Showing posts with label சுற்று சூழல். Show all posts
Showing posts with label சுற்று சூழல். Show all posts

Tuesday, 8 May 2012

விளம்பர அடாவடி!



எஸ்.ஜெயராம், அரண்வாயலிலிருந்து எழுதுகிறார்:

விளம்பரங்கள் -  நமது தினசரி வாழ்க்கையில் நுழைந்து பயங்கர கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டது என்றே சொல்லவேண்டும்.

ஆம்! சனி, ஞாயிறுகளில் கூட காலை 5 மணி முதலே கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள்  மூலம் மத ரீதியான பிரசாரத்தை ஆரம்பித்து பள்ளிப் படிப்பு, முதியோர் அமைதி போன்ற பலவற்றை  கெடுக்கின்றனர்!! 

பிறந்த நாள், செத்த நாள் போன்ற நினைவு நாட்களிலும், அரசியல் தலைவர்களின் கட்சி மாநாடுகளிலும், திருமணங்களிலும்  டிஜிட்டல் பேனர்கள் கண்களை  உறுத்துகின்றன!

கட்சிகளின் கொடிக்கம்பங்களோ சென்டர் மீடியனில் அழகுக்காக வளர்க்கப்படுகின்ற செடிகளை நாசப்படுத்துவதோடு தெருக்களையும் அலங்கோலப்படுத்தி விடுகின்றன!

நாளிதழை திறந்தால் ....... விளம்பர நோட்டீஸ்களின் அபிஷேகம் தான்!

கொக்கி போட்டு திருடப்படுகின்ற கள்ள மின்சாரத்தில் தமிழகத்தின் ஏனைய அரசியல் தலைவர்களுடன் அரசின் அமைச்சர்களும் ஒளிர்கின்றனர்!

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடற்ற விளம்பர தட்டிகளில், கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில், அக்கட்சிகளின் தலைவர்களை போற்றிப் புகழ்ந்து நம்மை கண்டு களிக்க செய்கின்றனர்?
 
பஸ் ஸ்டாண்டுகளில் 25 அடி உயர கட்-அவுட்களில் தலைவரும்/ தலைவியும்! அங்கே பயணிகள் நிற்பது எப்படி? 

பிறந்த நாளோ/ இறந்த நாளோ- இந்த கருமாதிகள் முடிந்த பிறகாவது இத்தலைவர்களின் அழகு முகங்களை(?) அப்புறப்படுத்துகிறார்களா?

சாலையின் குறுக்காக  கட்டிய சணல் அறுந்து பிளாஸ்டிக் தோரணங்கள் பாதசாரிகளின்  கால்களில் பின்னி கீழே தள்ளுகின்றன!  இதில் எல்லா கட்சிகளுக்கும் சம அளவு பங்களிப்பு உண்டு!!

கட்சித் தலைவர்களின் முகங்களை, "டிவி' சேனல்களிலும், நாளிதழ்களிலும் தினம் தினம் பார்த்து அலுத்தது போக தெரு சுவர்களையும் விடாமல், "இந்திரன், சந்திரன்" என்று புகழ்ந்து எழுதி அச்சுவர்களையும் ஏன் அலங்கோலப்படுத்துகிறீர்கள் ? அநியாயம் ஐயா! 

உயிரோடு இருக்கின்ற சாதி / சமுதாய / அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் ஆகிய இவர்களின் படங்களுக்குத்தான் மாலைகள் போட்டு கோஷமிட்டு நாறடிக்கிறீர்கள் என்றால், செத்துப் போனவர்களையும் சந்தியில் உட்காரவைத்து கொட்டுமேளத்துடன் கூத்தடித்து சிரமப்படுத்துவானேன்?

உன் வீட்டு கல்யாணம் ....
உன் அப்பனுக்கு, 10 ஆம் நாள் காரியம் ....
உன் பிள்ளைக்கு ஓராண்டு நிறைவு ....
அவை எல்லாமே உன்னோடு!
எங்களுக்கு என்ன? 

உன் வீட்டு இறந்த உடல், சுடுகாடு நோக்கி, சாலையில் போகும் போது ... மது குடித்து, பூ இறைத்து ஆடிப்பாடி சாலைகளை விளம்பர மேடையாக்கி அசுத்தப்படுத்த, யார் அதிகாரம் தந்தது? 

உன் துக்கம் உன்னோடு! 
உன் மகிழ்வு உன் வீட்டுக்குள்!

இந்த விளம்பர அடாவடிக்கு, எப்போது தான் முடிவு?

---------------------------------------------------------------------------------
சகோதரர் Moosa mdn அனுப்பிய Email செய்தி, சற்று மாறுதல் செய்யப்பட்டு, இங்கு பகிரப்பட்டுள்ளது.

Friday, 23 March 2012

Toilet விஷமத்தன(அழிச்சாட்டிய)ங்கள்?!

Toilet - இங்கே, சிலர் செய்யும் விஷம(அழிச்சாட்டிய)ங்களின் தாக்கமே இந்த பதிவு! இந்த பதிவை, வெளியிடலாமா / வேண்டாமா!... என்றுதான்,  முதலில், தோன்றியது. காரணம், இங்கு பகிர்ந்திருக்கும் விஷயங்களும், படங்களும் பலருக்கு அருவெறுப்பையும், பயங்கரத்தையும் உண்டாக்கலாம். இருப்பினும், எல்லோருக்குமே அத்தியாவசிய அறிவுரையாகவும், அதோடு, Toilet -டில் விஷமத்தன(அழிச்சாட்டிய)ங்கள் புரியும் ஆட்களுக்கு எச்சரிக்கையாகவும் அமையவேண்டும் என்கிற நோக்கத்தில், பதிவிட்டே ஆக வேண்டும் என்று  முடிவு எடுத்ததின் விளைவே இப்பதிவு.


 
சிறுவயதில் Asian / Bombay Toilet Sink என்று தரையோடு பதிக்கப்பட்ட கழிவறை பீங்கான் பேசின் பிரபலமானது. அதில் வயதானவர்கள், குறிப்பாக முழங்கால் வலி உள்ளவர்கள், குத்தவச்சு உட்கார்ந்து எழுவது சிரமமாக இருக்கவே, தொடர்ந்து 'Sitting Type Toilet' அதாவது, 'Western Toilet Sink' பிரபலம் ஆனது.  வசதியாக, ஏதோ, வரவேற்பறை நாற்காலியில் 'ஜம்மென்று' அமர்ந்திருப்பது போல அமர்ந்து கொள்ளலாம்..! முழங்கால் வலி பிரச்சினை இன்றி ஆசுவாசப்படுத்தி அமர்ந்திருக்கலாம். இதனால், சிரமம் என்பது ஒரு பொருட்டல்ல என்றானது.
 
இப்படியான சொகுசு Sitting Type Toilet வந்த பிறகுதான்... 'போனோமா-வந்தோமா' என்றில்லாமல், Walkman, Daily & Weekly Magazines, Office Files, Music Key Board போதாகுறைக்கு Lap Top உட்பட டாய்லட்டுக்குள் நேரம் கடத்தவென்றே 'சுற்றுலா' செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது! காரணம், எந்த தொந்தரவும் எவர் சப்தமும் இல்லாமல் தனிமையில் அமர்ந்து தன் சிந்தனைக்குதிரையை செவ்வனே செலுத்த முடிகிறதாம்..! என்ன கொடுமை!

மேற்குறிப்பிட்ட கூத்தெல்லாம் அரங்கேறுவது - வீட்டில் இருக்கின்ற அல்லது Star Hotel Room -ல் உள்ள படுசுத்தமான Sitting Type Toilet -டில் மட்டும்தான். மற்றபடி Office, College, Railways, மற்றும் Public Toilet -களில்  உள்ள Sitting Type Toilets என்றால் அதில் உட்கார எவருக்கும் மனமே வராது! காரணம், அதை பெரும்பான்மையானோர் முறையாக உபயோகிப்பது இல்லை / உபயோகிக்க தெரியவில்லை என்று தான் கொள்ளவேண்டும்.

முக்கியமாக, (பீங்கான்) தொட்டியின் மீதுள்ள Plastic Seat Cover -ஐ, யாருமே, சுத்தமாக வைத்திருப்பது இல்லை! சிறுநீர் கழிக்க மட்டும் Toilet -டை உபயோகிப்பவர்கள், Seat Cover -ஐ, மேலே தூக்கி  நீர் தொட்டியுடன் சாய்த்து நிறுத்தி வைத்து விட்டு, அதன் பின்னர் தன் இயற்கை தேவையை நிறைவேற்றும் பொறுமையோ அல்லது பழக்கமோ எவருக்கும் இருப்பதில்லை. நின்றவாறே... கழித்துவிட்டு... அந்த Plastic Seat Cover -ஐ, Nasty பண்ணிவிடுவதில் பலருக்கு என்னவோ ஒரு ஆனந்தம்!

சரி.... இதை, 'அடக்கி வைக்க முடியாத அவசரம்' என்று எடுத்துக்கொண்டால் கூட, "தன் தவறுதானே! சற்று தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வரலாமே? அடுத்து வருபவர் எப்படி இதில் அமர்வார்?" என்கிற லஜ்ஜை/ பொதுநலம்/பொறுப்புணர்வு என்கிற எதுவுமே கிஞ்சிற்றும் இல்லாமல் அப்படியே வெளியில் வந்து விடுவார். இதுபோன்ற தான்தோன்றி பேர்வழிகள் இனியாவது திருந்த வேண்டும்!

அடுத்து வருபவருக்கு, அந்த Plastic Seat Cover மேல் சிதறிக்கிடக்கும் மஞ்சள் கலர் நீரை பார்த்தவுடன், அதில் உட்காரத்தான் மனம் வருமா..? இல்லை, கழுவி விட்டு உட்காரலாம் என்கிற எண்ணம்தான் வருமா?  'எவனோ செய்த அசிங்கத்தை  தான் எதற்கு கழுவ வேண்டும்' என்கிற எண்ணம் தானே மேலோங்கும்!



சுத்தத்தை பேணக்கூடியவர்கள் (தவிர்க்க முடியாத சமயங்களில்) Bus Stand / கடை வீதி போன்ற இடங்களில் உள்ள Public Toilets -களை உபயோகிப்பதாக இருந்தால், இரண்டொரு ரூபாய்களை செலவு செய்து கடைகளில் இருந்து பத்திரிக்கைகளை வாங்கிகொண்டு Toilet -இன் உள்ளே போவது உத்தமம்! பீங்கான் தொட்டியின் (Seating Cover உள்ளதோ/இல்லையோ) மேற்புற வளைவின் மீது தண்ணீர் ஊற்றி,  கையோடு வைத்திருக்கும் பத்திரிக்கையிலிருந்து சற்று கிழித்து மேற்புற வளைவை துடைத்துவிட்டு, அப்பத்திரிக்கையை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும் இடங்களில் பரத்தி வைத்தப்பிறகு, அமர்ந்து தன் தேவைகளை நிறைவேற்றலாம். 

இன்னும் சிலர் எதற்குமே கவலைப்படாமல் செருப்பு அல்லது ஷூ காலுடன் அந்த பீங்கான் தொட்டியின் வளைவின் மீது ஏறி (கீழுள்ள வலதுபுற படத்தில் உள்ளது போன்று) அமர்ந்து, அந்த Sitting Type Toilet -டை அந்தக்கால Bombay Toilet  போல உபயோகப்படுத்துவர்! 
.

மேலே குறிப்பிட்ட 'அவரை' தொடர்ந்து, மேலும், உள்ளே செல்வோர், அவ்வளைவின் மேல்  செருப்பு / ஷூ இவைகளின் அச்சுடன் சேர்ந்த சகதி / மண் போன்ற கன்றாவிகளை கண்டு, முகம் சுளித்து .... இவரும் முன்னவரை போலவே ...... செய்ய ... இனி வரும் எல்லோருமே ...... அதைப்போலவே?! ..(அஹ்! என்ன ஒரு ஒற்றுமை!!) இப்படிப்பட்ட (ஒற்றுமை என்னும்) அறிவீனத்தினால் ஏற்படப்போகும் / காத்திருக்கும் ஆபத்தை யாருமே அறியாமல் இருப்பதுதான் வேதனை!

ஆம்! இவ்வகை பீங்கான் தொட்டிகள் மேற்புறம் அகன்றும் அடியில் குறுகலாகவும்  வடிவமைப்பட்டுள்ளது. கால்களை தரையில் ஊன்றி இத்தொட்டியின் மேல், முறையாக, அமர்வதால் உடலின் எடையானது (பீங்கான்) தொட்டியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை; மாறாக, உடல் எடையானது கால்கள் மூலமாக பரவி (பூமிக்கு) சென்று விடுகிறது.

ஆனால், மேலே உள்ள படத்தில் உள்ளது போல், பீங்கான் தொட்டியின் வளைவின் மேல் முறையற்று ஏறி, 'குத்த வச்சி' அமரும்போது உடல் எடையானது  (பீங்கான்) தொட்டியின் மீது குவிந்து  கூடுகின்ற அதே சமயம், 'குத்த வச்ச' இரு கால்களின் மூலம் ஏற்படும் விசையானது, கீழ்நோக்கி வெளிப்பக்கமாக, உந்தித்தள்ளுவதால், என்னதான் ISI பெற்ற முதல் தரம் வாய்ந்த Branded  Sitting Type Toilet -ஆக இருந்தாலும், நாளடைவில் பலம் குன்றிப்போய்விட வாய்ப்புள்ளது. அதோடு, தொட்டியை சுத்தப்படுத்தும் Brush போன்ற கருவிகளால், எங்கேனும் இடிபட்டு, கண்களுக்கு தெரியாத சிறு விரிசல் போன்றவை ஏற்பட்டும் இருக்கலாம். இப்படி, முறையற்று அமர்வதால் அந்த Sitting Type Toilet எந்நேரத்திலும் இருதுண்டாகவோ அல்லது பல துண்டு, துகள்களாகவோ ... கீழுள்ள படத்தில் உள்ளவாறு உடையலாம்..!


அப்படி உடைவதால் அந்த Sitting Type Toilet -இல் 'குத்த வச்சி' அமர்ந்தவரின் கதி எப்படி இருக்கும்? எசகுபிசகாக உடையும் அந்த Toilet பீங்கானின் கூரான பகுதிகளோ அல்லது அதன் சில்லுகளோ, கால்களை பரப்பி விழுகின்ற அவர் சுதாரிப்பதற்குள், எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எவராலும் அறுதியிட்டு சொல்லத்தான் இயலுமா? எவராலும் எண்ணிப்பார்க்கவே முடியாத பயங்கரத்தை அல்லவா அவர் சந்தித்திருப்பார்!

அப்படி, Sitting Type Toilet -ஐ முறையற்ற வகையில் உபயோகித்த ஒருவருக்கு நடந்ததை  கீழுள்ள ஃபோட்டோவில் பாருங்கள்..! காண சகிக்கலை..!



Source: e mail வழியாக நண்பர் அனுப்பிய இச்செய்தியை சற்று மாற்றங்கள் செய்து   பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  (Thanks நண்பா!!)

Monday, 19 March 2012

மின்சாரச் சிக்கலும் தமிழக அரசின் தனியார்துறை பாசமும்




 “....தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு களையப்பட்டு, மின்வெட்டு அறவே ஒழிக்கப்படும். தமிழகம் மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழும்...”

இது கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, தற்போது முதல்வர் பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா சொன்னது. மக்களும் செயாவின் பசப்பு வார்த்தைகளை நம்பியும், கடந்த ஆட்சியின் மீது கொண்டிருந்த பல்வேறு வெறுப்புகளை வெளிக்கொணரும் வகையிலும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.

ஆனால் செயலலிதா அரியணையேறிய ஓரிரு நாட்களிலேயே, “வேதாளம் முருங்கை மரம்” ஏறிய கதையாக சமச்சீர்க் கல்வி எதிர்ப்பு, பரமக்குடியில் ஆறு தமிழர் படுகொலை, விலை உயர்வு, தொடர் மின்வெட்டு என்று மக்கள் விரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் வரலாறு அனைவரும் அறிந்ததே.

செயலலிதா ஆட்சிக்கட்டிலேறிய ஆறே மாதத்தில், மின்சாரம் எப்போது துண்டிக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சருக்கே தெரியாத அளவிற்கு, தற்போது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. மொத்த மின்வெட்டு எட்டுமணி நேரமா, பத்துமணி நேரமா? - என்று மின்துறை அமைச்சரே குழம்பிப்போகும் அளவுக்கு நிலைமை மோசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் இருள் சூழ்ந்து கிடக்கக்கூடிய நிலை ஏற்பட்டதற்கான காரணம் என்ன? அரசுக்கு இப்போது ஏற்பட்டுள்ள திடீர் மின் பற்றாக்குறை இயற்கையானதுதானா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது, 1910-ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் வந்தது.

'விடுதலை இந்தியாவின்' முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற புரட்சியாளர் அம்பேத்கர், 'மின் விநியோகச் சட்டம்-1948' என்றொரு சட்டத்தை நிறைவேற்றி, அதை அறிமுகம் செய்து பேசும்போது, 'எதிர்கால இந்தியா மின் வளர்ச்சியைச் சார்ந்தது. மின்சாரம் என்பது எல்லா தொழிலுக்கும் தாய்த் தொழில் போன்றது. ஆகவே இது தனியாரிடம் இருக்கக்கூடாது. 70 விழுக்காடு கிராமங்களை உள்ளடக்கிய விவசாய நாடு இந்தியா. எனவே கிராமங்களுக்கு மலிவான விலையில் மின்சாரத்தை வழங்கும் வகையில் மின்சாரத்தை விநியோகிக்கும் பொறுப்பை மத்திய-மாநில அரசுகள் ஏற்க வேண்டும்' என்று மின்சாரத்தின் அவசியத்தின் முன்னுரிமையை வலியுறுத்தினார்.

மேலும், இது மாநில அரசின் ஒரு துறையாக முடங்கி விடாமல் மின் வாரியங்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் வகையில் சட்டத்தை வடிவமைத்து, மின்சாரப் பயன்பாட்டை அனைவரும் எட்டுவதற்கு வழிவகை செய்தார். 

தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் 'சேவை' என்கிற நிலையில்தான் அவ்வாரியம் தொடங்கப்பட்டது அதன்படியே செயல்பட்டும் வந்தது. மக்களின் பேராதரவையும் பெற்று விளங்கியது.

1975லேயே 95 விழுக்காடு கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கி, மின் உற்பத்தியில் முன்னணியில் விளங்கியது தமிழ்நாடு மின்சார வாரியம்.

அதன்பிறகுதான், மின்வாரியங்கள் மூலதனத்தில் 3 விழுக்காடு இலாபமீட்ட வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில், 1979-ஆம் ஆண்டு ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவரை ‘சேவை’ என்கிற நிலையில் இருந்த மின்சார வாரியம், அப்போதுதான் ‘இலாபம்’ என்கிற ஒரு கருத்தை முன்வைக்கிறது.

'புதிய பொருளாதாரக் கொள்கை' உருவானபோது, மின்சாரத்தின் ‘கழுத்து’ இறுகத் தொடங்கியது. உலகமயமாக்கலின் விளைவால் வேரூன்றிய பன்னாட்டு நிறுவனங்களின் இலாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்குச் சாதகமாக, 'ஒழுங்குமுறைச் சட்டம் - 1998' என்கிற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது இந்திய அரசு. அதுவரை மின்சார வாரியத்தின் கையில் இருந்த மின் கட்டண நிர்ணயம், உரிமம் வழங்கும் அதிகாரம் (லைசென்ஸ்) உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் தட்டிப் பறித்துக் கொண்டது ஒழுங்குமுறை ஆணையம்.

இவ்வொழுங்குமுறை ஆணையம் திமுக அரசால் உருவாக்கப்பட்டது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்நிய பெருமுதலாளிகளின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் கடந்த 2003-ஆம் ஆண்டு, 'மின்சாரச் சட்டம் 2003' என்கிற ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அச்சட்டமானது. 'தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் முன் அனுமதி பெறத் தேவையுமில்லை. மின்சாரம் வணிக ரீதியாக விற்கப்படவேண்டும்' என்பன போன்ற பல புள்ளிகளுடன் முழுக்க முழுக்க தனியார் துறையினரின் ஆதிக்கத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டது.

1998-இல் ஒழுங்குமுறை ஆணையம் 'தலையெடுத்த' பிறகு இருந்த இலாபமும் சற்றே குறைந்து நட்டத்தை அடையத் தொடங்கியது மின்சார வாரியம். 

எடுத்துக்காட்டாக: 
1998-99இல் 334.93 கோடி இலாபம்; 
1999-2000இல் 365.05 கோடி இலாபம்; 
2000-2001இல் 387.83 கோடி இலாபம்; 
2001-2002-இல் 4851.9 கோடி நட்டம் 
(நன்றி. மின்சாரக் கட்டணம்-தனியார் துறையின் வேட்டைக்காடு, பொறியாளர் சா.காந்தி) 

இந்த புள்ளி விபரத்தை நன்கு கூர்ந்து கவனித்தீர்களேயானால் ஒழுங்குமுறை ஆணையத்தின் இலட்சணம் விளங்கும். அவ்வாணையம் பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் அடைந்த இலாபம் 1087.81 கோடி; ஆனால் 2001-2002-இல் அடைந்த நட்டம் 4851.9 கோடி. என்னே ஒழுங்குமுறை ஆணையத்தின் சாதனை!

இவ்வாறாக 1957-தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து 2003-வரை 46 ஆண்டுகள் வாரியங்களால் அரசு அடைந்த நட்டம் ரூ.41400 கோடி (இக்கால கட்டத்தில் தான் மக்களுக்கு சேவை அடிப்படையில் மின்னிணைப்பு வழங்கப்பட்டது).  

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அடைந்த நட்டம் ரூ.1,13,089 கோடி.

எதிர்வரும் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நட்டம் ரூ.53,298 கோடி. இந்த நட்டத்தையெல்லாம் சரிகட்டப்போவது வேறு யாருமில்லை; பொது மக்களாகிய நாம் தான். அதற்காகத்தான் முடிவை முன்கூட்டியே எடுத்துவிட்டு, மக்களிடம் 'கருத்துக்கேட்பு' என்னும் நாடகத்தை அரங்கேற்றுகிறது அரசு.

ஒழுங்குமுறை ஆணையம் தொடக்கத்திலிருந்து பெரும் நட்டத்தில் இயங்கி வந்தாலும் ஓரளவு மின்சாரம் வினியோகம் இருந்ததே, இப்போது என்ன திடீர் தட்டுப்பாடு என்கிற புரியாத புதிருக்கான விடையை இனி ஆராய்வோம்.

பொதுவாக மின்சாரக் கொள்முதல் ஐந்து பிரிவுகளிலிருந்து பெறப்படுவதாக கூறப்படுகிறது. அவை:
1. மாநில அரசின் சொந்த மின் உற்பத்தி 
2. நடுவண் தொகுப்பிலிருந்து தமிழகத்தின் பங்கு 
3. மரபுசாரா மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் மின்சாரம் 
4. ஒப்பந்தம் செய்துகொண்ட தனியாரிடமிருந்து வாங்கப்படும் மின்சாரம் 
5. சந்தை விலையில் கொள்முதல்.

மேற்கண்ட ஐந்து பிரிவுகளில் இருந்தும் மின்சாரம் தங்குதடையின்றி மின்சாரம் பெறப்பட்டு வந்தது. ஆனால் அதே நேரத்தில், மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தக் கூடுதல் மின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடுதலாக மின் உற்பத்தி நிலையங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால் உலகமயமாக்களின் விளைவால் வந்த புதிய பொருளாதாரக் கொள்கை அதற்கு தடைபோட்டது.

1994-க்குப் பிறகு மின்வாரியங்கள் தங்கள் கூடுதல் தேவைக்காகப் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கவில்லை.

அக்கால கட்டத்தில், புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க CEA (Central Electricity Authority)யின் அனுமதி பெற்றாக வேண்டும். ஆனால் CEA, மின் வாரியங்களின் எல்லா நகர்வுகளுக்கும் முட்டுக்கட்டைபோட்டது. இவ்வாறு நடுவணரசு, தனியார் முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களின் எடுபிடிகளாக விளங்கியதன் விளைவாக தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தடையின்றிச் செயல்படத் தொடங்கின.

தமிழகத்தின் முதல் தனியார் மின் உற்பத்தி நிலையமாக, சென்னை பேசின் பாலம், வாரியத்தின் நிலத்தில் அமைந்துள்ள ஜி.எம்.ஆர். செயல்படத் தொடங்கியது. இந்நிறுவனம் கடந்த 1999-சனவரி முதல் உற்பத்தியைத் தொடங்கியது. இது 196 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

தொடர்ந்து பிள்ளை பெருமாள் நல்லூர் நிலையம், சனவரி 2001-இல் சாமல்பட்டி, (10.566 மெகாவாட்) ஏப்ரல் 2001-இல் மதுரை பவர் (106 மெ.வா), டிசம்பர் 2002-இல் நெய்வேலி S.T.C MS (250 மெ.வா) போன்ற நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கின. இதுபோக, Abam (113 மெ.வா), Penna (52.8 மெ.வா) போன்ற தனியார் மின் நிலையங்களும் செயல்படத் தொடங்கின. மேற்கண்ட நிறுவனங்கள் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டன. அதன்படி, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், வாரியத்திற்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய வேண்டும்.

வாரியம் தன் மின் தேவை அதிகரிக்கும்போது, வெளிச் சந்தையில் மின்சாரத்தை வாங்கத் தொடங்கியது.  இன்று மின்சார வாரியம் தன் சொந்த உற்பத்தியான 32 விழுக்காடு போக, ஏனைய 88 விழுக்காடு மின்சாரத்திற்கு கொள்முதலை நம்பித்தான் வினியோகம் செய்கிறது.

மேலே கண்ட தனியார் நிறுவனங்களிடம் வாரியம் செய்து கொண்டஒப்பந்தத்தின்படி, வாரியம் 1 யூனிட் மின்சாரம் கூட வாங்கவில்லை என்றாலும், நிலைக்கட்டணமாக ஆண்டுக்கு 1006 கோடியை அவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும். இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், மேலே முதலில் கண்ட 5 மின் நிலையங்களும் வாரியத்திடமிருந்து ரூ.10,060 கோடியை மூலதனக் கட்டணமாக பெற்றே நிலையத்தைத் தொடங்கினார்கள் என்பதுதான்.

பல்வேறு நிலைகளில் ஒழுங்குமுறை ஆணையம், தனியார் மின்நிலையங்களின் பகல் கொள்ளைக்குத் துணை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில், தனியார் மின் நிலையங்களுக்கும், வாரியத்துக்குமிடையே நடந்த பல்வேறு வழக்குகளில், தனியார் மின்நிலையங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளையே வழங்கியுள்ளது ஒழுங்குமுறை ஆணையம். இந்த வழக்குகளில் பெரும்பாலானவை ரூ.100 கோடிக்கு மேல் வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக ஜி.எம்.ஆர். வாசவிக்கு வழங்கப்பட்ட ரூ.484 கோடி தீர்ப்பு. பி.பி. என் மின் நிறுவனம் கேட்ட ரூ.189 கோடி வழக்கில் ரூ.1050 கோடி இழப்பீடு வழங்கச் சொல்லி தீர்ப்பு வழங்கியது ஒழுங்குமுறை ஆணையம். ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தனியார்மீது என்னே கருணை?!

இவ்வாறாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வீழ்ச்சிக்கு தனியார் மின் நிறுவனங்களுடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தமே காரணம் எனலாம்.

தற்போது தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் மின்வெட்டு சிக்கல் பற்றி பொதுமக்களால் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் வாரி இரைத்து பெறப்படும் மின்சாரம் எங்கே? என்ற கேள்வி எழுவது இயல்பே!

பொதுவாக, நடுவணரசின் அனல்மின் நிலையம் ஆனாலும் சரி, அணுமின் நிலையமானாலும் சரி, எந்த மாநில எல்லையில் அமைந்துள்ளதோ, அம்மாநிலத்திற்கு அம்மின் நிலையத்தினால் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 30 விழுக்காடு மட்டும் தான் வழங்கப்படும். மீதியுள்ள மின்சாரம் நடுவண் மின்தொகுப்பிற்கும், அண்டை மாநிலங்களுக்கும் வழங்கப்படும்.

குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 30%, ஆந்திராவிற்கு 19%, கர்நாடகாவிற்கு 14%, கேரளாவிற்கு 10%, புதுச்சேரிக்கு 5%, என்.எல்.சி. நிறுவனத்திற்கு 7%, நடுவண் மின்தொகுப்பிற்கு 15% என பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நடுவணரசின் சதியால் தன் மண்ணில் உற்பத்தியாகும் மின்சாரத்தையெல்லாம் அண்டை மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு, இருளில் தவித்துக்கொண்டிருக்கிறான் சொரணையற்ற தமிழன்.

நம் தாய்த்தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவணரசால், பன்னாட்டு - வடநாட்டு தனியார்த் தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில், தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதால் தான் ரூ.42 ஆயிரம் கோடி வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. (நன்றி: தென் ஆசியச் செய்தி - பிப்ரவரி 2012) 

நம்மிடமிருந்து மின்சாரத்தைப் பெறும் அண்டை மாநிலங்களில் மின் தடை அமுலில் இல்லை. ஆனால் நாமோ இருந்த மின்சாரத்தை இழந்துவிட்டு இருளில் அல்லல்படுகிறோம்.

மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க அரசு வழிவகை செய்திருக்கிறது. பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்கள் நம்முடைய மின்சாரத்தில் குளிர்சாதன அறைகளில் இருந்துகொண்டு கொண்டாட்டம் போட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் அமைய இருப்பனவற்றையும் சேர்த்து, 139 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்தியாவிலேயே அதிகச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறியுள்ளது. இது இரு கழக ஆட்சிகளின் 'உயரிய சாதனை!'

தமிழகத்தில் 70 விழுக்காடு மின்சாரத்தை 2.1 கோடிபேர் பகிர்ந்துகொள்ள, 30 ஆயிரத்துக்கும் குறைவான பன்னாட்டு-தனியார் பெருநிறுவனங்கள் 30% மின்சாரத்தை அரசின் ஆசிர்வாதத்தோடு எடுத்துக்கொள்கின்றன‌.

வீடுகளுக்கான மின்சாரமே சரியாகக் கிடைக்காது மக்கள் இருளில் தவிக்கும் இந்தச் சூழலில், தனியார் பெருமுதலாளிகளின் காலி மனையிடங்கள் (ரியல் எஸ்டேட்) இரவிலும் பகலைப்போல ஜொலிப்பதைக் காணமுடிகிறது! இந்தக் கொடுமை நெல்லை மாவட்டத்தின் கிருஷ்ணன் கோவில், இராஜபாளையம், சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகள் என பரவலாக தமிழகம் முழுவதும் அரங்கேறி வருகிறது.

மின்வாரிய நட்டத்தை பொதுமக்களின் தலையில் கட்டத் துடிக்கும் அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் மின்சாரத்திற்கு நம் வீடுகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மிகக்குறைவான தொகையையே மின்கட்டணமாக வசூலிக்கப்படுவது என்ன நியாயம் என்றே புரியவில்லை?

மேலும், 1200 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வணிகப் பட்டியலில் இருந்து தொழில்களுக்கான பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளன‌. இதனால் ஒவ்வொரு தகவல் தொழில் நுட்ப நிறுவனமும் யூனிட்டுக்கு ரூ.1.80லிருந்து ரூ.2.50 வரை இலாபமடைந்துள்ளது. இவ்வாறு 'ஏழ்மையான' தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 'கருணை' காட்டி வருகிறது வாரியம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்குச் 'சலுகை' விலையில் மின்சாரம் வழங்கும் அரசு, ஏழை எளிய மக்கள் வாழ்ந்துவரும் குடியிருப்புகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தையும் தடைசெய்துள்ளது.

இன்றைய சூழலில் நிலவும் மின் சிக்கலுக்கு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களில் போராட்டமே காரணம் என்ற மாயையை மக்களிடத்தே உருவாக்க, சமீப காலங்களில் அளவுக்கு அதிகமாக - வழக்கத்துக்கு மாறாக மின்வெட்டு செய்து, கூடங்குளம் போராட்டத்தை பாமர மக்களைக் கொண்டே எதிர்ப்புத் தெரிவிக்க வைக்கும் படுமோசமான நயவஞ்சகச் செயலைச் செய்து வருகிறது தமிழக அரசு.

கடந்த உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, கூடங்குளத்துக்கு எதிப்புத் தெரிவிப்பது போல பம்மாத்து செய்த செயலலிதா, தேர்தல் முடிந்ததும் மத்திய அரசுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
 
மன்மோகன் சிங்கின் மற்றும் நாராயணசாமிகள் விடும் 'புருடாக்களை' உண்மையென நம்பிக்கொண்டு மெத்தப் ‘படித்த மேதாவிகள்’ சிலர் கூடங்குளம் அணு உலையைத் திறந்தால், உடனே தமிழகம் மின்ஒளியில் மிளிரும் என்று பேசிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த மின் தேவை, நாளொன்றுக்கு 11,000 மெகா வாட்; இதில் 2500 மெகா வாட் பற்றாக்குறை. தற்போது இது 4000 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. (நன்றி : இந்தியா டுடே - அக்டோபர் 2011)

ஆனால், நீங்கள் சொல்கிறபடி கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால், அதிலிருந்து சுமார் 963 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; அதில் மின்கசிவின் மூலம் ஏற்படும் இழப்பு 173 மெகா வாட்; மீதியுள்ளது 790 மொகா வாட். இதில் அணு உலை அமைந்துள்ள தமிழகத்திற்கான ஒதுக்கீடு (30%) வெறும் 237 மெகா வாட். இது தமிழகத்தின் தற்போதைய 2% மின் தேவையைக் கூட பூர்த்தி செய்யாது. மீதியுள்ள 553 மெகா வாட் மின்சாரம் யாருக்கு என்ற ஐயம் எழலாம்.

மீதியுள்ள மின்சாரம், நம்மைப் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காலில் போட்டு மிதித்து, தமிழகத்தின் முல்லைப் பெரியாறு நீர் உரிமையை மறுக்கும் மலையாள இனவெறி கேரள அரசுக்கும், காவிரியாறு மற்றும் பாலாற்று நீர் உரிமையை மறுக்கும் முறையே கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கும் நம் இனத்தைக் கூட்டோடு அழித்த இலங்கைக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் செல்லவிருக்கிறது. அவர்கள் நம் உயிருக்கு உலைவைக்கும் கூடங்குள அணு மின்சாரத்தைப் பயன்படுத்தி குதூகலிக்க இருக்கிறார்கள்.

தில்லி அரசு, கூடங்குளம் அணு உலையைத் திறப்பதில் காட்டும் முனைப்பைப் பார்த்தே தெரியவில்லையா கூடங்குளம் யாருடைய நலனுக்கானதென்று?

அன்பார்ந்த “படித்த” பெருமக்களே, இப்போது சொல்லுங்கள்; நம் தாய்த் தமிழகத்திற்குப் பேராபத்தை ஏற்படுத்தும் கூடங்குளம் மரண உலை நம்மண்ணில் தேவைதானா?.

தற்போதைய பெரும் மின்பற்றாக்குறைக்கு பெருமாநல்லூர் (பி.பி.என்.) ஜி.எம்.ஆர். வாசவி, மதுரை பவர், சாமல்பட்டி போன்ற தனியார் மின் நிறுவனங்கள், மின்வாரியத்தில் இருந்து தங்களுக்குச்சேர வேண்டிய நிலுவைக்காக உற்பத்தி நிறுத்தம் செய்து வருவதும் பன்னாட்டு நிறுவனங்களும், ஒழுங்குமுறை ஆணையமும், தில்லி அரசுமே காரணமாகும்.

மின்சாரமின்றி அன்றாடம் பகலிலும், இரவிலும் அல்லலுக்கு உள்ளாகும் தமிழக மக்களின் மின் தட்டுப்பாட்டைத் தீர்க்க, வாரியத்திற்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்து, தேவையற்ற நட்டத்தை நிறுத்த வேண்டும். பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும். நம் மண்ணில் உற்பத்தி செய்யப்படும் நெய்வேலி உள்ளிட்ட மின் நிலையங்களின் மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அளிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

தமிழகத்தின் மின் தட்டுப்பாடு என்பது, தனியார்மயம் மற்றும் உலகமயத்தோடு தொடர்புடையதாக உள்ளது. எனவே, தனியார்மயம் மற்றும் உலகமயத்திற்கு எதிராக மக்களின் கரங்கள் உயர்ந்தால் தான் தமிழகத்தை பீடித்துள்ள 'இருள்' விலகும்.

- தங்க.செங்கதிர் ( tha.senkathir@yahoo.com)
அலைபேசி : 9786752008

Monday, 13 September 2010

பக்கிங்காம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாய்: தமிழக கடலோரப்பகுதி வளர்ச்சி பெற தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படுமா?

பக்கிங்காம் கால்வாயை சென்னை திருவான்மியூரில் இருந்து, தூத்துக்குடி வரை நீட்டிப்பதன் மூலம், தமிழக கடலோரப் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும். பக்கிங்காம் கால்வாய், இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரம் காக்கிநாடாவில் (ஆந்திரா) இருந்து, தெற்கே மரக்காணம் (புதுச்சேரி) வரை அமைந்துள்ளது.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட இக்கால்வாய் மூலம், கட்டுமானம் மற்றும் உணவுப் பொருட்கள் ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் இடையே கொண்டு வரப்பட்டன. ஆனால், கடந்த 60-70 ஆண்டுகளுக்கு முன், இக்கால்வாய் நீர்வற்றி தூர்ந்து போய், இக்கடலோர நீர்வழிப் பாதை முற்றிலுமாக மறைந்து போய் விட்டது. மூன்று காரணங்களால் இந்நீர் வழிப்பாதை தூர்ந்து போனது.

* சென்னை பகுதியில் பூமி மேலே எழும்புவதாலும், அதனால் எண்ணூர் மற்றும் கோவளம் கிரீக் (கடல் நீர்நிலத்தில் உட்புகும் ஓடைகள்) மூலம் கால்வாய்க்கு வந்த நீர் குன்றியது.

* சென்னை பகுதியில் பூமி மேலே எழும்புவதால், இந்நீர் வழிப்பாதைக்கு மேற்கு பகுதியிலிருந்து கிழக்கே, வங்காள விரிகுடாவில் கலக்கும் நதிகள் மற்றும் ஓடைகள் அதிகமாக மண்ணைக் கொண்டு வந்து கொட்டி, இக்கால்வாய் மண் செரிமானம் அடைந்தது.

* கடலோரப் பகுதியின் அபரிமிதமான வளர்ச்சித் திட்டங்களால் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு ஆகியவை. ஆனால், பக்கிங்காம் கால்வாயை வடக்கே திருவான்மியூரில் (சென்னை) இருந்து, தெற்கே மரக்காணம் வரை புதுப்பிப்பதோடு, இக்கால்வாயை கடற்கரையோரமாக மரக்காணத்தில் (புதுச்சேரி) இருந்து, காரைக்கால், வேளாங்கண்ணி, வேதாரண்யம், ராஜாமடம், மணமேல்குடி, ராமநாதபுரம் மற்றும் வைகை கடல்கரையோரமாக தூத்துக்குடி வரை நீட்டிக்க முடியும். அதற்கான நிலவியல் சாத்தியங்கள் இருப்பதாகவும், செயற்கைக் கோள்கள் மூலம் நடத்திய ஆய்வுகள் காண்பிக்கின்றன.

அப்படி அமைப்பதற்கு ஏதுவாக, வடக்கே மரக்காணத்திலிருந்து தெற்கே தூத்துக்குடி வரை, கடந்த கால கடல்மட்ட மாறுதல்களால் உருவாக்கப்பட்ட நீளமான கால்வாய் போன்ற களிமண்ணால் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளங்களும், அப்பள்ளங்களின் இருபுறங்களிலும் நீளமான மணல்மேடுகளும் உள்ளன. இப்பள்ளங்களை ஆராய்ந்து, அதன் மூலம் தக்க பாதையைக் கண்டறிந்து, அதன் வழியே பக்கிங்காம் கால்வாயை தூத்துக்குடி வரை நீட்டிக்க முடியும். அவ்வாறு நீட்டிப்பதற்கு, கடல்நீர் நிலத்தில் உட்புகும் ஓடைகள் (கிரீக்) மூலம், கடல் நீரை உள்ளே கொண்டு வந்து, நீரோட்டத்தை உருவாக்கலாம்.

உதாரணமாக, வேதாரண்யம் பகுதியில் கிரீக் (1), (2) மற்றும் (3) வழியாக கடல்நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு வரலாம். இந்நீரை வேதாரண்ய பகுதியை பொருத்தவரை, இரண்டு பாதையில் பக்கிங்காம் கால்வாயை தோண்டி ஓடச் செய்யலாம். ஒன்று: தில்லை விளாகம் (4) வழி, மற்றொன்று: வேதாரண்யம் கடலோர நீர்நிலை வழி (5). அப்படி கொண்டு செல்வதால், தில்லைவிளாகப் பகுதியில் (4) இக்கால்வாய் நீரை தில்லைவளாகம் பகுதியில் உள்ள வறண்ட சதுப்பு நிலத்தில் பரப்பி, அதன் மூலம் மீன்வளர்ப்பு, மீன் உணவு வகை தயாரித்தல், உப்பு மற்றும் கடல்சார் வேதியியல் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை உருவாக்க முடியும்.

அதுபோலவே வேதாரண்யம் கடலோரத்தில், தற்போது மண் செரிமானம் அடைந்து, மறைந்து போய் கொண்டிருக்கும் கடலோர நீர்நிலை (5) மூலம், பக்கிங்காம் கால்வாயின் மறுகிளையை கொண்டு சென்று, மண் செரிமானத்தால் மறைந்து விட்ட கடலோர இந்நீர் நிலையை மறுபடியும் உருவாக்கி, கடல்சார் வேதியியல் பொருட்கள், மீன்வளர்ப்பு, மீன் உணவு தயார் செய்தல், புன்னைக்காடுகள் வளர்ச்சி ஆகியவற்றை செயல்படுத்தலாம். இதேபோன்று இக்கால்வாயை நீட்டிப்பதன் மூலம், தமிழகக் கடலோரத்தில் பல இடங்களில், புன்னைக் காடுகளை உருவாக்கலாம்.

உதாரணத்திற்கு, ராஜாமடம் பகுதியில் (6) கடலில் கலக்கும் நதிநீரை கால்வாய்க்கு மேற்கே தேக்கி, (7) கடல்நீரை டர்பைன் மூலம் (8) அலை அலையாக நதிகளின் முகத்துவாரத்தில் செலுத்தி கடல்நீரும், நதிநீரும் கலக்கும் தன்மையை உருவாக்கி, பக்கிங்காம் கால்வாயின் பகுதிகளில் காணப்படும் நதிகளின் கழிமுகத்தில் புன்னைக் காடுகளை உருவாக்க முடியும். இதுபோன்ற புன்னைக் காடுகளை உருவாக்குவதன் மூலம், சுனாமி மற்றும் புயல் அலை எழும்பும் காலங்களில், கடல்நீர் உட்புகுதலை தடுத்து நிறுத்த உதவும்.

இதுபோன்று பக்கிங்காம் கால்வாயை மேற்கூறியவாறு நீட்டிப்பதால், பல அரிய நன்மைகள் உள்ளன. அவை

* கேரளா மாநிலத்தில் உள்ளது போல, கடலோர நீர்வழிப் பாதையின் மூலம் போக்குவரத்து.

* சீர்காழி, சிதம்பரம், நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், காரைக்கால், திருநள்ளார், தேவிபட்டினம், ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களை இணைத்தல்.

* கடலோரப் பகுதிகளில், பல சிறு துறைமுகங்களை அமைத்தல்.

* கால்வாயின் இருமருங்கிலும் உள்ள சதுப்பு நிலத்தில், சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத மீன் வளர்ப்பு மற்றும் உப்பளங்கள்.

* புன்னைக் காடுகள் வளர்த்தல் போன்ற, பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும்.

உண்மையிலேயே தமிழகக் கடலோர அமைப்பு, இயற்கை நமக்கு தந்த மிகப்பெரிய வரப்பிரசாதம். ஆகவே, பக்கிங்காம் கால்வாயை வடக்கே திருவான்மியூரில் (சென்னை) இருந்து, தெற்கே தூத்துக்குடி வரை நீட்டிப்பதன் மூலம், தமிழக கடலோரப் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களை உருவாக்க முடியும். இதற்கு செயற்கைக்கோள் தொழில் நுட்பம் சார் நிலவியல் ஆய்வு தேவை.


- சோம. இராமசாமி (துணைவேந்தர், காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்)

Thursday, 9 September 2010

யானைகளை மிரட்டும் கட்டெறும்புகள்

மரம், நெற்பயிர்களை அண்டவிடாமல் யானைகளை மிரட்டும் கட்டெறும்புகள்

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் டோட்பால்மர் தலைமையில் இயங்கும் விஞ்ஞானிகள் குழு கென்யாவில் ஓர் ஆய்வு நடத்தியது.

ஒருவகை மரத்தின் கிளைகளை யானைகள் மேய்ந்துவிடாமல் கட்டெறும்புகள் தடுக்கின்றன என்று இந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. வன விலங்குகளில் மிகவும் பெரியது யானை, மிகவும் சிறியது கட்டெறும்பு, அப்படியிருந்தும் எறும்புக்கு யானை பயப்படுகிறது. அதற்கு குழு ஒற்றுமையே காரணம்.

யானை மரக்கிளைகளை ஒடிக்க முயலும் போது அந்த மரத்தில் இருக்கும் கட்டெறும்புகள் கூட்டமாக யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடிக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் வேதனையில் துடிக்கும் யானைகள் மீண்டும் அந்த மரத்தின் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை.

கட்டெறும்புகளின் பயம் என்பது குழு ஒற்றுமைதான். யானை உருவத்தில் பெரியதாக இருந்தாலும் தனியாக நின்றுதான் கட்டெறும்பு கூட்டத்தின் சவாலை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் துதிக்கையில் புகும் கட்டெறும்பு கூட்டத்துடன் மோதும் போது யானை தோற்று விடுகிறது.

இதனால் கென்யாவில் அகோரப்பசி வந்தாலும் கட்டெறும்பு கூட்டங்கள் இருக்கும் மரங்களை யானைகள் அண்டவே அண்டாது. அந்த அளவுக்கு கட்டெறும்புகள் யானைகளை மிரட்டி வைத்துள்ளன. சில நேரங்களில் கட்டெறும்பு கடித்து யானை இறந்து விடுவதும் உண்டாம்.

ஆப்பிரிக்காவிலுள்ள காட்டு மரங்கள், வயலில் விளையும், நெற்பயிர்களை யானைகள் தின்று நாசமாக்கி விடுகின்றன. எனவே யானைகளிடம் இருந்து அவற்றை காக்க மரங்கள் மற்றும் நெற்பயிர்களுக்குள் கென்யா கட்டெறும்பை விடலாம் என விஞ்ஞானிகள் குழு யோசனை தெரிவித்துள்ளது

Friday, 30 July 2010

உருகும் கிரீன்லாந்து-கண்களுக்குத்தெரிகிறது!



சுமார் 56 கி.மீ நீளம் கொண்ட கிரீன்லாந்தின் பனித்தீவு உருகி - ஆவி மற்றும் தண்ணீராக மாறிவருவதை, இப்போது கண்களால் பார்க்கப்படும் ஒரு காட்சியாகி விட்டது. ஆம்! பெருந்தொகையான உள்ளுர்வாசிகளும், காலநிலை அவதானிப்பாளர்களும் மற்றும் சுற்றுலா செல்லும் தனிமனிதர்களும் கிரீன்லாந்தின் பனித்தீவு உருகுதலை நேரடியாக பார்த்து அதிசயப்படுகிறார்கள்.

காலநிலைப் பாதிப்பு என்பது பனிமலைகளை உருக செய்யும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அதைப் பலர் "அம்புலிமாமா கதை" என்றே வேடிக்கையாக கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இன்று, அது ஒன்றும் அம்புலிமாமா கதையல்ல; கண் முன் காணும் நிதர்சனம் என்று தெரியவருகிறது.

கடந்த 2008ம் ஆண்டிலேயே இந்தத் தீவு உருகுவதை பார்ப்பதற்கான வெப்காம் (கேமரா) ஒன்றை அமைத்து இருந்தார்கள். நாம் வாழுகின்ற புவியை, நாமே- நமது சுயநலத்துக்காக, வெப்பமாக்கியதற்கான கொடுமை, கணத்திற்குக் கணம் இப்போது உலகத்தின் கண்களுக்கு தெரிகிறது. ஆசியப்பகுதி நாடுகளில் உயருகின்ற கடல் மட்டம் இதனுடைய மறுதாக்கம் என்பதும் கவனிக்கத்தக்கது.

Wednesday, 28 July 2010

நாய் போல வாழ்ந்து வரும் அதிசய இளம் பெண்?!

நாய் போல வாழ்ந்து வரும் அதிசய இளம் பெண்?!

(வீடியோ LINK இணைக்கப்பட்டுள்ளது)

உக்கிரேன் (Ukraine) நாட்டை சேர்ந்த “ஒசான மலய” (Oxana Malaya) என்ற 27 வயது இளம் பெண் எவ்வித மனித நடத்தைகளைகளும் இல்லாமல் முற்றுமுழுதாக நாய்களின் செயல்பாடுகளோடு இருந்து வருவது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகின்ற அதே வேளை சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றாள்.

இவளது சோகக்கதை இதுதான்:-

1983 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்த இப்பெண், குழந்தை பருவத்தில் இயல்பான மனித சுபாவங்களேயே கொண்டிருந்தாள்.

ஆனால் அக்குழந்தையின் விதி பெற்றோர்களால் மாறியது. இவளது குழந்தை பருவத்திலேயே தனது குடிகார பெற்றோரால் கைவிடப்பட்டாள். இங்கு தான் அவ் விபரீதம் அந்த பெண்குழந்தைக்கு தொடங்கியது. பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை - நாய்கள் வளர்க்கும் கொட்டடி ஒன்றில் நாய்களோடு நாய்களாக, நாய்களின் கூட்டிலேயே, 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றாள்.இதனால் மனித நடத்தைகளை முற்றிலும் மறந்து, நாயின் நடாத்தைகளுக்கு முழுதாக மாறிவிட்டாள்.

நாய்களைப்போலவே குரைப்பது, பாய்வது, நடப்பது, உணவு உண்பது மற்றும் நீர் பருகுவது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் நாய்களைப் போலவே செய்யத் தொடங்கினாள். ஆறு வருடங்களுக்கு பின் இப் பெண்ணை இனம்கண்டு தத்தெடுத்த சமூக ஆர்வலர்கள் - விஞ்ஞானிகளின் உதவியுடன் - அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புகளுக்கு மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர் ஆனால் இன்றுவரை அந்த முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, இப்போது 27 வயதாகும் இப் பெண்ணின் நடத்தைகள் சற்றும் மாறாமல் இன்றுவரை நாய்களின் நடத்தைகளுடனேயே வாழ்ந்து வருவது மிகவும் வேதனையான செய்தி.

பார்க்க, Video Link:

http://www.youtube.com/watch?v=qyqbnDjId7g&feature=player_embedded

Friday, 16 July 2010

செல்போன் (ஆண்)டவர்களும் நோய்களும்

செல்போன் (ஆண்)டவர்களால் ஏற்படும் நோய்கள்: மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு ..... இத்தியாதி, இத்தியாதி.

நகரெங்கும் வித விதமாய் வியாபித்து நிற்கும் செல்போன் (ஆண்) டவர்களால் உயிருக்கே கேடு என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக தெரிந்தாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது சமீபத்திய ஆய்வுகள் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த டவர்கள் உமிழும் கதிர் வீச்சு காரணமாக, டவர்களின் அருகாமையில் வசிப்பவர்களுக்கு மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம்..." என்கிறார்.

ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர். செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30 டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார். இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழகத்தில் பல இடங்களில் தம் வீட்டுக்கூரைகளை செல்போன் டவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர் பலர். வாடகையாக பணத்தை வாங்கும் இவர்கள் , மரணத்தையும் மறைமுகமாக வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் நினைத்துப் பார்த்து- விழித்துக் கொள்ளவே மாட்டார்களா?