பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்
பதிவேற்றியது ஆர்வலர் Wednesday, 29 September 2010 22:16 புதிய ஜனநாயகம் இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கையை ஆராய லிபரான்கமிசன் டிசம்பர் 10, 1992 அன்று பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட நான்காவது நாளில் மைய அரசால் நியமிக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு நியமிக்கப்பட்ட இக்கமிசன், 16 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து, கடந்த ஜூன் 30, 2009 அன்றுதான் தனது அறிக்கையை மைய அரசிடம் தந்துள்ளது.
இக்கமிசனின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் விதித்திருந்த தடை, பாபர் மசூதி இடிப்பில் நேரடியாகத் தொடர்புள்ள கல்யாண் சிங் போன்ற "சாட்சிகள்' கமிசனின் முன் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தது போன்றவைதான் இத்தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், "மசூதியை இடித்துத் தள்ளிய சதிகாரர்கள் யார்?'' என்பது உலகுக்கே தெரிந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை கொடுக்க, நீதிபதி லிபரானுக்கு 16 ஆண்டுகள் " தேவைப்பட்டிருப்பதை ' எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடமுடியாது.
பாபர் மசூதியை இடித்துத் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட அத்வானியின் ரத யாத்திரை; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் பஜ்ரங் தள் தலைவர் வினய்கத்தியாரின் வீட்டில் நடந்த சதி ஆலோசனை; அதில் கலந்துகொண்ட அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் பங்கு; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றி விட்டு, அன்றிரவு ராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் பரமஹம்ஸர் வீட்டில் நடந்த "கலந்துரையாடலில்' கலந்துகொண்டுவிட்டுச் சென்ற வாஜ்பாயின் பங்கு; பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள்; அக்கிரிமனல் நடவடிக்கையைத் தடுக்காமல், அதனை ரசித்துப் பார்த்துப் பெருமிதம் கொண்ட அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பல குட்டித் தலைவர்களின் இந்து மதவெறி வக்கிரம்; சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் இத்துணை அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் பொழுது, மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிப் பாசிசக் கும்பலும், அவர்களுக்குத் துணையாக நின்றவர்களும் இந்நேரம் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், லிபரானோ மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக, 16 ஆண்டுகள் கழித்துதான் 27 தொகுதிகள் கொண்ட அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். மைய அரசோ அந்த அறிக்கையை வெளியிட "நல்ல நாள்' பார்த்துக் கொண்டிருக்கிறது. கள்வனிடமே பெட்டிச் சாவியைக் கொடுத்தது போல, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்து நின்ற கயவாளி காங்கிரசு கும்பலிடம் லிபரான் அறிக்கை போய்ச் சேர்ந்திருக்கிறது. இதைவிட இந்து மதவெறிக் கும்பலுக்கு வேறு பாதுகாப்பு தேவையில்லை. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் வழக்கும் 16 ஆண்டுகளாக விசாரணை வாய்தா மேல்முறையீடு என்ற இழுத்தடிப்புகளைத் தாண்ட முடியாமல் முடங்கிப் போய்க்கிடக்கிறது.
லிபரான் கமிசனில் அரசு தரப்பு வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் அனுபம் குப்தா, "நீதிபதி லிபரான் விசாரணையின் பொழுது அத்வானிக்கு அதிகபட்ச சலுகைகள் காட்டியதாக''க் குற்றம் சுமத்தி வருவதோடு, மசூதி இடிப்பில் அத்வானியின் பங்கு குறித்து நீதிபதி லிபரானுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கமிசனில் இருந்து தான் விலகுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறி வருகிறார்.
அனுபம் குப்தா அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, "நாடு சுதந்திரமடைந்த பின் குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பிரச்சினையை ஜவஹர்லால் நேரு எப்படிக் கையாண்டார்'' என்பது தொடர்பாக அத்வானியிடம் கேள்வி எழுப்பியதாகவும், இந்தக் கேள்வியினால் அத்வானியை விட லிபரான் தான் அதிகப் பதற்றமடைந்ததாகவும், அதனால் அத்வானியிடம் தன்னை மன்னிப்புக் கேட்கக் கோரி லிபரான் நிர்பந்தித்தாகவும் அனுபம் குப்தா கூறி வருகிறார்.
இதே போன்று, மசூதி இடிப்பு தொடர்பான உளவுத் துறை அறிக்கையொன்றைச் சுட்டிக் காட்டி அத்வானியை, தான் குறுக்கு விசாரணை செய்தபொழுது, அத்வானி ஆத்திரமடைந்ததாகவும், அதனால், அந்தக் கேள்விக்கு லிபரான் தடை விதித்துவிட்டதாகவும் அனுபம் குப்தா கூறுகிறார். "அத்வானி, ஜோஷி ஆகியோரின் கண் முன்னே மசூதி இடிப்பு நடந்தபோதும், அவர்கள் அதற்குப் பொறுப்பல்ல; நிலைமை அவர்களின் கையை மீறிப் போய் விட்டது'' என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டைத்தான் லிபரான் கொண்டிருப்பதாக அனுபம் குப்தா குற்றம்சாட்டி வருகிறார்.
லிபரான் கமிசன் மீதான இக்குற்றச்சாட்டுக்கள் கிசுகிசு செய்திகளைப் போல அல்லாமல்,"அவுட் லுக்'' என்ற ஆங்கில வாரஇதழில் அனுபம் குப்தாவின் நேர்காணலாகவே வெளிவந்திருக்கிறது. இதனால், நீதிபதி லிபரான் "நடுநிலையாக' விசாரணையை நடத்தி அறிக்கை கொடுத்திருப்பாரா என்ற சந்தேகம் தவிர்க்கமுடியாமல் எழுந்துள்ளது. இந்தசந்தேகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, நீதிபதி லிபரான் நேர்மையாகவே விசாரணையை நடத்தியிருப்பார் என்று எடுத்துக் கொண்டாலும், அதனால் என்ன விளைவு ஏற்பட்டுவிடும்?
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நடந்த மும்பய்க் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த சிறீகிருஷ்ணா கமிசன்,1982இல் நடந்த மண்டைக்காடு இந்து மதவெறிக் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த வேணுகோபால் கமிசன், 1969இல் குஜராத் அகமதாபாத்தில் இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த ஜக்மோகன்ரெட்டி கமிசன் ஆகியவற்றுக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதேநிலை லிபரான் கமிசன் அறிக்கைக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?
லிபரான் கமிசன் அளித்துள்ள அறிக்கை ஒருபுறமிருக்கட்டும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத்துறை நடத்தி வரும் இரு வழக்குகளில், ஒன்றில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வீ.எச்.டால்மியா, சந்நியாசினி ரிதம்பரா ஆகிய எட்டு பேர் மீது சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்குப் பூர்வாங்க ஆதாரம் இருப்பதைக் கூடுதல் குற்றவியல் நீதிபதி ஜகதீஷ் பிரசாத் சிறீவத்ஸவா உறுதி செய்துள்ளார்.
எனினும், காலப்போக்கில் இந்து மதவெறிக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டும், சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், தலித் "சகோதரி' மாயாவதியின் நட்பையும் பயன்படுத்திக் கொண்டும் அந்த எட்டு பேர் மீதான சதிக் குற்றச்சாட்டை உடைத்தெறிந்து விட்டது. அவர்கள் மீது இக்குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி வழக்கு நடத்துவதற்கு சட்டப்படியே வாய்ப்புகள் இருந்தும்கூட, அதை காங்கிரசு உள்ளிட்டு எந்தவொரு மதச்சார்பற்ற கட்சியும் கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது அவர்கள் மீது மதக் கலவரத்தைத் தூண்டிவிடும்படி நடந்து கொண்டார்கள் என்ற உப்புச்சப்பில்லாத குற்றச்சாட்டுதான் சுமத்தப்பட்டுள்ளது.
இதுவொருபுறமிருக்க, பாபர் மசூதி ராமஜென்ம பூமி வழக்கு தொடர்பான 23 கோப்புகளைக் காணவில்லை என உ.பி. மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆகஸ்டு மாத இறுதிக்குள் அறிக்கை தரும்படி மையப் புலனாய்வுத் துறைக்கு உத்திரவிட்டுள்ளது, அலகாபாத் உயர்நீதி மன்றம். இந்தக் கோப்புகள் எப்பொழுது, எப்படி காணாமல் போயின என்பது கூட "மர்மமாக'த் தான் உள்ளது.
உ.பி.மாநில அரசின் மதக் கலவர தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி சுபாஷ் பஹ்ன் சாத், அலுவல் வேலைதொடர்பாக தில்லிக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது, தில்லியில் உள்ள திலகர் பாலம் தொடர்வண்டிநிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார். சுபாஷ் சாத் இறந்துபோய் ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும், அவர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது தடுமாறி விழுந்து இறந்து போனாரா என்பதும் மர்மமாகவே உள்ளது. லிபரான் கமிசன் விசாரணை தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு சுபாஷ் சாத்திடம்தான் இருந்துள்ளது என்பதும், அவர் "இறந்து' போன சமயத்தில் மைய அரசில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது காணாமல் போன கோப்புகளை லிபரான் கமிசனிடம் கொடுப்பதற்காக சுபாஷ் எடுத்துச் சென்றதாகக் கூறுகிறது, உ.பி. மாநில அரசு. இது உண்மையென்றால், அந்தக்கோப்புகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே "தொலைந்து'போய்விட்டன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உ.பி. மாநில அரசோ, லிபரான் கமிசன் தனது அறிக்கையை அளித்த பிறகுதான் கோப்புகள் தொலைந்துபோன விவகாரத்தை வெளியே சொல்லுகிறது. இதனை இவ்வளவுகால தாமதமாக சொல்ல வேண்டிய பின்னணி என்ன என்பதும் மர்மமாக உள்ளது.
லிபரான் கமிசனோ தொலைந்து போய்விட்டதாகக் கூறப்படும் அந்தக் கோப்புகளை அந்தச் சமயத்தில் சுபாஷ் சாத்தை எடுத்துவரச் சொல்லி எந்த உத்தரவும் அளிக்கவில்லை எனக்கூறுகிறது. சுபாஷ் சாத் ஓடும் ரயிலில் இருந்து "விழுந்த' இடத்தைப் புலனாய்வு செய்த டெல்லி போலீசாரோ, "அந்த இடத்தில் சில வெற்றுத் தாள்களையும், அடையாள அட்டைகளையும் தவிர வேறெதுவும் இல்லை'' எனக் கூறிவிட்டனர். சுபாஷ்சாத்தின் தந்தை பிர் பஹ்ன் சாத், தனது மகன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றபொழுது தன்னுடன் இத்துணை கோப்புகளை எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை எனக் கூறுகிறார். பாபர்மசூதி வளாகத்தினுள் ராமபிரான் ஜெனிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு அகழ்வராய்ச்சி நடத்தியதைப் போல, இந்தக்"காணாமல்' போன கோப்புகளைக் கண்டுபிடிக்கவும் அகழ்வராய்ச்சி நடத்த வேண்டியிருக்குமோ?
பாபர் மசூதி பிரச்சினையில் முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் இந்து மதவெறி பாசிசக் கும்பல் குறியாக இருந்து வருவதைப் பாமரர்கள் கூடப் புரிந்து கொள்ளமுடியும். அதே சமயம், தங்களை மதச்சார்பற்றவர்களாகக் கூறிக் கொள்ளும் ஓட்டுக்கட்சிகள் மட்டுமின்றி, சி.பி.ஐ.,போலீசு, நீதித்துறை ஆகிய அரசு உறுப்புகளும் கூட இந்தவழக்கை இத்தனை ஆண்டுகளாக இழுத்தடிக்க வேண்டிய பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் பொழுதுதான், மதச்சார்பற்ற இந்திய அரசின் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும். மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளின் இரட்டைவேடத்திற்கு எதிராக மட்டுமல்ல; இந்திய அரசின் போலி மதச்சார்பின்மைக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி போராடினால் மட்டுமே பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிபாசிசக் கும்பலைத் தண்டிக்க முடியும்.
· செல்வம்