Wednesday, 18 August 2010

பக்திக்கு ஒரு அளவே இல்லையா?!

பாம்பு வடிவ கீரைத்தண்டு: கோவில் அமைக்க முடிவு?

திட்டக்குடியில் பாம்பு வடிவத்தில் கீரைத்தண்டு வளர்ந்த இடத்தில் கோவில் அமைத்து வழிபட பக்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிக்காடு சாவடி தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது தோட்டத்தில் வளர்ந்த புளிச்ச கீரைத் தண்டை பார்த்த ஒரு பெண் நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவதாக கூறி ஓடி வந்தார். அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, பாம்பு உருவத்தில் கீரைத்தண்டு வளர்ந்திருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த அப்பகுதி பெண்கள் கீரைத்தண்டிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள் தூவி வழிபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெண்கள் ஐந்து தலை பாம்பினைக் கொண்ட அம்மன் வடிவ சிலையை கீரைத்தண்டிற்கு கீழ்புறம் வைத்து, சுற்றிலும் மஞ்சள் துணியால் சுற்றி விளக்கேற்றி வழிபடத் துவங்கினர். பெண் ஒருவர் திடீரென சாமியாடி, அந்த இடம் 'அம்மன் குடியிருக்கும் இடம்' எனவும் 'இங்கே கோவில் கட்டி வழிபட வேண்டும்' என்றும் தெரிவித்தார். உடனே அங்கு வேப்ப மரக்கன்று நட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து கீரைத்தண்டு வளர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் பச்சை தென்னை கீற்றினால் கூரையிட்டு திடீர் கோவிலாக மாற்றினர். அப்பகுதியில் கோவில் கட்டி தினசரி வழிபாடு நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியதால் திட்டக்குடி பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் திரண்டனர்.

இவர்களின் பக்திக்கு ஒரு அளவே இல்லையா?!

No comments: