Tuesday, 7 September 2010

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தவை!

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தவை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப்

Articleஎங்கேனும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தால் சற்றும் யோசிக்காமல் முஸ்லிம் தீவிரவாதி இஸ்லாமியத் தீவிரவாதம் என்று செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு குண்டு வெடிப்பு நடத்தி முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்க முயன்றவர்களின் சதியை வல்ல இறைவன் அம்பலப் படுத்திவிட்டான்! ஆனால் வழக்கமாக ஊடகங்களின் பார்வையில் இது ஒரு செய்தியாகப் படவில்லை.

டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி இஸ்லாமைத் தூற்றிய இந்தியா டுடே ஆகட்டும், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிக்கை தினமலராகட்டும், எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. காரணம் வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் கோர முகங்கள்!

குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் (சாத்தவி?) பயங்கரவாதி பரக்யாசிங் தாக்கூராகட்டும், அவளுக்கு சுக்கான் பிடிக்கும் பா.ஜ.க, விஸ்வ இந்து பரிசத் இந்துத் துவ வாதிகளாகட்டும், அப்பாவிகளைக் கொல்லக் கூடாது என்ற எந்த இங்கிதமும் இவர்களுக்குக் கிடையாது. இதனால் தான் கைதானவர்கள் விடுதலையாக சங்பரிவார் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் ஊடகங்கள் தீவிரவாதத்துக்கு எதிரான ஒழுக்கப் பயிற்சிகளும், பொதுக் கூட்டங்களும், மாநாடுகளும், கருத்தரங்கங்களும் அதிக அளவில் நடத்துவது முஸ்pலம்கள் தான் என்பதை மறந்து விடுகின்றன. இஸ்லாமிய அறிஞர்களின் தலைமையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகளில் ஏராளமான இளைஞர்கள் பங்கு பெற்று ஒழுக்கமுள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் ஒரு பக்கம் வளர்ந்து வரும்போது இன்னொரு பக்கம் சங்பரிவார் தன் தொண்டர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், வெடிகுண்டு வைக்கும் பயிற்சியும் அளித்து வருகிறது. இவை அத்தனையும் ராணுவத்தின் உதவியுடன் நடைபெறுகிறது. ராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் கூட இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தில் பயங்கரவாத நோய் பீடித்துள்ளது.

இப்போது இந்த குண்டு வெடிப்புடன் தொடர்புடைய ராணுவத்தில் இன்டலிஜன்ஸ் பிரிவில் பணியாற்றிய லெஃப்டினெண்ட் கேணல் பிரசாத் புரோகித் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கஷ்மீரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ராணுவத்தின் நிதியிலிருந்து ரகசியமாக பணத்தை தீவிரவாத இயக்கங்களுக்கு மாற்றியுள்ளார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகிய ஸமீர் குல்கர்னி என்பவன் பல முறை கஷ்மீரில் வைத்து இவரை சந்தித்ததும் வெளிப்பட்டுள்ளது. (செய்தி: மாத்யமம்)

சங்கப் பரிவார் திட்ட மிட்டு தன் தொண்டர்களை ராணுவத்தில் சேர ஊக்குவித்து வருகிறது. கஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மிகப்பெரிய ராணுவ அதிகாரிகளின் உதவியுடன் சங்பரிவார் தீவிரவாதிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க இத்தகைய சம்பவங்களைக் காரணம் காட்டி முஸ்லிம் இளைஞர்களை காவல் துறை வேட்டையாடி வருகிறது. முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச் சென்று பின்னர் சுட்டுக் கொலை செய்து விட்டு என்கவுண்டர் என்று திருப்பி விடுகிறது. பத்திரிக்கைகளும் முஸ்லிம் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை என்று தலைப்புச் செய்திகள் வெளியிடுகிறது. ஜாமிஆ நகரில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மாணவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது போன்று இன்னொரு சம்பவத்தை நிறைவேற்ற மாறு வேடத்தில் காரில் வந்து இளைஞர்களைக் கடத்திச் செல்ல முற்பட்ட போலீஸ் அதிகாரி டெல்லியில் பிடிபட்டுள்ளார். இப்படிப் பட்ட போலி என்கவுண்டர்கள் ஏராளம். இவ்வாறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபணமானால் மட்டும் செய்திகளை தந்திரமாக இருட்டடிப்பு செய்து விடுகின்றன.

அவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்பட்ட உரு செய்திதான் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த வருடம் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட சம்பவம்.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் குற்றத்தை நிரூபிப்பதில் அரசு வழக்குரைஞர் தோல்வியடைந்து விட்டதாக நீதி மன்றம் கூறுகிறது. இவர்களுக்கு இழப்பீடாக உதவித் தொகைகளும் ஆட்டோ வும் அரசாங்கம் வழங்குவதாக உறுதி செய்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட ஒருவரை அரக்கத் தனமாக சித்திர வதை செய்து, குண்டு வைத்ததாக ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்கவுண்டர் நடத்தி விடுவதாக காவல் துறை மிரட்டியதை விடுதலையான இம்ரான் என்ற இளைஞர் கூறுகிறார். (நன்றி: சத்திய மார்க்கம்.காம்)

ஆக ராணுவம் முதற் கொண்டு காவல் துறை வரை கொடிய எண்ணமுடையவர்கள் செயல்பட்டுக் கொண்டிரு ப்பது இதன் மூலம தெரிய வருகிறது.

இதற்கிடையில் மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் தான் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பையும் நடத்தியிருக்கக் கூடும் என்று இவ்வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து இப்போது விசாரணை மேற்கொள்ளப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைக்கப்பட்ட இந்து பயங்கரவாதத்தின் கோர முகம் இதிலிருந்து வெளிப்பட்டுள்ளது. எனினும் ஊடகங்கள் இதிலும் ஒரு சார்பு நிலையைத் தான் கடைபிடித்து வருகிறது. முஸ்லிம் சமுதாயம் தனக்கென ஒரு உறுதியான செய்தி ஊடகத்தை உருவாக்குவதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.

நன்றி: http://www.islamkalvi.com/portal/?p=1151

No comments: