Thursday, 9 September 2010

யானைகளை மிரட்டும் கட்டெறும்புகள்

மரம், நெற்பயிர்களை அண்டவிடாமல் யானைகளை மிரட்டும் கட்டெறும்புகள்

அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் டோட்பால்மர் தலைமையில் இயங்கும் விஞ்ஞானிகள் குழு கென்யாவில் ஓர் ஆய்வு நடத்தியது.

ஒருவகை மரத்தின் கிளைகளை யானைகள் மேய்ந்துவிடாமல் கட்டெறும்புகள் தடுக்கின்றன என்று இந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. வன விலங்குகளில் மிகவும் பெரியது யானை, மிகவும் சிறியது கட்டெறும்பு, அப்படியிருந்தும் எறும்புக்கு யானை பயப்படுகிறது. அதற்கு குழு ஒற்றுமையே காரணம்.

யானை மரக்கிளைகளை ஒடிக்க முயலும் போது அந்த மரத்தில் இருக்கும் கட்டெறும்புகள் கூட்டமாக யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடிக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் வேதனையில் துடிக்கும் யானைகள் மீண்டும் அந்த மரத்தின் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை.

கட்டெறும்புகளின் பயம் என்பது குழு ஒற்றுமைதான். யானை உருவத்தில் பெரியதாக இருந்தாலும் தனியாக நின்றுதான் கட்டெறும்பு கூட்டத்தின் சவாலை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் துதிக்கையில் புகும் கட்டெறும்பு கூட்டத்துடன் மோதும் போது யானை தோற்று விடுகிறது.

இதனால் கென்யாவில் அகோரப்பசி வந்தாலும் கட்டெறும்பு கூட்டங்கள் இருக்கும் மரங்களை யானைகள் அண்டவே அண்டாது. அந்த அளவுக்கு கட்டெறும்புகள் யானைகளை மிரட்டி வைத்துள்ளன. சில நேரங்களில் கட்டெறும்பு கடித்து யானை இறந்து விடுவதும் உண்டாம்.

ஆப்பிரிக்காவிலுள்ள காட்டு மரங்கள், வயலில் விளையும், நெற்பயிர்களை யானைகள் தின்று நாசமாக்கி விடுகின்றன. எனவே யானைகளிடம் இருந்து அவற்றை காக்க மரங்கள் மற்றும் நெற்பயிர்களுக்குள் கென்யா கட்டெறும்பை விடலாம் என விஞ்ஞானிகள் குழு யோசனை தெரிவித்துள்ளது

No comments: