"இரத்தக்கண்ணீர்" - நெஞ்சை விட்டு அகலாத நல்லதொரு திரைப்படம்
சில திரைப்படங்களை காலம் வந்தால்தான் சிறப்பாக ரசிக்கலாம். தற்போதைய தமிழினமும், புலம் பெயர் தமிழரும் இரத்தக்கண்ணீர் பார்த்துத் திருந்த வேண்டிய காலம் இப்போதுதான் வந்திருக்கிறது.
தயாரிப்பு : நேஷனல் பிக்சர்ஸ்
நடிகர்கள்: எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர், சிறீரஞ்சினி, எம்.என்.ராஜம், எஸ்.ஆர்.ஜானகி மற்றும் பலர்.
வசனம் : திருவாரூர் தங்கராசு
இயக்கம் : கிருஷ்ணன் பஞ்சு
வெளிவந்த ஆண்டு : அக்டோபர் - 1954
"இரத்தக்கண்ணீர்" திரைப்படம் வெளியாகி 56 வருடங்களுக்குப் பின் இத்திரைப்படத்தை மறுபடியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை நல்லதொரு திரைப்படம் என்று போற்றாதவர்கள் இதுவரை எவருமே கிடையாது என்று சொல்லலாம். ஆனால் இன்று மதுபானம், போதைவஸ்துக்கள் மற்றும் மேலை நாடுகளின் மேனா மினுக்கிகளின் மோகத்தாலும் சீரழியும் புலம் பெயர் தமிழினத்தின் புதிய அவலங்களை அவதானித்தால் இரத்தக்கண்ணீரை மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர வேண்டியது தவிர்க்க முடியாத விஷயமாகவே உள்ளது.
மதுபானமும் விபச்சாரமும் மேலைநாடுகளில் மட்டுமல்ல - இன்று தமிழர் தாயகமாம் தமிழகத்தில் மேலை நாடுகளைவிட அபரிமிதமாக அலங்கரிக்கப்பட்டு கேவலமாக செயற்ப்பட்டு வருகிறது. ஆகவேதான் இரத்தக்கண்ணீர் திரைப்படம் இரு இடங்களுக்கும் பொதுமைப்பட்டதாகிறது.
திரைப்படத்தின் கதை:
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்புகிறான் கதாநாயகன். மேலைநாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி - சொந்தத் தமிழ் கலாச்சாரத்தை இழிவாகக் கருதுகிறான். தன் மனைவியை நாகரிகமற்றவளாகக் கருதி உதறுகிறான். வேசி வீட்டிலேயே வாழ்க்கையைக் கழிக்கிறான். விபச்சாரத்தில் ஈடுபட்டு குஸ்டரோகம் பிடித்து, கண்கள் குருடாகி, கைகால்கள் கொரண்டி, சொத்தெல்லாம் அழிந்த நிலையில் தாசியால் விரட்டப்படுகிறான். தனது தவறுகளை உணர்கிறான், ஊரின் நடுவே தனக்கு ஒரு சிலை கட்டச் சொல்லி, அதன் மீது எல்லோரும் காறி உமிழும்படி கேட்கிறான். தனது மனைவியை நண்பனுக்கு மணம் முடித்து வைத்து இறக்கிறான்.
திரைப்படத்தில் மனம் கவரும் இடங்கள்:
01. விபச்சாரியின் வீட்டில் குடியும், கூத்தியாட்டமுமாக மயங்கிக் கிடக்கிறார் எம்.ஆர்.ராதா. அப்போது அவருடைய தாய் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் கிடக்கிறார். ராதா அவரைப் பார்க்கப் போக மறுத்துவிடுகிறார். தாய் இறந்து பிணம் ஊர்வலமாக வருகிறது. கொள்ளியிட மகனை சுடலைக்கு அழைப்பார்கள் - மூன்று மைல்கள் நடக்க வேண்டும். "போ.. மேன் நீயே கொண்டுபோய் தீமூட்டு " என்று விரட்டியடிப்பார். வேசியின் மயக்கத்தில் பெற்றதாயின் இறந்த உடலுக்கே தீ மூட்ட மறுத்த மகனாக வரும்போது நமது உள்ளங்களில் நெருப்பு எரியும்.
02. ராதாவிற்கு தொழுநோய் முற்றி கைகள், கால்களெல்லாம் புண்ணாகி ஒழுகும். அவருக்குப் பிடித்த நோய் மற்றவருக்கும் தொற்றும் அபாயம் வந்துவிட்டது. கையில் இருந்த பணமும் கரைந்து போய்விட்டது. ஆனாலும் ஆசை விடவில்லை.. வேசியாக நடித்த எம்.என்.ராஜத்தை கட்டித்தழுவப் போவார். அவளோ "போ" என்று விரட்டிவிடுவாள். அப்போதுதான் ராதாவிற்கு தனது நிலை புரியும். அப்போது அவர் விழுந்து கதறும் கதறல் மனதை உருக வைக்கும்.
03. "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.." என்ற சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் பாடலுக்கு இடையிடையே ராதா கொடுக்கும் குரல்.. "ஆம்! குற்றம் புரிந்தேன் - கொண்டவளை துறந்தேன் - கண்டவள் பின் சென்றேன்.." என்ற வரிகளை பேசாதவர் யாருண்டு..
04. ராதா பேசும் குசும்பு வசனங்கள்… குஷ்டரோகியான ராதா வீதியால் போகும்போது யாரோ ஒரு பக்தன் 'திருவண்ணாமலை தீபம் பார்க்கப் போகிறேன்' என்பான். அவனைப் பார்த்து ராதா "ஏன் உன் வீட்டைக் கொளுத்து; அதில திருவண்ணாமலையைப் பார்" என்று பேசுவார்.. இப்படி பல நாத்திகக் கருத்துக்களை பேசுவார்.
05. தனது மனைவி இதுகாலமும் வாழ்ந்ததில்லை. அவளை தனது நண்பனுக்கே திருமணம் செய்து வைத்து மறுமணத்தையும் ஆதரிப்பார்.
06. எல்லோரும் தனக்கு ஒரு சிலையைக்கட்டி மாலை போடு என்பார்கள். ஆனால், தன்னைப் பார்த்து காறித்துப்புவதற்காகவே சிலை கட்டுபவராக அவர் மாறுகிறார். இன்று நாம் காணும் பல சிலைகளின் நிலையும் அதுதானே!
07. ராதாவின் நடிப்பு, வசனம், அவருடைய மூன்றுவிதமான குரல் என்பவை திரைப்படத்தை தூக்கி நிறுத்துகிறது.
இரத்தக்கண்ணீர் 3, 021 தடவைகள் மேடையேறிய நாடகம். பதினைந்து வருட இடைவெளிக்குப் பின்னர் எம்.ஆர்.ராதா மறுபடியும் நடிக்க வந்திருந்தார். திரையுலகில் அவருக்கு இணையான நடிகர் ஒருவர் இல்லவே இல்லை என்பதை அன்றே உணர்த்தி வைத்தார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பாதிப்பில்லாமல் தமிழ் திரையுலகில் எந்தப் பாத்திரத்திலும் நடிக்க முடியாது. ஆனால் சிவாஜியின் பாதிப்பே இல்லாத ஒரேயொரு மகா நடிகர் எம்.ஆர். ராதாதான். அதேபோல, உலகத்தின் Holy Wood மற்றும் இந்தித் திரைப்பட உலகு உட்பட எந்தத் திரையுலகிலுமே எம்.ஆர். ராதாவிற்கு இணையான ஒரு நடிகன் கிடையாது என்பது நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் கருத்தாகும். அது உண்மைதான் என்பதை உலகத் திரைப்பட ஞானம் உள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள். அப்படியொரு உன்னதக் கலைஞனை அடையாளம் காட்டிய திரைப்படம் இரத்தக்கண்ணீர். 3,000 -க்கு மேற்பட்ட மேடைகளில் நடித்துப் பார்த்துவிட்டு திரைக்கு வந்தது கூட ஒரு மாபெரும் சாதனையாகும்.
தனது குரலை மூன்று விதமாக மாற்றி, நிறுத்தி பாவனை காட்டி பேசும் ஒரேயொரு நடிகனும் அவர்தான். அவருக்குள் இருந்து மூன்று பெரும் நடிகர்கள் குரலால் வெளி வருவார்கள். அவருடைய உடல் அசைவு, முக பாவம் இவைகளில் நவரசபாவங்களையும் பிழிந்து கொடுப்பார். இந்தத் திறமையை எந்த நடிகரும் இதுவரை பெற்றுவிடவில்லை. ராதா ஒரு பாத்திரத்தில் நடித்தால் அதில் 12 புகழ் பெற்ற நடிகர்கள் மிளிர்வார்கள்.
இன்றைய மிக நவீன, உயர்தர காமேராக்களினால் என்ன output -ஐ எடுக்க ஆசைப்படுகிறோமோ அத்தனை அவுட்புட்டையும் தன் நடிப்பால் தந்து தொழில் நுட்பத்திற்கே சவால் விட்டவர் எம்.ஆர்.ராதா என்பதை அறிவதற்கும் இப்படத்தைப் பார்க்க வேண்டும்.
இந்தத் திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும்.
இன்றைய புலம் பெயர் இளையோர்க்கும், தாயகத்தில் உள்ளோருக்கும் மறுபடியும் காண்பிக்க வேண்டிய திரைக்காவியம் இரத்தக்கண்ணீராகும். இன்று நமது இனம்- நடக்கும் நடை, போகும் பாதை யாவும் ஒரு சமுதாய இரத்தக்கண்ணீர் வருவதற்கு காரணமாகப் போகிறது.
ஆகவே ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு தமிழனும் திருந்தி நடக்க இரத்தக்கண்ணீர் மறுபடியும் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.
திரைப்படங்களில் நடிக்க ஆசைப்படும் கலைஞர்கள் அவதானிக்க வேண்டிய நடிப்பு ராதாவின் நடிப்பாகும்.
எல்லாவற்றிலும் மேலாக 1954 ம் ஆண்டிலேயே இப்படியொரு படத்தை தந்திருக்கிறார்களே என்பது தமிழ் திரையுலகிற்கு பெருமை தரும் விஷயமாகும்.
எம்.ஆர்.ராதா இந்தத் திரைப்படத்தில் கேட்ட சம்பளத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக தம்மிடம் வாங்கிவிட்டதாக டைரக்டர்கள் கிருஷ்ணன் பஞ்சு இருவரும் குறை கூறியிருந்தார்கள். அதே இரட்டையர்தான் பெற்றால்தான் பிள்ளையா படத்தை எடுத்த போது எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டு சிறைக்குப் போனார்.
அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் இரகசியத்தை எம்.ஆர். ராதாவோ அல்லது எம்.ஜி.ஆரோ இறக்கும்வரை வெளியிடாமலே இறந்து போய்விட்டார்கள். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசிய ராதா, வெளிப்படையாக பேச மறுத்த இரகசியம் இதுவாகும்.
சில திரைப்படங்களை காலம் வந்தால்தான் சிறப்பாக ரசிக்கலாம். தமிழினமும், புலம் பெயர் தமிழரும் இரத்தக்கண்ணீர் பார்த்துத் திருந்த வேண்டிய காலம் இப்போதுதான் வந்திருக்கிறது.
No comments:
Post a Comment