Sunday, 22 August 2010

வெள்ளைப்பூண்டு

வெள்ளைப்பூண்டு: இரத்த அழுத்தத்தை குறைக்கும்!

பரபரப்பான வாழ்க்கை சூழலில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் இருக்கிறது. இந்நிலையில், பூண்டுக்கு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாக ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் யுனிவர்சிட்டி ஆப் அடிலெய்டு பேராசிரியர் டாக்டர் கரின் ரீட் தலைமையிலான குழுவினர் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 140 எம்எம்க்கும் அதிகமாக பீபி உள்ள 50 பேர்களை தேர்வுசெய்து பூண்டை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாத்திரைகள், சுமார் 12 வாரங்களுக்கு தரப்பட்டது. அதன் பின்னர் அவர்களை பரிசோதனை செய்ததில் அதிகபட்சமாக 10 எம்எம் எச்ஜி வரை பீபி குறைந்திருந்தது தெரியவந்தது.

பீபி அளவு குறைவதால் நோய் ஆபத்தும் குறையும் என்பது நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக, குறைந்தபட்சமாக 5 எம்எம் அளவுக்கு பீபி குறைவதன் மூலம் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 8 முதல் 20 சதவீதம் வரை குறையும் என்கிறது ஆய்வு முடிவு. எனினும், பச்சை அல்லது வேக வைத்த பூண்டை நேரடியாக சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய ரசாயன பொருட்களை, பூண்டு உற்பத்தி செய்கிறது. இது ரத்த அணுக்கள் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. எனவே, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் உதவும் என டாக்டர் ரீட் தெரிவித்துள்ளார்.

No comments: