Monday, 19 March 2012

மின்சாரச் சிக்கலும் தமிழக அரசின் தனியார்துறை பாசமும்




 “....தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு களையப்பட்டு, மின்வெட்டு அறவே ஒழிக்கப்படும். தமிழகம் மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழும்...”

இது கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, தற்போது முதல்வர் பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா சொன்னது. மக்களும் செயாவின் பசப்பு வார்த்தைகளை நம்பியும், கடந்த ஆட்சியின் மீது கொண்டிருந்த பல்வேறு வெறுப்புகளை வெளிக்கொணரும் வகையிலும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.

ஆனால் செயலலிதா அரியணையேறிய ஓரிரு நாட்களிலேயே, “வேதாளம் முருங்கை மரம்” ஏறிய கதையாக சமச்சீர்க் கல்வி எதிர்ப்பு, பரமக்குடியில் ஆறு தமிழர் படுகொலை, விலை உயர்வு, தொடர் மின்வெட்டு என்று மக்கள் விரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் வரலாறு அனைவரும் அறிந்ததே.

செயலலிதா ஆட்சிக்கட்டிலேறிய ஆறே மாதத்தில், மின்சாரம் எப்போது துண்டிக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சருக்கே தெரியாத அளவிற்கு, தற்போது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. மொத்த மின்வெட்டு எட்டுமணி நேரமா, பத்துமணி நேரமா? - என்று மின்துறை அமைச்சரே குழம்பிப்போகும் அளவுக்கு நிலைமை மோசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் இருள் சூழ்ந்து கிடக்கக்கூடிய நிலை ஏற்பட்டதற்கான காரணம் என்ன? அரசுக்கு இப்போது ஏற்பட்டுள்ள திடீர் மின் பற்றாக்குறை இயற்கையானதுதானா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது, 1910-ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் வந்தது.

'விடுதலை இந்தியாவின்' முதல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற புரட்சியாளர் அம்பேத்கர், 'மின் விநியோகச் சட்டம்-1948' என்றொரு சட்டத்தை நிறைவேற்றி, அதை அறிமுகம் செய்து பேசும்போது, 'எதிர்கால இந்தியா மின் வளர்ச்சியைச் சார்ந்தது. மின்சாரம் என்பது எல்லா தொழிலுக்கும் தாய்த் தொழில் போன்றது. ஆகவே இது தனியாரிடம் இருக்கக்கூடாது. 70 விழுக்காடு கிராமங்களை உள்ளடக்கிய விவசாய நாடு இந்தியா. எனவே கிராமங்களுக்கு மலிவான விலையில் மின்சாரத்தை வழங்கும் வகையில் மின்சாரத்தை விநியோகிக்கும் பொறுப்பை மத்திய-மாநில அரசுகள் ஏற்க வேண்டும்' என்று மின்சாரத்தின் அவசியத்தின் முன்னுரிமையை வலியுறுத்தினார்.

மேலும், இது மாநில அரசின் ஒரு துறையாக முடங்கி விடாமல் மின் வாரியங்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் வகையில் சட்டத்தை வடிவமைத்து, மின்சாரப் பயன்பாட்டை அனைவரும் எட்டுவதற்கு வழிவகை செய்தார். 

தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் 'சேவை' என்கிற நிலையில்தான் அவ்வாரியம் தொடங்கப்பட்டது அதன்படியே செயல்பட்டும் வந்தது. மக்களின் பேராதரவையும் பெற்று விளங்கியது.

1975லேயே 95 விழுக்காடு கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கி, மின் உற்பத்தியில் முன்னணியில் விளங்கியது தமிழ்நாடு மின்சார வாரியம்.

அதன்பிறகுதான், மின்வாரியங்கள் மூலதனத்தில் 3 விழுக்காடு இலாபமீட்ட வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில், 1979-ஆம் ஆண்டு ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவரை ‘சேவை’ என்கிற நிலையில் இருந்த மின்சார வாரியம், அப்போதுதான் ‘இலாபம்’ என்கிற ஒரு கருத்தை முன்வைக்கிறது.

'புதிய பொருளாதாரக் கொள்கை' உருவானபோது, மின்சாரத்தின் ‘கழுத்து’ இறுகத் தொடங்கியது. உலகமயமாக்கலின் விளைவால் வேரூன்றிய பன்னாட்டு நிறுவனங்களின் இலாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்குச் சாதகமாக, 'ஒழுங்குமுறைச் சட்டம் - 1998' என்கிற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது இந்திய அரசு. அதுவரை மின்சார வாரியத்தின் கையில் இருந்த மின் கட்டண நிர்ணயம், உரிமம் வழங்கும் அதிகாரம் (லைசென்ஸ்) உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் தட்டிப் பறித்துக் கொண்டது ஒழுங்குமுறை ஆணையம்.

இவ்வொழுங்குமுறை ஆணையம் திமுக அரசால் உருவாக்கப்பட்டது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்நிய பெருமுதலாளிகளின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் கடந்த 2003-ஆம் ஆண்டு, 'மின்சாரச் சட்டம் 2003' என்கிற ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அச்சட்டமானது. 'தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் முன் அனுமதி பெறத் தேவையுமில்லை. மின்சாரம் வணிக ரீதியாக விற்கப்படவேண்டும்' என்பன போன்ற பல புள்ளிகளுடன் முழுக்க முழுக்க தனியார் துறையினரின் ஆதிக்கத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டது.

1998-இல் ஒழுங்குமுறை ஆணையம் 'தலையெடுத்த' பிறகு இருந்த இலாபமும் சற்றே குறைந்து நட்டத்தை அடையத் தொடங்கியது மின்சார வாரியம். 

எடுத்துக்காட்டாக: 
1998-99இல் 334.93 கோடி இலாபம்; 
1999-2000இல் 365.05 கோடி இலாபம்; 
2000-2001இல் 387.83 கோடி இலாபம்; 
2001-2002-இல் 4851.9 கோடி நட்டம் 
(நன்றி. மின்சாரக் கட்டணம்-தனியார் துறையின் வேட்டைக்காடு, பொறியாளர் சா.காந்தி) 

இந்த புள்ளி விபரத்தை நன்கு கூர்ந்து கவனித்தீர்களேயானால் ஒழுங்குமுறை ஆணையத்தின் இலட்சணம் விளங்கும். அவ்வாணையம் பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் அடைந்த இலாபம் 1087.81 கோடி; ஆனால் 2001-2002-இல் அடைந்த நட்டம் 4851.9 கோடி. என்னே ஒழுங்குமுறை ஆணையத்தின் சாதனை!

இவ்வாறாக 1957-தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து 2003-வரை 46 ஆண்டுகள் வாரியங்களால் அரசு அடைந்த நட்டம் ரூ.41400 கோடி (இக்கால கட்டத்தில் தான் மக்களுக்கு சேவை அடிப்படையில் மின்னிணைப்பு வழங்கப்பட்டது).  

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அடைந்த நட்டம் ரூ.1,13,089 கோடி.

எதிர்வரும் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நட்டம் ரூ.53,298 கோடி. இந்த நட்டத்தையெல்லாம் சரிகட்டப்போவது வேறு யாருமில்லை; பொது மக்களாகிய நாம் தான். அதற்காகத்தான் முடிவை முன்கூட்டியே எடுத்துவிட்டு, மக்களிடம் 'கருத்துக்கேட்பு' என்னும் நாடகத்தை அரங்கேற்றுகிறது அரசு.

ஒழுங்குமுறை ஆணையம் தொடக்கத்திலிருந்து பெரும் நட்டத்தில் இயங்கி வந்தாலும் ஓரளவு மின்சாரம் வினியோகம் இருந்ததே, இப்போது என்ன திடீர் தட்டுப்பாடு என்கிற புரியாத புதிருக்கான விடையை இனி ஆராய்வோம்.

பொதுவாக மின்சாரக் கொள்முதல் ஐந்து பிரிவுகளிலிருந்து பெறப்படுவதாக கூறப்படுகிறது. அவை:
1. மாநில அரசின் சொந்த மின் உற்பத்தி 
2. நடுவண் தொகுப்பிலிருந்து தமிழகத்தின் பங்கு 
3. மரபுசாரா மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் மின்சாரம் 
4. ஒப்பந்தம் செய்துகொண்ட தனியாரிடமிருந்து வாங்கப்படும் மின்சாரம் 
5. சந்தை விலையில் கொள்முதல்.

மேற்கண்ட ஐந்து பிரிவுகளில் இருந்தும் மின்சாரம் தங்குதடையின்றி மின்சாரம் பெறப்பட்டு வந்தது. ஆனால் அதே நேரத்தில், மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தக் கூடுதல் மின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடுதலாக மின் உற்பத்தி நிலையங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால் உலகமயமாக்களின் விளைவால் வந்த புதிய பொருளாதாரக் கொள்கை அதற்கு தடைபோட்டது.

1994-க்குப் பிறகு மின்வாரியங்கள் தங்கள் கூடுதல் தேவைக்காகப் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கவில்லை.

அக்கால கட்டத்தில், புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க CEA (Central Electricity Authority)யின் அனுமதி பெற்றாக வேண்டும். ஆனால் CEA, மின் வாரியங்களின் எல்லா நகர்வுகளுக்கும் முட்டுக்கட்டைபோட்டது. இவ்வாறு நடுவணரசு, தனியார் முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களின் எடுபிடிகளாக விளங்கியதன் விளைவாக தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தடையின்றிச் செயல்படத் தொடங்கின.

தமிழகத்தின் முதல் தனியார் மின் உற்பத்தி நிலையமாக, சென்னை பேசின் பாலம், வாரியத்தின் நிலத்தில் அமைந்துள்ள ஜி.எம்.ஆர். செயல்படத் தொடங்கியது. இந்நிறுவனம் கடந்த 1999-சனவரி முதல் உற்பத்தியைத் தொடங்கியது. இது 196 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

தொடர்ந்து பிள்ளை பெருமாள் நல்லூர் நிலையம், சனவரி 2001-இல் சாமல்பட்டி, (10.566 மெகாவாட்) ஏப்ரல் 2001-இல் மதுரை பவர் (106 மெ.வா), டிசம்பர் 2002-இல் நெய்வேலி S.T.C MS (250 மெ.வா) போன்ற நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கின. இதுபோக, Abam (113 மெ.வா), Penna (52.8 மெ.வா) போன்ற தனியார் மின் நிலையங்களும் செயல்படத் தொடங்கின. மேற்கண்ட நிறுவனங்கள் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டன. அதன்படி, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், வாரியத்திற்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய வேண்டும்.

வாரியம் தன் மின் தேவை அதிகரிக்கும்போது, வெளிச் சந்தையில் மின்சாரத்தை வாங்கத் தொடங்கியது.  இன்று மின்சார வாரியம் தன் சொந்த உற்பத்தியான 32 விழுக்காடு போக, ஏனைய 88 விழுக்காடு மின்சாரத்திற்கு கொள்முதலை நம்பித்தான் வினியோகம் செய்கிறது.

மேலே கண்ட தனியார் நிறுவனங்களிடம் வாரியம் செய்து கொண்டஒப்பந்தத்தின்படி, வாரியம் 1 யூனிட் மின்சாரம் கூட வாங்கவில்லை என்றாலும், நிலைக்கட்டணமாக ஆண்டுக்கு 1006 கோடியை அவர்களுக்குக் கொடுத்தாக வேண்டும். இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், மேலே முதலில் கண்ட 5 மின் நிலையங்களும் வாரியத்திடமிருந்து ரூ.10,060 கோடியை மூலதனக் கட்டணமாக பெற்றே நிலையத்தைத் தொடங்கினார்கள் என்பதுதான்.

பல்வேறு நிலைகளில் ஒழுங்குமுறை ஆணையம், தனியார் மின்நிலையங்களின் பகல் கொள்ளைக்குத் துணை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில், தனியார் மின் நிலையங்களுக்கும், வாரியத்துக்குமிடையே நடந்த பல்வேறு வழக்குகளில், தனியார் மின்நிலையங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளையே வழங்கியுள்ளது ஒழுங்குமுறை ஆணையம். இந்த வழக்குகளில் பெரும்பாலானவை ரூ.100 கோடிக்கு மேல் வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக ஜி.எம்.ஆர். வாசவிக்கு வழங்கப்பட்ட ரூ.484 கோடி தீர்ப்பு. பி.பி. என் மின் நிறுவனம் கேட்ட ரூ.189 கோடி வழக்கில் ரூ.1050 கோடி இழப்பீடு வழங்கச் சொல்லி தீர்ப்பு வழங்கியது ஒழுங்குமுறை ஆணையம். ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தனியார்மீது என்னே கருணை?!

இவ்வாறாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வீழ்ச்சிக்கு தனியார் மின் நிறுவனங்களுடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தமே காரணம் எனலாம்.

தற்போது தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் மின்வெட்டு சிக்கல் பற்றி பொதுமக்களால் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் வாரி இரைத்து பெறப்படும் மின்சாரம் எங்கே? என்ற கேள்வி எழுவது இயல்பே!

பொதுவாக, நடுவணரசின் அனல்மின் நிலையம் ஆனாலும் சரி, அணுமின் நிலையமானாலும் சரி, எந்த மாநில எல்லையில் அமைந்துள்ளதோ, அம்மாநிலத்திற்கு அம்மின் நிலையத்தினால் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 30 விழுக்காடு மட்டும் தான் வழங்கப்படும். மீதியுள்ள மின்சாரம் நடுவண் மின்தொகுப்பிற்கும், அண்டை மாநிலங்களுக்கும் வழங்கப்படும்.

குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 30%, ஆந்திராவிற்கு 19%, கர்நாடகாவிற்கு 14%, கேரளாவிற்கு 10%, புதுச்சேரிக்கு 5%, என்.எல்.சி. நிறுவனத்திற்கு 7%, நடுவண் மின்தொகுப்பிற்கு 15% என பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நடுவணரசின் சதியால் தன் மண்ணில் உற்பத்தியாகும் மின்சாரத்தையெல்லாம் அண்டை மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு, இருளில் தவித்துக்கொண்டிருக்கிறான் சொரணையற்ற தமிழன்.

நம் தாய்த்தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவணரசால், பன்னாட்டு - வடநாட்டு தனியார்த் தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில், தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதால் தான் ரூ.42 ஆயிரம் கோடி வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. (நன்றி: தென் ஆசியச் செய்தி - பிப்ரவரி 2012) 

நம்மிடமிருந்து மின்சாரத்தைப் பெறும் அண்டை மாநிலங்களில் மின் தடை அமுலில் இல்லை. ஆனால் நாமோ இருந்த மின்சாரத்தை இழந்துவிட்டு இருளில் அல்லல்படுகிறோம்.

மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க அரசு வழிவகை செய்திருக்கிறது. பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்கள் நம்முடைய மின்சாரத்தில் குளிர்சாதன அறைகளில் இருந்துகொண்டு கொண்டாட்டம் போட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் அமைய இருப்பனவற்றையும் சேர்த்து, 139 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்தியாவிலேயே அதிகச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறியுள்ளது. இது இரு கழக ஆட்சிகளின் 'உயரிய சாதனை!'

தமிழகத்தில் 70 விழுக்காடு மின்சாரத்தை 2.1 கோடிபேர் பகிர்ந்துகொள்ள, 30 ஆயிரத்துக்கும் குறைவான பன்னாட்டு-தனியார் பெருநிறுவனங்கள் 30% மின்சாரத்தை அரசின் ஆசிர்வாதத்தோடு எடுத்துக்கொள்கின்றன‌.

வீடுகளுக்கான மின்சாரமே சரியாகக் கிடைக்காது மக்கள் இருளில் தவிக்கும் இந்தச் சூழலில், தனியார் பெருமுதலாளிகளின் காலி மனையிடங்கள் (ரியல் எஸ்டேட்) இரவிலும் பகலைப்போல ஜொலிப்பதைக் காணமுடிகிறது! இந்தக் கொடுமை நெல்லை மாவட்டத்தின் கிருஷ்ணன் கோவில், இராஜபாளையம், சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகள் என பரவலாக தமிழகம் முழுவதும் அரங்கேறி வருகிறது.

மின்வாரிய நட்டத்தை பொதுமக்களின் தலையில் கட்டத் துடிக்கும் அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் மின்சாரத்திற்கு நம் வீடுகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மிகக்குறைவான தொகையையே மின்கட்டணமாக வசூலிக்கப்படுவது என்ன நியாயம் என்றே புரியவில்லை?

மேலும், 1200 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வணிகப் பட்டியலில் இருந்து தொழில்களுக்கான பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளன‌. இதனால் ஒவ்வொரு தகவல் தொழில் நுட்ப நிறுவனமும் யூனிட்டுக்கு ரூ.1.80லிருந்து ரூ.2.50 வரை இலாபமடைந்துள்ளது. இவ்வாறு 'ஏழ்மையான' தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 'கருணை' காட்டி வருகிறது வாரியம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்குச் 'சலுகை' விலையில் மின்சாரம் வழங்கும் அரசு, ஏழை எளிய மக்கள் வாழ்ந்துவரும் குடியிருப்புகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தையும் தடைசெய்துள்ளது.

இன்றைய சூழலில் நிலவும் மின் சிக்கலுக்கு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களில் போராட்டமே காரணம் என்ற மாயையை மக்களிடத்தே உருவாக்க, சமீப காலங்களில் அளவுக்கு அதிகமாக - வழக்கத்துக்கு மாறாக மின்வெட்டு செய்து, கூடங்குளம் போராட்டத்தை பாமர மக்களைக் கொண்டே எதிர்ப்புத் தெரிவிக்க வைக்கும் படுமோசமான நயவஞ்சகச் செயலைச் செய்து வருகிறது தமிழக அரசு.

கடந்த உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, கூடங்குளத்துக்கு எதிப்புத் தெரிவிப்பது போல பம்மாத்து செய்த செயலலிதா, தேர்தல் முடிந்ததும் மத்திய அரசுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
 
மன்மோகன் சிங்கின் மற்றும் நாராயணசாமிகள் விடும் 'புருடாக்களை' உண்மையென நம்பிக்கொண்டு மெத்தப் ‘படித்த மேதாவிகள்’ சிலர் கூடங்குளம் அணு உலையைத் திறந்தால், உடனே தமிழகம் மின்ஒளியில் மிளிரும் என்று பேசிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த மின் தேவை, நாளொன்றுக்கு 11,000 மெகா வாட்; இதில் 2500 மெகா வாட் பற்றாக்குறை. தற்போது இது 4000 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. (நன்றி : இந்தியா டுடே - அக்டோபர் 2011)

ஆனால், நீங்கள் சொல்கிறபடி கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினால், அதிலிருந்து சுமார் 963 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்; அதில் மின்கசிவின் மூலம் ஏற்படும் இழப்பு 173 மெகா வாட்; மீதியுள்ளது 790 மொகா வாட். இதில் அணு உலை அமைந்துள்ள தமிழகத்திற்கான ஒதுக்கீடு (30%) வெறும் 237 மெகா வாட். இது தமிழகத்தின் தற்போதைய 2% மின் தேவையைக் கூட பூர்த்தி செய்யாது. மீதியுள்ள 553 மெகா வாட் மின்சாரம் யாருக்கு என்ற ஐயம் எழலாம்.

மீதியுள்ள மின்சாரம், நம்மைப் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காலில் போட்டு மிதித்து, தமிழகத்தின் முல்லைப் பெரியாறு நீர் உரிமையை மறுக்கும் மலையாள இனவெறி கேரள அரசுக்கும், காவிரியாறு மற்றும் பாலாற்று நீர் உரிமையை மறுக்கும் முறையே கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கும் நம் இனத்தைக் கூட்டோடு அழித்த இலங்கைக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் செல்லவிருக்கிறது. அவர்கள் நம் உயிருக்கு உலைவைக்கும் கூடங்குள அணு மின்சாரத்தைப் பயன்படுத்தி குதூகலிக்க இருக்கிறார்கள்.

தில்லி அரசு, கூடங்குளம் அணு உலையைத் திறப்பதில் காட்டும் முனைப்பைப் பார்த்தே தெரியவில்லையா கூடங்குளம் யாருடைய நலனுக்கானதென்று?

அன்பார்ந்த “படித்த” பெருமக்களே, இப்போது சொல்லுங்கள்; நம் தாய்த் தமிழகத்திற்குப் பேராபத்தை ஏற்படுத்தும் கூடங்குளம் மரண உலை நம்மண்ணில் தேவைதானா?.

தற்போதைய பெரும் மின்பற்றாக்குறைக்கு பெருமாநல்லூர் (பி.பி.என்.) ஜி.எம்.ஆர். வாசவி, மதுரை பவர், சாமல்பட்டி போன்ற தனியார் மின் நிறுவனங்கள், மின்வாரியத்தில் இருந்து தங்களுக்குச்சேர வேண்டிய நிலுவைக்காக உற்பத்தி நிறுத்தம் செய்து வருவதும் பன்னாட்டு நிறுவனங்களும், ஒழுங்குமுறை ஆணையமும், தில்லி அரசுமே காரணமாகும்.

மின்சாரமின்றி அன்றாடம் பகலிலும், இரவிலும் அல்லலுக்கு உள்ளாகும் தமிழக மக்களின் மின் தட்டுப்பாட்டைத் தீர்க்க, வாரியத்திற்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்து, தேவையற்ற நட்டத்தை நிறுத்த வேண்டும். பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும். நம் மண்ணில் உற்பத்தி செய்யப்படும் நெய்வேலி உள்ளிட்ட மின் நிலையங்களின் மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அளிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

தமிழகத்தின் மின் தட்டுப்பாடு என்பது, தனியார்மயம் மற்றும் உலகமயத்தோடு தொடர்புடையதாக உள்ளது. எனவே, தனியார்மயம் மற்றும் உலகமயத்திற்கு எதிராக மக்களின் கரங்கள் உயர்ந்தால் தான் தமிழகத்தை பீடித்துள்ள 'இருள்' விலகும்.

- தங்க.செங்கதிர் ( tha.senkathir@yahoo.com)
அலைபேசி : 9786752008

No comments: