Tuesday, 20 July 2010

ஆசிய செஸ் போட்டி: சாம்பியன், நெய்வேலி - ஸ்ரீஜா சேஷாத்ரி

ஆசிய செஸ்: நெய்வேலி ஸ்ரீஜா சேஷாத்ரி சாம்பியன்



சீனாவில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய செஸ் போட்டியில் நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளி மாணவி ஸ்ரீஜா சேஷாத்ரி தங்கம் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆசிய இளையோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் இம்மாதம் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 27 நாடுகளில் இருந்து 426 பேர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 52 பேர் பங்ககேற்றனர். அவர்களில் 15 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் 14 நாடுகளில் இருந்து 27 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி ஸ்ரீஜா சேஷாத்ரி, 7 புள்ளிகள் பெற்று ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
இப்போட்டிகளில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஆசிய இளையோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற போது, 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீஜா சேஷாத்ரி சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கெனவே துருக்கியில் நடந்த உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். அதில் அவர் 20-வது இடத்தை பெற்றார். சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் செஸ் போட்டியில் 3-வது இடத்தை பிடித்தார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரீஸில் நடைபெறவுள்ள உலக இளையோருக்கான செஸ் போட்டியிலும் ஸ்ரீஜா சேஷாத்ரி பங்கேற்கவுள்ளார்.

No comments: