Monday 13 September 2010

பக்கிங்காம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாய்: தமிழக கடலோரப்பகுதி வளர்ச்சி பெற தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படுமா?

பக்கிங்காம் கால்வாயை சென்னை திருவான்மியூரில் இருந்து, தூத்துக்குடி வரை நீட்டிப்பதன் மூலம், தமிழக கடலோரப் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும். பக்கிங்காம் கால்வாய், இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரம் காக்கிநாடாவில் (ஆந்திரா) இருந்து, தெற்கே மரக்காணம் (புதுச்சேரி) வரை அமைந்துள்ளது.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட இக்கால்வாய் மூலம், கட்டுமானம் மற்றும் உணவுப் பொருட்கள் ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் இடையே கொண்டு வரப்பட்டன. ஆனால், கடந்த 60-70 ஆண்டுகளுக்கு முன், இக்கால்வாய் நீர்வற்றி தூர்ந்து போய், இக்கடலோர நீர்வழிப் பாதை முற்றிலுமாக மறைந்து போய் விட்டது. மூன்று காரணங்களால் இந்நீர் வழிப்பாதை தூர்ந்து போனது.

* சென்னை பகுதியில் பூமி மேலே எழும்புவதாலும், அதனால் எண்ணூர் மற்றும் கோவளம் கிரீக் (கடல் நீர்நிலத்தில் உட்புகும் ஓடைகள்) மூலம் கால்வாய்க்கு வந்த நீர் குன்றியது.

* சென்னை பகுதியில் பூமி மேலே எழும்புவதால், இந்நீர் வழிப்பாதைக்கு மேற்கு பகுதியிலிருந்து கிழக்கே, வங்காள விரிகுடாவில் கலக்கும் நதிகள் மற்றும் ஓடைகள் அதிகமாக மண்ணைக் கொண்டு வந்து கொட்டி, இக்கால்வாய் மண் செரிமானம் அடைந்தது.

* கடலோரப் பகுதியின் அபரிமிதமான வளர்ச்சித் திட்டங்களால் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு ஆகியவை. ஆனால், பக்கிங்காம் கால்வாயை வடக்கே திருவான்மியூரில் (சென்னை) இருந்து, தெற்கே மரக்காணம் வரை புதுப்பிப்பதோடு, இக்கால்வாயை கடற்கரையோரமாக மரக்காணத்தில் (புதுச்சேரி) இருந்து, காரைக்கால், வேளாங்கண்ணி, வேதாரண்யம், ராஜாமடம், மணமேல்குடி, ராமநாதபுரம் மற்றும் வைகை கடல்கரையோரமாக தூத்துக்குடி வரை நீட்டிக்க முடியும். அதற்கான நிலவியல் சாத்தியங்கள் இருப்பதாகவும், செயற்கைக் கோள்கள் மூலம் நடத்திய ஆய்வுகள் காண்பிக்கின்றன.

அப்படி அமைப்பதற்கு ஏதுவாக, வடக்கே மரக்காணத்திலிருந்து தெற்கே தூத்துக்குடி வரை, கடந்த கால கடல்மட்ட மாறுதல்களால் உருவாக்கப்பட்ட நீளமான கால்வாய் போன்ற களிமண்ணால் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளங்களும், அப்பள்ளங்களின் இருபுறங்களிலும் நீளமான மணல்மேடுகளும் உள்ளன. இப்பள்ளங்களை ஆராய்ந்து, அதன் மூலம் தக்க பாதையைக் கண்டறிந்து, அதன் வழியே பக்கிங்காம் கால்வாயை தூத்துக்குடி வரை நீட்டிக்க முடியும். அவ்வாறு நீட்டிப்பதற்கு, கடல்நீர் நிலத்தில் உட்புகும் ஓடைகள் (கிரீக்) மூலம், கடல் நீரை உள்ளே கொண்டு வந்து, நீரோட்டத்தை உருவாக்கலாம்.

உதாரணமாக, வேதாரண்யம் பகுதியில் கிரீக் (1), (2) மற்றும் (3) வழியாக கடல்நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு வரலாம். இந்நீரை வேதாரண்ய பகுதியை பொருத்தவரை, இரண்டு பாதையில் பக்கிங்காம் கால்வாயை தோண்டி ஓடச் செய்யலாம். ஒன்று: தில்லை விளாகம் (4) வழி, மற்றொன்று: வேதாரண்யம் கடலோர நீர்நிலை வழி (5). அப்படி கொண்டு செல்வதால், தில்லைவிளாகப் பகுதியில் (4) இக்கால்வாய் நீரை தில்லைவளாகம் பகுதியில் உள்ள வறண்ட சதுப்பு நிலத்தில் பரப்பி, அதன் மூலம் மீன்வளர்ப்பு, மீன் உணவு வகை தயாரித்தல், உப்பு மற்றும் கடல்சார் வேதியியல் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை உருவாக்க முடியும்.

அதுபோலவே வேதாரண்யம் கடலோரத்தில், தற்போது மண் செரிமானம் அடைந்து, மறைந்து போய் கொண்டிருக்கும் கடலோர நீர்நிலை (5) மூலம், பக்கிங்காம் கால்வாயின் மறுகிளையை கொண்டு சென்று, மண் செரிமானத்தால் மறைந்து விட்ட கடலோர இந்நீர் நிலையை மறுபடியும் உருவாக்கி, கடல்சார் வேதியியல் பொருட்கள், மீன்வளர்ப்பு, மீன் உணவு தயார் செய்தல், புன்னைக்காடுகள் வளர்ச்சி ஆகியவற்றை செயல்படுத்தலாம். இதேபோன்று இக்கால்வாயை நீட்டிப்பதன் மூலம், தமிழகக் கடலோரத்தில் பல இடங்களில், புன்னைக் காடுகளை உருவாக்கலாம்.

உதாரணத்திற்கு, ராஜாமடம் பகுதியில் (6) கடலில் கலக்கும் நதிநீரை கால்வாய்க்கு மேற்கே தேக்கி, (7) கடல்நீரை டர்பைன் மூலம் (8) அலை அலையாக நதிகளின் முகத்துவாரத்தில் செலுத்தி கடல்நீரும், நதிநீரும் கலக்கும் தன்மையை உருவாக்கி, பக்கிங்காம் கால்வாயின் பகுதிகளில் காணப்படும் நதிகளின் கழிமுகத்தில் புன்னைக் காடுகளை உருவாக்க முடியும். இதுபோன்ற புன்னைக் காடுகளை உருவாக்குவதன் மூலம், சுனாமி மற்றும் புயல் அலை எழும்பும் காலங்களில், கடல்நீர் உட்புகுதலை தடுத்து நிறுத்த உதவும்.

இதுபோன்று பக்கிங்காம் கால்வாயை மேற்கூறியவாறு நீட்டிப்பதால், பல அரிய நன்மைகள் உள்ளன. அவை

* கேரளா மாநிலத்தில் உள்ளது போல, கடலோர நீர்வழிப் பாதையின் மூலம் போக்குவரத்து.

* சீர்காழி, சிதம்பரம், நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், காரைக்கால், திருநள்ளார், தேவிபட்டினம், ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களை இணைத்தல்.

* கடலோரப் பகுதிகளில், பல சிறு துறைமுகங்களை அமைத்தல்.

* கால்வாயின் இருமருங்கிலும் உள்ள சதுப்பு நிலத்தில், சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத மீன் வளர்ப்பு மற்றும் உப்பளங்கள்.

* புன்னைக் காடுகள் வளர்த்தல் போன்ற, பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியும்.

உண்மையிலேயே தமிழகக் கடலோர அமைப்பு, இயற்கை நமக்கு தந்த மிகப்பெரிய வரப்பிரசாதம். ஆகவே, பக்கிங்காம் கால்வாயை வடக்கே திருவான்மியூரில் (சென்னை) இருந்து, தெற்கே தூத்துக்குடி வரை நீட்டிப்பதன் மூலம், தமிழக கடலோரப் பகுதியில் மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களை உருவாக்க முடியும். இதற்கு செயற்கைக்கோள் தொழில் நுட்பம் சார் நிலவியல் ஆய்வு தேவை.


- சோம. இராமசாமி (துணைவேந்தர், காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்)

No comments: