று ராம் மாதவ் நிபந்தனை விதித்திருக்கிறார்.

2007ஆம் ஆண்டு மே 18 அன்று ஹைதராபாத் பழைய நகரப் பகுதியிலுள்ள மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் 9 பேர் மாண்டனர். குண்டு வெடிப்பு என்றால் உடனேயே கைது செய்யப் படுவதற்கு முஸ்லிம்களுக்கா பஞ்சம்? "மஸ்ஜிதில் குண்டு வைத்தவர்கள்" என்பதாகக் கூறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷுஹைப் ஜகிர்தர், அவரின் மருமகன் இம்ரான்கான், முஹம்மது கலீம், அப்துல் மஜீத் என்ற நால்வரைக் கைது செய்து வழக்கு ஜோடித்தது காவல்துறை. வழக்கு நடந்தது. காவல்துறையின்மீது காறித் துப்பாத குறையாக, "நால்வரும் அப்பாவிகள்" என நீதிபதி தீர்ப்பளித்து விடுவித்தார்.

அதற்கு முன்னரே, மக்கா மஸ்ஜித் வழக்கை ஸீபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என நாடு முழுதும் கோரிக்கைக் குரல் உயர்ந்தது. மஸ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்திலும் தவ்ஹீது ஜமாஅத் போராட்டம் நடத்தியது. முதலாவது நாடகம் முடிவுக்கு வந்தது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு ஸீபீஐயிடம் ஒப்படைக்கப் பட்டது.

இப்போது, அந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஏற்கனவே கைதாகியுள்ள தேவேந்திர குப்தாவுக்கு அதே குண்டு வெடிப்பில் வர்ஷனேயும் பெர்ரியும் முழு ஒத்துழைப்பு நல்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 21முதல் ஜுன் 25வரை வர்ஷ்னே, பெர்ரி மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய மூவர் மீதும் ஹைதராபாத்தைச் சேர்ந்த புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தினர்.

இவ்விசாரணையின்போது மூவரும் தாங்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்கள்தாம் என்பதை ஒப்புகொண்டதோடு, தாங்கள் கான்பூர், அயோத்தி, மற்றும் ஃபைஸாபாதில் தனியாகச் சந்தித்ததையும் வெளிபடுத்தியுள்ளனர். ஆயினும் வர்ஷ்னேவும் பெர்ரியும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புச் சதியில் தங்களிருவருக்கும் பங்கில்லை என்று மறுத்தனர்.

விடை காணமுடியாத வினாக்கள்:

"ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை ஏதும் நடக்கவில்லை" என்று ஸீபீஐ புலனாய்வுத்துறை மூலம் தொடர்ந்து அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டது உண்மை; அந்த விசாரணையின் ஆவணங்கள் தங்கள் கைவசம் உள்ளன என IBN-CNN நிருபர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர். இந்த முரண்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஸீபீஐயின் 'விசாரணை முறை'யைப் பற்றிப் பல கேள்விகள் எழுகின்றன:

  1. முதலாவதாக, குண்டு வெடிப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி தேவேந்திர குப்தாவின் முன்னிலையில் வைத்து ஆர்.எஸ்.எஸ் காரர்களான வர்ஷ்னேயும் பெர்ரியும் விசாரணை செய்யப்பட்டது ஏன்?

  2. தேவேந்திர குப்தாவிற்கு இவ்வருவரும் ஸிம் கார்டு மற்றும் தங்குமிடம் போன்ற இதர முக்கிய வசதிகள் ஏற்பாடு செய்தபோது, அவருடைய குற்றப் பின்னணி இவ்விருவருக்கும் தெரியாதா?

  3. இந்தோரில் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்கள், மாலேகாவ் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸாத்வீ பிரக்யா தாகூரோடு தொடர்புடையவர்களா?

  4. ஆர்.எஸ்.எஸ்ஸின் மடியில் கனமில்லை என்றால் அவர்களது உயர்மட்டத் தலைவர்களின் அவசரக் கூட்டங்கள் தில்லியிலும் இராஜஸ்தானிலும் நடைபெற வேண்டிய கட்டாயம் என்ன?

இந்துத்துவத் தீவிரவாதம் என்பதை மத்திய அரசு இந்நேரம் பார்த்து வெளிக்கொணர்வது, தம் தொண்டர்களைச் செயலிழக்கச் செய்யப்படும் உத்தி என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் இப்போதைய அச்சங் கலந்த குற்றச்சாட்டு. அதன் தொண்டர்கள் தீவிரவாதிகளோடு கலந்து களத்தில் நிற்பதைக் கண்ணாரக் கண்டு கொண்டே அந்த யதார்த்ததை அச்சம் எனும் முகமூடியைப் போட்டு மூடிக் கொள்ளப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.

கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுகின்ற சங்பரிவார், தீவிரவாதிகளுடனான இந்திரேஷ் குமாரின் தொடர்பை வெளியிட்ட ஐபிஎன்-ஸீஎன்என் தொலைக்காட்சி நிலையத்தைத் தாக்குவதற்காகத் தன் தொண்டர்களை இன்று அனுப்பி வைத்துத் தன் உண்மை முகத்தைச் சற்றே வெளிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், தீவிரவாதப் பின்னணி உள்ளவர்களோடு எந்த மாதிரியான அணுக்கத்தைக் கடைப்பிடிப்பது? என்பதுதான் ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் எதிர் நோக்கும் தற்போதைய தலையாயக் கேள்வி.