அயோத்தியில், 1528ம் ஆண்டில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால், இந்த மசூதி அங்கிருந்த கோவிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக, இந்துக்கள் புகார் தெரிவித்தனர். சுதந்திரத்திற்குப் பின், 1949ல் இந்த இடத்திற்கு உரிமை கோரி, இந்துக்கள் தரப்பிலும், முஸ்லிம்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொண்டது.சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்சில், 2002ம் ஆண்டு ஏப்ரலில் துவங்கியது. வழக்கு விசாரணையின் போது, 88 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.இவர்களில் 34 பேர் முஸ்லிம்கள்; 54 பேர் இந்துக்கள். இருந்தாலும், இந்துக்களில் 11 பேர் மசூதிக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். நீதிபதிகள் மாற்றம் அல்லது ஓய்வு பெற்றதன் காரணமாக இந்த வழக்கின் விசாரணை மூன்று முறை புதிதாக துவங்கியது.
அலகாபாத் ஐகோர்ட்டின் தற்போதைய லக்னோ பெஞ்ச், கடந்த ஜனவரி 11ம் தேதி விசாரணையைத் துவக்கியது. முஸ்லிம்கள் தரப்பிலான வாதம் பிப்ரவரி 25ம் தேதி முடிவுக்கு வந்தது. ராமர் கோவிலுக்கு ஆதரவானவர்களின் வாதம் ஜூலை 7ம் தேதி முடிவுக்கு வந்தது.பிப்ரவரி மாதத்திற்குப் பின், அன்றாட அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஜூலை இறுதி வாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், வரும் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை வழங்குகிறது.
அறுபது ஆண்டுகளுக்குப் பின், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், நாடே இந்தத் தீர்ப்பை பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. தீர்ப்பு வரும் 24ம் தேதி வழங்கப்படும் என்பதை அகில இந்திய பாபர் மசூதி செயல் கமிட்டி அமைப்பாளர் ஜிலானியும் உறுதி செய்துள்ளார்.தீர்ப்பு நாள் நெருங்குவதால், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராமஜென்மபூமி இருக்கும் அயோத்தி மற்றும் பைசாபாத்தில் உள்ள மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வரும் 24ம் தேதி வழங்கப்பட உள்ள தீர்ப்பில், "சர்ச்சைக்குரிய இடம் கடவுள் ராமர் பிறந்த இடமா? அந்த இடத்தில் கோவில் இருந்ததா அல்லது மசூதி இருந்ததா? மசூதி கட்டுவதற்காக கோவில் இடிக்கப்பட்டதா?' என்ற மூன்று முக்கிய விஷயங்களுக்கு கோர்ட் தீர்வு காண உள்ளது.தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என, எந்தத் தரப்பினர் விரும்பினாலும், அவர்கள் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வர்.