Tuesday, 3 August 2010

தென்கொரிய இளைஞர்களின் கிராம முன்னேற்ற பணி

கிராமங்களை முன்னேற்றும் பணியில் தென் கொரிய இளைஞர்கள்


தென் கொரியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், டாக்டர்கள் உள்பட 125 பேர் கொண்ட குழு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சமூக சேவைகளை செய்து வருகிறது. ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தின் உதவியால் இந்த சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்வு...
தென் கொரியாவில் உள்ள தலைமை ஹூண்டாய் அலுவலகத்தின் மூலம் இந்தியா, சீனா, பிரேசில், தைவான் உள்ளிட்ட நாடுகளில் சமூக சேவைகளில் ஈடுபட ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 250 மாணவர்கள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள். 250 பேரும் 2 குழுக்களாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளார்கள்.
2-வது குழு...
இப்போது தமிழகத்துக்கு வந்துள்ள 2-வது குழுவில் 125 பேர் உள்ளனர். இவர்கள் தங்களுக்குள் ஐந்து ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து சேவையில் ஈடுபடுகின்றனர். இரண்டு வாரங்கள் இங்கு தங்கியிருந்து அவர்கள் தங்கள் பணிகளில் ஈடுபடுவர்.
கல்வி மற்றும் சுகாதாரம்: முதல் மூன்று குழுக்கள் ஹூண்டாய் நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளுக்குச் சென்று அங்கு தேவையான கழிப்பிடங்கள், குப்பைத் தொட்டிகள், மாணவர்கள் விளையாடும் இடங்களை மேம்படுத்துதல், கட்டடங்களுக்கு சுண்ணாம்பு அடித்தல், அங்குள்ள குப்பைகள், புற்களை அகற்றுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுகின்றனர். கிராமங்களிலும் வீடுகளுக்குத் தேவையான கழிப்பிடங்களைக் கட்டிக் கொடுக்கின்றனர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை பழக்கவழக்கங்கள், சுகாதாரம் பேணுதல், தொற்று நோய் பரவாமல் தடுத்தல் ஆகியவைப் பற்றி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் பாடல், செய்முறை விளக்கம் மூலம் விளக்குகின்றனர்.
மருத்துவம்:
மீதம் உள்ள 2 குழுக்கள் மருத்துவ முகாமில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 5 டாக்டர்கள் உள்ளனர். பொது மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவ நிபுணர்களும் இதில் அடங்குவர். அப்பகுதியில் உள்ள தனியார் செவிலியர் பள்ளி மாணவிகளின் உதவியுடன் கிராம மக்களுக்கு மருத்துவம் செய்கின்றனர்.
இது குறித்து டாக்டர்கள் குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.எச்.சோ கூறுகையில்,
"இங்குள்ள மக்களின் ஆடை, அவர்களின் செயல்பாடுகளை வைத்தே அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்து விடுவோம். தமிழில் சில வார்த்தைகளைப் படித்து வைத்திருப்பது மேலும் எங்களுக்கு உதவியாக இருக்கிறது. இவர்களுக்குத் தேவையான மருந்துகளை தென் கொரியாவில் இருந்தே கொண்டு வந்துள்ளோம். அவற்றை இலவசமாக விநியோகிக்கிறோம்'' என்றார்.
மருந்துகளுக்கு அனுமதி:
இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் மருந்துகளுக்கு, தென் கொரியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர், இந்திய மருத்துவச் சங்கம் உள்ளிட்டவற்றின் அனுமதி பெற்ற பின்பே மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது. மருந்துகள் முறையாக "சீல்' செய்யப்பட்டே விநியோகிக்கப்படுகிறது.

No comments: