செல்போன் (ஆண்)டவர்களால் ஏற்படும் நோய்கள்: மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு ..... இத்தியாதி, இத்தியாதி.
நகரெங்கும் வித விதமாய் வியாபித்து நிற்கும் செல்போன் (ஆண்) டவர்களால் உயிருக்கே கேடு என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக தெரிந்தாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது சமீபத்திய ஆய்வுகள் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த டவர்கள் உமிழும் கதிர் வீச்சு காரணமாக, டவர்களின் அருகாமையில் வசிப்பவர்களுக்கு மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.
ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம்..." என்கிறார்.
ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர். செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30 டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார். இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்.
தமிழகத்தில் பல இடங்களில் தம் வீட்டுக்கூரைகளை செல்போன் டவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர் பலர். வாடகையாக பணத்தை வாங்கும் இவர்கள் , மரணத்தையும் மறைமுகமாக வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் நினைத்துப் பார்த்து- விழித்துக் கொள்ளவே மாட்டார்களா?
No comments:
Post a Comment