Saturday, 12 May 2012

அம்பேத்கர் மக்கள் மீது தொகாடியாவின் திடீர் பாசம்!

அம்பேத்கரின் மக்கள் மீது தொகாடியாவுக்கு என்ன திடீர் பாசம்?

முஸ்லிம்கள் கல்வி, அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து சிறுபான்மை நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு காட்டி வரும் இந்துத்துவாவினர் அந்த எதிர்ப்புகளினூடே தவறான வாதங்களையும் முன் வைத்து பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினருக்கு எதிராக திருப்பி விடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறுபான்மை துவேஷத்தை வெளிப்படுத்தி வரும் இந்துத்துவா அமைப்புகளின் முக்கிய பிரிவான விஷ்வ இந்து பரிஷத், மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு வழங்கியிருக்கும் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து ஆட்சேபித்து வருகிறது.

சமூக நீதிக்கு எதிராக சிந்திக்கும் விஷ்வ இந்து பரிஷத்தின் அகில உலக (!) செயல் தலைவரான தொகாடியா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று ஹைதராபாத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த கையோடு அம்பேத்கரின் சிந்தனைக்கு எதிராக சிறுபான்மையினரின் இட ஒதுக்கீட்டை மறுத்துப் பேசியுள்ளார்.

“டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவர்கள் வறுமையிலிருந்து நீங்கவும், முன்னேற்றம் அடையவும், பிற சமூகத்தவரோடு சேர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அம்மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் சாசனச் சட்டத்தில் சாதகமான அம்சங்களை வழங்கியிருந்தார்.

அதே சமயம், இந்திய அரசியல் அமைப்பில் மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை வழங்குவதை டாக்டர் அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். இதற்கு காரணம், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் உண்மையான வளர்ச்சியும் சமூக ஒற்றுமையும் சீர்குலையும் என அம்பேத்கர் எண்ணினார்...'' என்று பேசியிருக்கும் தொகாடியா,

“முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மத்திய அரசு அளித்திருக்கும் இட ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற வேண்டும்; அதோடு, முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளித்ததற்காக டாக்டர் அம்பேத்கரிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்...'' என்றும் கூறியிருக்கிறார்!

தொகாடியாவின் பேச்சை கூர்ந்து கவனித்தால்... முஸ்லிம், கிறிஸ்தவ எதிர்ப்பு மட்டும் அவரது பேச்சில் வெளிப்படுவதை புரிந்து கொள்ள முடியும்.

மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு அளித்திருக்கும் 4.5 சதவீத இட ஒதுக்கீடு மத அடிப்படையில் வழங்கப்பட்டதல்ல என்பது சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களுக்கும், இட ஒதுக்கீட்டின் அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கும் தெரியும்.

மத்திய அரசு முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கொண்டு வந்து அதன் பின்பே இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

அதோடு, மொழிவாரி சிறுபான்மையினரையும் அந்தப் பட்டியலில் கொண்டு வந்து அவர்களின் சமூக முன்னேற்றத்திற்காக இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. 

இதைத் தெரிந்து கொண்ட பின்பும் இந்துத்துவாவிற்கே உரிய கோயபல்ஸ் தத்துவத்தை பிரயோகித்து சிறுபான்மையினருக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார் தொகாடியா.

தொகாடியா நம்புவதைப்போல மத்திய அரசு மத அடிப்படையில்தான் இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது என்றால்... முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மட்டும் வழங்கவில்லை... சீக்கியர்களுக்கும், பார்சிகளுக்கும், பௌத்தர்களுக்கும் சேர்த்தே வழங்கியிருக்கிறது.

ஆனால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டை மட்டும் தொகாடியா எதிர்ப்பது ஏன்?

ஏனெனில் இந்துத்துவாவினரின் கணக்குப்படி சீக்கியர்களும், பௌத்தர்களும் இந்துக்கள். பார்சிகள் மிகச் சொற்பமானவர்கள் என்பதாலும் இவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதாலும் இந்துத்துவா கண்டு கொள்வதில்லை. ஆக, முஸ்லிம், கிறிஸ்தவ எதிர்ப்பை மையப்படுத்தவே இந்துத்துவாவினர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.

இன்னொரு வகையில் பார்த்தால் இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்களாக அரசு முடிவு செய்திருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்போர் யார்?

இவர்களெல்லாம் எந்த மதத்தையும் சாராதவர்களா? பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்தானே இவர்கள்! அப்படியானால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்காக அம்பேத்கரிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்; இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும் என சொல்வாரா தொகாடியா?

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூக ஒற்றுமைக்கு கேடு வரும் என அம்பேத்கர் எண்ணியதாக சொல்கிறாரே தொகாடியா... சமூக ஒற்றுமையைப் பற்றி மத வெறியன் தொகாடியா பேசத் தகுதியிருக்கிறதா?

சரி! இதெல்லாம் போகட்டும். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கருக்கும் சனா தனவாதி தொகாடியாவுக்கும் என்ன சம்பந்தம்?

டாக்டர் அம்பேத்கரின் மக்களை சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கி வர்ணாசிரமம் பேசி அவர்களை சேரிப் பகுதிகளுக்குள் ஒடுக்கி வைத்தது தொகாடியா வகையறாக்கள் தானே... அம்பேத்கரின் மக்கள் மீது தொகாடியா சார்ந்த சமூகம் நிகழ்த்திய வன்கொடுமைகளைத் தாங்காமல் தானே இந்து மதத்தை விட்டு வெளியேறி லட்சக்கணக்கான மக்களை அழைத்துச் சென்று புத்த மதத்தில் சேர்ந்தார் அம்பேத்கர்.

தொகாடியா சார்ந்த இந்துத்துவாவினர் கடந்த ஜனவரி மாதம் அமலாபுரத்தில் அம்பேத்கரின் சிலையை உடைத்தார்களே அப்போது தொகாடியா கண்டனம் தெரிவிக்கவில்லையே!

இப்போது என்ன அம்பேத்கரின் மக்கள் மீது திடீர் பாசம்?

அம்பேத்கரின் மக்களுக்கு தொகாடியாவின் சமூகம் இழைத்து வந்த, இழைத்துக் கொண்டு வருகிற வன்கொடுமைகளையெல்லாம் அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவதன் மூலம் அந்த மக்கள் மறந்து விடுவார்கள் என்று தொகாடியா நினைக்கிறார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவது இந்துத்துவாவின் அரசியல் சூழ்ச்சி  தான். சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களின்போது அம்பேத்கரின் மக்களை பயன்படுத்தத் துடிக்கும் தொகாடியாவின் நிஜ முகத்தை அந்த மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால் தொகாடியாவின் திடீர் பாசம் விஷத்தன்மை வாய்ந்தது என்று அம்பேத்கரின் மக்கள் புரிந்தே வைத்திக்கிறார்கள்.

- ஹிதாயா

தொகாடியாவின் பேச்சை தடை செய்ய வேண்டும்!
தொகாடியாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆலமி ஜம்யிய்யதுல் மஷய்க் என்கிற முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட அமைப்பு தொகாடியா பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஹைதராபாத் காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏ.ஜெ.எம். அமைப்பின் தலைமை ஆலோசகரான மவ்லானா சையத் ஷா அஸôர் ஹுசைனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீபத்திய வகுப்புக் கலவரம் காரணமாக ஹைதராபாத் பழைய நகரிலும் கலவர பதட்டம் நிலவி வரும் சூழலில், நகரின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை கோபப்படுத்தும் வகையில் பேச தொகாடியா அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது சமீபத்திய பேச்சு, முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை ஆட்சேபிக்கும் வகையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள் என்று பொய்யாகக் கூறி தாழ்த்தப்பட்ட - பழங்குடியினரை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடும் வகையிலும் அமைந்திருக்கிறது. தொகாடியா சொல்வதைப்போல முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பின் தங்கிய சமூகப் பொருளாதார அடிப்படையில்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் பார்க்கப்போனால் தாழ்த்தப்பட்ட - பழங்குடியினருக்குத்தான் மத அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும். தாழ்த்தப்பட்ட - பழங்குடியினர் அனுபவிக்கும் இட ஒதுக்கீடு மற்றும் இதர பயன்களை வேறு மதத்தைச் சேர்ந்த எவரும் பெறமுடிவதில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை.

பொய்யான தகவல்களுடன் ஆத்திரமூட்டும் வகையில் பேசும் தொகாடியாவின் பேச்சுக்களுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் அவரது பேச்சுகளால் ஹைதராபாத் நகரில் சமூக நல்லிணக்கம் கெடும் என தெரிவித்திருக்கிறார் சையத் ஷா அஸார் ஹுசைனி.

Source: http://goo.gl/4Qb53

No comments: