Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, 18 May 2012

இரட்டைக்குழல் துப்பாக்கி: இந்திய ஊடகங்களும் இந்துத்துவாவும்?!

 இந்திய ஊடகங்கள் பரப்பும் ‘இந்துத்துவ வெளி’

கசாப் - இந்த பெயர் சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இந்தியாவிலுள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்ட பெயர். மும்பையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவன்தான் கசாப்.

சரி, இது அப்படியே இருக்கட்டும். ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரை இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்? மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் பொதுமக்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க வாயப்பு இருக்கிறது? மேலே குறிப்பிட்ட ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரும், இப்பெயரை தொடர்ந்த அந்த சம்பவமும், திரளான மக்களுக்கு சென்றடையாத செய்திகளாகவே இன்றளவும் உள்ளன.

2007, பிப்ரவரி 18ல் தில்லி – லாகூர் இடையிலான சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 68 பேர் உயரிழந்தனர். 68 அப்பாவி பொதுமக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்து செயல்பட்டவை ‘இந்து’ தீவிரவாத அமைப்புகள். அந்த ‘இந்து' தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்தான் சாத்வி பிரக்யா என்பவரும், அவரது கூட்டாளியான சுனில் ஜோஸி என்பவரும். ‘இந்து’ தீவிரவாதம் என்கிற வார்த்தையே நம் மக்களுக்கு புதிய சொல்லாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்து தீவிரவாத அமைப்பு, இந்து தீவிரவாதிகள் போன்ற செய்திகளை நமது ஊடகங்கள் நமக்கு எடுத்துச் சொல்வதில்லை. சொல்ல விரும்புவதுமில்லை. எழுத்து ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் சினிமா என மக்களிடம் நேரடியாக பேசும் எந்த அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பற்றி மக்களுக்கு துளி அளவும் சொன்னதில்லை. அதே நேரத்தில் இசுலாமிய தீவிரவாதம், தீவிரவாதிகள் என்றாலே இசுலாமியர்கள் என்கிற சித்தரிப்பை ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ‘கசாப்’ என்கிற 22 வயது இளைஞனுக்கு மரண தண்டனை ஏன் வழங்க வேண்டும், மரணம் எந்த வகையில் அவனுக்கு அமைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தண்டனை முறைகளை ஆங்கில ஊடகங்கள் அரசுக்கு ஆலோசனைகளாக வழங்கின. 
 
சிறுமி முதல் பெரியவர் வரை ‘கசாப்’ மரண தண்டனை குறித்து கருத்து கேட்டு, இந்தியா முழுவதும் ‘கசாப்’ சாக வேண்டியவன் என்கிற பிரச்சாரத்தை செய்தன. மும்பை தொடர்வண்டி நிலையத்தில் இறந்து போன அப்பாவி மக்கள் மீது தாங்கள் காட்டும் கருணையாக, கசாப் சாகவேண்டும் என்று நினைப்பதே தேசப்பற்றுள்ள இந்தியனின் கடமை என்பது போலவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 
 
இந்து தீவிரவாதி ‘சாத்வி பிரக்யா' வினால் சுட்டு கொல்லப்பட்ட 68 பேரும், இந்தியர்கள்தான். இந்த 68 பேர் இறந்துபோன செய்தியையும், இதற்குக் காரணமான இந்துத்துவ அமைப்புகளைப் பற்றியும், இப்பாதகச் செயலை செய்த சாத்வி பிரக்யாவை தூக்கில் போட வேண்டும் என்றும், எந்த ஊடகமும் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. தங்களை நடுநிலையாளர்களாக சொல்லி கொள்ளும் ஆங்கில ஊடகங்களின் உண்மை முகம் இதுதான்.

ஊடகம் என்பது இந்திய அளவில் பார்ப்பன, பனியாக்களின் தலைமையில் செயல்படும் அமைப்பாகவே இருக்கிறது. இந்திய வல்லாதிக்க கூறுகளான, 'தேசிய இனங்களின்' மீதான ஒடுக்குமுறை, இசுலாமியர்கள் மீதான பொய் சித்தரிப்பு, தரகு தேசிய முதலாளிகளுக்கான ஆதரவு மனநிலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தியல், பிராந்திய உணர்வுகள் கொண்ட மாநில கட்சிகளை சிறுமைப்படுத்துதல் என அனைத்து கருத்தாக்கங்களையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத்தான் இங்குள்ள ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. சமூக நீதிக்கு முரணான இந்திய தேசிய கட்டமைப்பை, இந்துத்துவா உணர்வை, இந்தி மொழி திணிப்பை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பொது புத்தியாக உருவாக்கும் அரசியலைத்தான் இந்த ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, பழனிபாபா படுகொலை என இந்துத்துவா அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை இதுவரை எந்த ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை. 1984-ல் விஷ்வ இந்து பரிஷத் தொடங்கிய பிறகு தான் இந்திய அளவில் மதக்கலவரங்களும், வன்முறை தாக்குதல்களும் பரவலாகின. குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை இந்நாட்டில் துவங்கி வைத்த இந்த்துவ பார்ப்பனிய அமைப்புகளை தீயசக்திகள் என்கிற பிரச்சாரத்தை எந்த ஊடகங்களும் செய்ததில்லை. தீவிரவாத அமைப்புகள் என்றால், தேசிய இன விடுதலை அமைப்புகள் மற்றும் இசுலாமிய மத அமைப்புகள்தான் என்பதை பொதுமக்கள் மத்தியில் ஆழமாகப் பதிவு செய்வதில் முகாமையான பங்கை இந்த ஊடகங்கள் வகிக்கின்றன.

1995க்குப் பிறகு தமிழகத்தில் இசுலாமிய அமைப்புகளில் சில தலைவர்கள் தங்களது மத இறுக்கத்தை விடுத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து சமூகநீதிக்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். பார்ப்பனியத்திற்கு எதிராக, பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை ஒருங்கிணைத்து குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் பழனிபாபா. அமெரிக்காவில் உள்ள Philadelphia வில் 25 ஆண்டுகளுக்கு முன்னரே, முதலாளித்துவத்தின் கோரமுகத்தையும், நுகர்வு கலாச்சாரத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளையும் கண்டித்து பேசிய ஆற்றல்மிகு பேச்சாளர் பழனிபாபா. 1997ல் இந்து தீவிரவாதி ஒருவனால் வெட்டிக்கொல்லப்பட்டார் பழனிபாபா. இந்துத்துவத்திற்கு எதிராக இசுலாமிய அடிப்படைவாத சக்தியாக இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உதவியுடன் சமூக நீதிக்காக களம் கண்டவர் பழனிபாபா. அதன் காரணமாகவே பார்ப்பனியத்திற்கு பலியானார்.

‘சாத்வி பிரக்யா’ என்கிற இந்து தீவிரவாதியை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் இந்திய தேசியகட்டமைப்பு எப்படி பாதுகாத்து வருகிறதோ, அதேபோல் பழனிபாபா போன்ற இந்துவத்திற்கு எதிரான ஆளுமைகளையும் மறைத்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் தலித் மாணவர்களுக்கும், சாதி இந்து மாணவர்களுக்கும் இடையே நடந்த வன்முறையை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை ஒளிபரப்பின. ஆண்டாண்டு காலமாக தலித்களின் மீதான வன்கொடுமைகளை பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்காத ஊடகங்கள் தலித் கையில் ஆயுதமேந்தியவுடன் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஈழவிடுதலைக்காக உயிர் துறந்த முத்துக்குமரன் முதல் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் வரை தமிழின உணர்வாளர்களின் போராட்டங்களையும், அர்ப்பணிப்பு வாழ்வையும் திட்டமிட்டு மறைத்து வருகிறது இந்திய வல்லாதிக்கத்திற்கு துணை நிற்கும் இந்த ஊடகங்கள். ராகுல்காந்தி போன்ற கத்துக்குட்டி அரசியல்வாதி தலித்கள் வீட்டில் தங்கினாரென்றும், அவர்களை தொட்டுப் பேசினார் என்றும் கற்பனைவாத சோசலிச கருத்துக்களைப் பரப்பும் இந்த ஊடகங்கள் ஈழத்திற்குச் சென்று சிங்கள ராணுவத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட தோழர் அங்கையர்கண்ணியைப் பற்றியும், சிங்களக் காடையர்களால் வன்தீண்டலுக்கு ஆளான தோழர் திருமலையைப் பற்றியும் இன்று வரை ஏன் பேசவில்லை?

பாலியில் வன்முறை, குழந்தைகளை கடத்தி கொலைச்செய்தல் போன்ற சம்பவங்களை மையமாக வைத்து ஊடகங்கள் தங்கள் கவலையை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகின்றன. சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் அவை. இருப்பினும், கோவையில் மார்வாடிக் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு இறந்த பிறகே, இந்திய தேசிய கட்டமைப்பும் ஊடகங்களும் இப்பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டன. சேரிக் குழந்தைகள் பலபேர் அரசு மருத்துவமனையில் கடத்தப்படுவதும், அக்குழந்தைகள் பிச்சைக்காரர்களாக்கப்படுவதும், சாதி இந்துக்களால் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவதும், நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும், ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சமூக அவலங்கள். அதிகார வர்க்கத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டும்தான் ஊடகங்களும், இந்திய அரசும் அப்பிரச்சனையில் அக்கறை கொள்கின்றன.

தமிழக அமைச்சர் ஒருவருக்கு டெல்லியில் ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், இந்தியாவின் அனைத்து பத்திரிகைகளிலும் அது கேலிச்சித்திரமாகிறது. ஆனால், வெளியுறவுதுறை அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணா ஐ.நா.பாதுகாப்பு அவை உரையின்போது, வேறு நாட்டு உரையை வாசித்தால் அது வெறும் செய்தியாக மட்டுமே வருகிறது. இதே தவறை தமிழ்நாட்டைச் சேர்ந்த மந்திரி செய்திருந்தால் சும்மா விட்டிருக்குமா இந்த ஊடகங்கள்? 
 
மாநில உரிமைகளுக்கான போராட்டத்தை ஒடுக்குதல், தமிழ்தேசியப் போராட்டத்தை பகடி செய்தல், பழங்குடிகளின் வரலாற்றை மறைத்தல், சிறுபான்மை மக்களை அந்நியப்படுத்துதல் உள்ளிட்ட இந்திய வல்லாதிக்க கனவுகளை சராசரி குடிமகனின் பொதுப் புத்தியாக கொண்டு வருவதில் இந்திய ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ‘சாத்வி பிரக்யா’ போன்ற இந்து தீவிரவாதிகளை திட்டமிட்டே மறைத்து, பாதுகாத்து வருகிறது இந்திய தேசிய கட்டமைப்பு. இதன் இத்துத்துவ, ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து, தமிழ்தேசிய இன அடையாளத்தையும், தமிழ்தேசிய கட்டமைப்பையும் வளர்த்தெடுக்க வேண்டிய பெரும்பணி நமக்கு இருக்கிறது.
 

Saturday, 31 March 2012

மாட்டுக்கறி அரசியல்! (அப்டி போடு!!)




d.n.jhaதிவிஜேந்திர நாராயண ஜா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் வரலாற்றை ஆராய்ந்து வரும் வரலாற்றறிஞர்; இந்துத்துவத் தொன்மங்கள் பலவற்றைத் தக்க சான்றுகளுடன் தவறென நிறுவி வருபவர்; இந்துத்துவாவின் பரப்புரைகளுள் பல தவறானவை என்பதை இந்திய இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுத்துக் கூறி வருபவர். “புனிதப் பசுவின் புராணம்” (‘The myth of the holy cow’) என்னும் தம்முடைய நூலில் இந்திய உணவு முறைகளில் மாட்டிறைச்சி இருப்பதை எடுத்துக்காட்டியிருப்பவர். பழைய இந்தியாவின் பண்பாடு பற்றியும் இடைக்கால இந்தியாவின் நிலப்பிரபுத்துவ அமைப்புப் பற்றியும் தம்முடைய வழிகாட்டியும் வரலாற்றறிஞருமாகிய ஆர். எசு.சருமாவைப் போலவே நிறைய பணியாற்றியிருப்பவர்.

மத்தியப் பிரதேச அரசு பசு வதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. அரசின் இம்முடிவு அறிஞர்கள் பலரால் “கொடுமையானது” என எதிர்த்து உரைக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ‘பசுவின் புனிதத்தன்மை’ பற்றிய தொன்மங்கள் பற்றியும் அத்தொன்மங்களைச் ‘சங்கப் பரிவாரங்கள்’ நாட்டைத் துண்டாட எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும் தி.நா. ஜாவிடம் நேர்கண்டோம். இனி அவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.
இந்தியத் துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி தின்பதை இசுலாமியர்கள் தாம் அறிமுகப்படுத்தினார்கள் என்னும் பரவலான நம்பிக்கையைப் “புனிதப் பசுவின் புராணம்” என்னும் உங்களுடைய புத்தகம் மறுக்கிறது. அம்மறுப்பிற்கு என்னென்ன தரவுகளைச் சான்றுகளாக வைத்திருக்கிறீர்கள்?
‘இசுலாமியர்கள் மாட்டிறைச்சியைத் தின்பவர்கள்; எனவே அவர்கள் தாம் பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்பதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்’ என்று இங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக மக்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன. இக்கருத்தியலை இந்திய மதங்கள் சார்ந்த நூல்களில் இருந்து சரியான தரவுகளைக் காட்டுவதன் மூலம் மிக எளிதாக உடைத்து விடலாம். அந்நூல்கள் எல்லாம் இந்தியாவில் பழங்காலம் தொட்டே மாட்டிறைச்சி தின்னப்படுவதைக் கூறுகின்றன. இசுலாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இங்கு மாட்டிறைச்சி தின்னும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதை பிராமணிய, புத்த, சமண நூல்களில் இருந்து சான்றுகள் காட்டி நான் நிறுவியிருக்கிறேன்.
பழங்காலத்திலேயே இந்தியாவில் மாட்டிறைச்சி தின்றார்கள் என்பதற்கும் பசுக்களைப் பலியிட்டார்கள் என்பதற்கும் சில எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியுமா?
விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய ‘அக்கினித் தேயம்’ என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது.
பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய ‘அசுவமேத யாகத்’தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும்; அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும்.
‘இராஜசூய யாகம்’, ‘வாஜபேய யாகம்’ ஆகிய பலியிடுதல் நிகழ்வுகளைப் போல முதன்மையான ஒன்றாகக் கருதப்படும் ‘கொசவ யாகத்’தில் பசு மருட்டர்களுக்குப் பலியிடப்பட்டது. பசு மட்டுமன்று! கன்றுகள் போன்று எல்லா விலங்குகளும் பல யாகங்களில் பலியிடப்பட்டிருக்கின்றன.
வேதக் கருத்துகளிலும் தருமசாத்திரங்களிலும் நுகர்வுக்காகப் பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. ‘பசு விருப்பமான உணவு’ என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர், பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் கிடைத்திருக்கும் சான்றுகளுள் சொற்பந் தான்! இவற்றைப் போல ஏராளமான எழுத்துச் சான்றுகளைக் காட்ட முடியும்.
பழங்காலச் சான்றுகளை நிறைய காட்டுகிறீர்கள். பசுவை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது பற்றி இடைக்கால இந்திய இலக்கியங்களிலோ மூலங்களிலோ என்னென்ன இருக்கின்றன?
இடைக்கால மூலங்களிலும் ஏராளமான தரவுகள் இருக்கின்றன. ஆசாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுஸ்மிருதி கூறுகிறது. படித்த பார்ப்பன‌ரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள் தாம்! இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பன‌ர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனும்க்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று சொல்லப்படுகிறது. மதம் சார்ந்த எழுத்துகள் மட்டுமல்ல! மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
பசுக்கள் புனிதமானவை என்னும் தொன்மக்கதை எப்படி இங்குள்ள இந்துகளின் மனங்களில் புகுத்தப்பட்டது? கொல்லப்பட்டு தின்னப்பட்டு வந்த பசுக்கள் எப்படிப் புனிதமானவை என்று ஆக்கப்பட்டன? ‘இந்துத்துவா’வின் புனிதக் குறியீடாகப் பசு மாறியது எவ்வாறு?
வேதகாலப் பசுக்கள் புனிதமானவை என்று அறிஞர்கள் சிலர் சொல்லி வந்திருக்கிறார்கள். ‘அக்ஞா’ என்னும் சொல்லுக்குக் ‘கொல்லத்தகாதவை’ என்னும் பொருளை அதர்வண வேதம் கூறுகிறது. வேத காலப் பசு புனிதமானது என்பது எப்போது என்றால் அப்பசு பார்ப்பன‌ருக்குப் பலிக்குரிய தொகையாகக் (‘தட்சணையாக’க்) கொடுக்கப்படும் போது மட்டும் தான்! புத்தமும் சமணமும் விலங்கு வதையை எதிர்க்கின்றன. அவை கூடப் பசுவைப் ‘புனிதமான விலங்கு’ எனச் சொல்லவில்லை.
பசு புனிதமானது என்னும் கருத்தியல் பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றுதான்! இந்தியச் சமூகம் நிலப்பிரபுத்துவ முறைக்கு மெல்ல மாறி வரும் சூழலில் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தான், சட்டத்தை உருவாக்கியவர்கள் மாட்டிறைச்சி தின்பதை வரவேற்காமல் நிறுத்தத் தொடங்கினார்கள். கலியுகக் காலமாக இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் கூறப்படும் இக்காலத்தை ஒட்டித்தான் சமூக நடைமுறைகளும் சடங்குகளும் ஏராளமான மாற்றங்களைக் கண்டன. முன் நடந்துகொண்டிருந்த நடைமுறைகள் பலவற்றை ‘கலிவர்ஞா’ என்று கொண்டு வரப்பட்ட நடைமுறை மாற்றியது. அப்படித்தான் பசுவைக் கொல்வதும் தவறெனப் பார்ப்பன‌ எழுத்துகள் பதியத் தொடங்கின.
பசுக்களைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியைத் தின்பதும் தீண்டப்படாத சாதிகளிடம் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால் தரும சாத்திர எழுத்துகள் இப்படித் தின்பதைச் சிறிய குற்றமாகக் கூடக் கூறவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி தின்றார். மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆசாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சித் தேநீர் குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார்.
இன்றும் கேரளத்தில் எழுபத்திரண்டு சாதிகள் (இவற்றுள் எல்லாச் சாதிகளும் தீண்டப்படாத சாதிகள் அல்ல) ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் மாட்டிறைச்சியைத் தான் தின்கிறார்கள். அச்சாதிகளை எல்லாம் இந்துத்துவா சக்திகள் கடிந்து கொள்ளவில்லை.
வன்மையில்லா முறையை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியமை, புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி, வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. வேளாண்மைச் சமூகத்தில் பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தின. பசுக்களைத் தானமாகப் பெற்ற பார்ப்பன‌ர்கள் அதனால் தான் அவற்றைக் கொல்லவில்லை.
பசுவதை என்பது இந்தியாவில் எப்போது அரசியல் கருவி ஆனது? இதற்குப் பின்னால் ஏதாவது வரலாற்றுப் பின்னணி இருக்கிறதா? பசுக்களின் மேல் “உருவாக்கப்பட்ட புனிதத்தன்மை”யை அரசியல் கருவியாகப் பயன்படுத்தியதற்குச் சான்றுகள் தர முடியுமா?
பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களால் தாம் பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. சமணர்களையும் பார்ப்பன‌ர்களையும் மதிக்கும் பொருட்டு பசுக்களைக் கொல்வதற்கு முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர்.  ‘நாம் இந்துக்கள்; இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பன‌ர்களை ஒடுக்குவதோ கூடாது’ என்று பசுக்களையும் பார்ப்பன‌ர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.
‘சிக் குகா’ அல்லது ‘நாம்தாரி’ என்னும் பெயரில் 1870களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட ‘இந்து பசுப் பாதுகாப்புப் படை’ தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘முதல் கோ ரக்கினி சபை’யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத் தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. அதன் பின் மாட்டுக்கறி தின்னும் இசுலாமியர்களைக் கேள்விக்குள்ளாக்கி 1880களிலும் 1890களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.
இவ்வாறு பசுவதை என்பது கடினமானதாக ஆக்கப்பட்டாலும் 1888ஆம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், ‘பசு புனிதமான பொருள் அன்று’ என்று கொடுத்த தீர்ப்பு அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது. ஆனால் அதன்பின் இந்து – இசுலாமியர் கலவரங்கள் பலவற்றில் பசுவதை என்பது மையப்பொருளானது. 1893ஆம் ஆண்டு ஆசம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.  1912-13இல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917இல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது.
விடுதலை இந்தியா துன்பியல் நிகழ்வுகள் பலவற்றைக் கண்டது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் பாராளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது. பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் ‘பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன‌ எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை’ என்பதையும் ‘காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது’ என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
மாட்டிறைச்சி தின்பது வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில் அதிகமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
தென்னிந்தியாவின் சில இடங்களில் மாட்டிறைச்சி தின்பது என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. மலை வாழ் மக்கள், தலித்துகள், இசுலாமியர்கள் ஆகியோர் மாட்டிறைச்சி தின்கிறார்கள். வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. எடுத்துக்காட்டாகத் தெற்குப் பீகாரில் உள்ள மலைவாழ் மக்கள் மாட்டிறைச்சி தின்பதில்லை.
மலைவாழ்மக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரை விடுத்துப் பார்த்தாலும் இந்தியாவில் இப்போது இந்துக்களுள் நாற்பது விழுக்காட்டுப் பேர் மாட்டிறைச்சி தின்பதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியா முழுமைக்கும் உள்ள தலித்துகள் மாட்டிறைச்சி தின்கிறார்கள். பொருளியல் அடிப்படையில் அது தான் விலை குறைந்தது. ஆனால் மத்தியப் பிரதேச அரசு பசுவைக் கொல்வதற்கு மட்டுமல்லாமல் தின்பதற்கும் தடை விதித்திருக்கிறது. பலர் இச்சட்டத்தைக் கண்டிருத்திருக்கிறார்கள். நீங்கள் இச்சட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சட்டப்படி தண்டனை உண்டு என்றால் இந்தியர் எவரும் கால்நடைகளைக் கொல்ல மாட்டார்கள். விலங்குகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் தான்! ஆனால் அவற்றுள் பசுவிற்கு மட்டும் ஏன் சிறப்புத் தகுதி என்பது தான் கேள்வியே! பசுக்களைக் காப்பது தான் சங்கப் பரிவாரங்களின் வேலை என்றால், போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களை அவர்கள் காக்கவில்லையே ஏன்? பல இடங்களில் பசுக்கள் குப்பைத் தொட்டிகளைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்றனவே! அவற்றை அவர்கள் கண்டுகொள்ளவில்லையே ஏன்? பாரதிய ஜனதா ஆண்ட மாநிலங்களில் எல்லாம் இந்நிலை மாற்றப்படவே இல்லையே ஏன்?
வயதான, நோய்வாய்ப்பட்ட, உணவுக்கு வழியில்லாத பசுக்களின் இறைச்சியில் இருந்து தான் ஏழைகள் புரதச் சத்தைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பசுக்களைக் கொல்லக்கூடாது, தின்னக்கூடாது என்னும் சட்டங்கள் எல்லாம் அவர்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தான் நான் பார்க்கிறேன். ஜன சங்கத்தின் (இன்றைய பாரதிய ஜனதா) கொள்கை வகுப்பாளராக இருந்த கே.ஆர். மல்கர்னி இயற்கையாக இறந்த பசுக்களின் இறைச்சியைத் தின்னலாம் என்று சொன்னதைச் சங்கப் பரிவாரங்கள் ஏன் மறந்து விட்டன?
பா.ஜ. ஆளும் மாநிலங்களில் இக்கருத்து தீவிரமாக வலியுறுத்தப்படுகிறதே? இப்படிப் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டுவருவது இந்தியாவில் எத்தகைய நிலையை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்? 
சங்கப் பரிவாரங்கள் ஏற்கெனவே அரசியலில் மதத்தைக் கலந்து கொண்டிருக்கின்றன. பசுவதை தடுப்புச் சட்டம் என்பது ஏற்கெனவே எரியும் மதவாத அரசியலில் எண்ணெய் ஊற்றும் செயல் தான்! வேறொன்றுமில்லை.

நன்றி: பிரண்ட்லைன் 2012 பிப்ரவரி 24ஆம் இதழ்
நேர்காணல்: அஜய் ஆசிர்வாத மகாபிரஸ்தா
மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி