Thursday 19 August 2010

அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி''

மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம்:

அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி''

குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை தன் மனைவி இல்லை என, கோர்ட்டில் மறுத்த அரசு ஊழியருக்கு செருப்படி விழுந்தது.

இச்சம்பவம் கடலூர் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் டி.குமராபுரத்தைச் சேர்ந்தவர் அருள் (50). வரக்கால்பட்டு மின் அலுவலகத்தில் லைன் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தனது முதல் திருமணத்தை மறைத்து, விழுப்புரம் மாவட்டம் அந்தராசிபாளையம் விஜயலட்சுமி (35) என்பவரை மயிலம் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது மனைவி, விஜயலட்சுமிக்கு 9, மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அலுவலகம் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், வாரிசு உரிமையை தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சேர வேண்டும் என அருள் எழுதி வைத்துள்ளார். இதனையறிந்த விஜயலட்சுமி, அருளை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தான் தாய் என்கிற ஆதாரங்களுடன், கடலூர் கலெக்டர் சீத்தாராமனிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, கடலூர் மாவட்ட முதன்மை தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று (18 August 2010) நடந்தது. விசாரணையின் போது, விஜயலட்சுமி தனது மனைவி இல்லை என அருள் கூறினார். விசாரணை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, அருள் தன் வீட்டிற்குச் செல்ல கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக நடக்க முயன்றபோது, வெளியே நின்றிருந்த விஜயலட்சுமி, அருளிடம் சென்று, "கோவிலில் தாலி கட்டி, இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு நா கூசாமல் கோர்ட்டில் என் மனைவி இல்லை என பொய் சொல்லுகிறாயே ' என கேட்டபடி தனது செருப்பை கழட்டி அடித்து, சட்டையைப் பிடித்து உலுக்கி உள்ளார்.

இதனால் அவமானமடைந்த அருள், விஜயலட்சுமியை உதறித் தள்ளி விட்டு மீண்டும் கோர்ட்டுக்குள் ஓடினார். மண்ணை வாரி விட்டு அழுத விஜயலட்சுமியை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: