Wednesday, 2 May 2012

சிறீ சிறீ ரவி சங்கர் = ஆதிக்கத்தின் ஆன்மா


“அரசு பள்ளிக்கூடங்களை நடத்துவோரின் முறையற்ற நிர்வாகமும்,  அசிரத்தையும் குழந்தைகளை சமூகத்தில் தனிமைப்படுத்தி எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. ஆகையால் அரசு,  பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டியதில்லை. நாட்டின் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் அல்லது இதர குழுவினரிடம் ஒப்படைக்கவேண்டும்.

அரசு பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் மாவோயிஸத்தையும்,  ஹிம்சா மார்க்கத்தையும் தேர்வு செய்கின்றனர். தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் ஒருபோதும் இவற்றால் ஈர்க்கப்படுவதில்லை. அவர்கள் முன்மாதிரி குடிமக்களாக வளருகின்றனர். ஆசிரியர்கள் அவர்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர்” 

---- ஜய்ப்பூரில் நடந்த விழாவில் வாழும் கலை ரவி சங்கர்

இந்தியாவில் அறியப்படும் மதப்புனிதர்களில் இரந்து வாழும் சாதுக்கள்,  வேத விற்பன்னர்களான ரிஷிகள், சீர்திருத்தவாதிகளான சந்துக்கள்,  மடாதிபதிகளான ஸ்வாமிகள், கோயில்களில் பூஜை செய்யும் பூஜாரிகள் இருக்கின்றனர். இந்த பட்டியலில் வாழும் கலை வெள்ளாடைத்துறவியை எங்கு கொண்டுபோய் வைப்பது? என்ற குழப்பம் ரொம்ப நாட்களாகவே இருந்து வந்தது.
Sri_Sri_Ravi_Shankar_400 
அதை இன்னும் காலந்தாழ்த்த விடாமல் தீர்த்து வைத்த வாழும் கலை துறவி ரவிசங்கருக்கே முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

தனியார் மயம், தாராளமயம் என்ற பதாகை ஏந்தி வரும் கார்ப்பரேட் பெரு வணிக வல்லாதிக்க விளைவுகளின் எதிர்விளைவுதான் மாவோயிஸ்டுகளும், நக்ஸல்பாரிகளும். விளைவுகளின் பக்கம் தன்னை தெளிவாக அடையாளப்படுத்திக்கொண்ட வாழும் கலையாருக்கு கார்ப்பரேட் மடாதிபதிகள் என்ற புதிய நாமகரணம் கனகச்சிதம்.


நமது வாழும் கலை கார்ப்பரேட் ஸ்வாமிகள் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், அலுவலர்களுக்கு ஸுதர்சன் கிரியா என்ற பெயரில் மன அழுத்தத்தைப் போக்கவும், வேலைத்திறனை, வீரியத்தை கூட்டவும் கட்டணம் பெற்றுக்கொண்டு மூச்சு பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றார்.

முதலாளியும், வாடிக்கையாளர்களும் கார்ப்பரேட் ஆசாமிகளாச்சே? எனவே தொழில் நுட்ப கமுக்கத்தை வேறு யாரும் தட்டிக்கொண்டு போய் விடக்கூடாது என்கிற ஒரு கார்ப்பரேட்டுக்கே உரிய முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஸுதர்சன் கிரியா என்ற பெயருக்கு மேலே (R) என்ற ஒற்றை ஆங்கில எழுத்தைப் பயன்படுத்துகின்றார். R என்ற எழுத்துக்கு பதிவு செய்யப்பட்ட வணிகக்குறி (registered ) என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த வீரியம் கூட்டும் மூச்சுப் பயிற்சிக்கு வெளிநாட்டைச் சார்ந்த 19 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ரெகுலர் கஸ்டமர்களாக இருக்கின்றனர். அந்தப் பட்டியலிலிருந்து கொஞ்சம் சாம்பிள் பாருங்கள்:

NASA
US army national guard
WORLD BANK ....

அமெரிக்கா,  ஸ்விட்சர்லாந்து, ஹாலந்து, பிரேஸில் போன்ற நாடுகளிலும் இவருக்கு வாடிக்கையாளர்கள் உண்டு.

வாழும் கலை ரவி சங்கர் ஏற்கனவே இராக், இலங்கை நாடுகளுக்குப் போய் தையல் எந்திரங்கள் வினியோகித்து விட்டு வந்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானுக்கும் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்திருக்கின்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்த மூன்று நாடுகளுமே உள்நாட்டுப் போரினாலும், மனித வெடிகுண்டு தாக்குதல்களாலும் கூடுதல் பாதிக்கப்பட்டவை.

இங்கு போரின் நேரடி,  பக்க விளைவுகளினால் மனதளவில் பாதிக்கப்பட்ட நபர்கள் நிறைய இருப்பார்கள் என்பதை துல்லியமாகக் கணித்து தனது மூச்சுப் பயிற்சி டிரேட் மார்க்கை சந்தைப்படுத்த புரோமோஷனல் டூர் போய் வந்துள்ளார்.

இனி உள்நாட்டில் தனது வாடிக்கையாளர்களை கூட்டுவதற்கு என்ன வழி என்று தலையைப் பிய்த்துக்கொண்ட மனிதருக்கு ஒரு ரூட்டை நமது உள்துறை அமைச்சகம் சிறிய கோடாக போட்டுக் கொடுத்தது. அதாவது மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் அந்த செல்வாக்கை குறைக்க ராமகிருஷ்ணா மிஷன், கிறிஸ்தவ மிஷனரிகள் உள்ளிட்ட மத அமைப்புக்களை ஈடுபடுத்துவது என முடிவு செய்தது உள்துறை அமைச்சகம்.

இந்த இடைவெளியில்தான் தனது அஸ்திரத்தை எடுத்து விட்டார் வாழும் கலை.

"அரசே! பள்ளிக்கூடங்களை நடத்துவது உன் வேலையல்ல. அவற்றை இழுத்து மூடு! உனக்கு வேண்டிய மாணவர்களை உன் தேவைக்கேற்ற அளவில் சிந்தனைத்திறனில், ரசனையில் நான் செதுக்கித் தருகின்றேன்" என அழையா விருந்தாளியாக ஆஜரானார்.

கார்ப்பரேட் உலகு நீடிக்க வேண்டுமெனில் அதற்கான நுகர்வு திரள், சேவகர் பட்டாளம்,  தாங்கு தளம் போன்றவை தங்கு தடையின்றி உற்பத்தியாகிக்கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான் இந்த கோதுமை நிற  'மக்காலே பிரபு' கல்விக்கடவுள் சரஸ்வதி தேவியை தனக்கு டிரேட் மார்க் உரிமை பண்ணி கேட்கின்றார்.

வாழும் கலை ஸ்வாமிக்கு ஒரு கல்லில் பல மாங்காய்.

முழுக்க முழுக்க சேவைத்துறையாக இருக்க வேண்டிய கல்வித்துறையை தனியார் மயமாக்குவது மூலம் கொழுத்த லாபம் பார்க்கலாம்.

அத்துடன் தனியார் கல்விக்கூடங்களிலிருந்து வெளிவரும் வெள்ளைக்காலர் கனவான்களின் தூசு படியா வேலைத்தேடலை கார்ப்பரேட் நிறுவனங்களின் மாய வாயில்களில் கொண்டு போய் முற்றுப்பெற வைத்த மாதிரியும் ஆச்சு..

கார்ப்பரேட் முதலாளிகள் பிழிகின்ற பிழியில் வாக்கும் மெய்யும் நைந்து தொய்ந்து வரும் ஊழியர்களுக்கும் சுதர்ஸன் கிரியா வகுப்பு நடத்தி காசைப்பார்த்த மாதிரியும் ஆயிற்று. 

ஒரு கல்விச்சாலையை திறப்பவன் பல சிறைச்சாலைகளை மூடுகின்றான்”----- விக்டர் ஹீயுகோ.

பொதுக்கல்வியை ஒழிப்பதன் மூலம் அறியாமையையும்,  தற்குறிகளையும், குற்றங்களையும் உருவாக்குவதில் இந்திய அரசுகளும்,  குடிமைச்சமூகமும் எப்படி தொழிற்படுகின்றன என்பதை ஒரு ஒற்றை நோட்டத்தில் காண்போம். 

-----1947 ஆம் ஆண்டின் அய்.நா. மனித உரிமைப்பிரகடனத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. அதன் பிரிவு 26இல் ஆறிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய, இலவசக்கல்வி அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

-------- இன்னும் 10 ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டு விடும் என இந்திய அரசு 1950 ஆம் ஆண்டு கூறியது.

-------- இந்த வருட ஏப்ரல் 1 ஆம் தேதியோடு கல்விக்கான உரிமைச்சட்டம் இயற்றி இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. 

1947,  1950 வருட பிரகடனங்கள்,  2010 ஆண்டின் சட்டம்,  இது போக வந்து போகும் ஆட்சியாளர்கள் கொடுத்து காணாமல் போன கல்வி தொடர்பான ஏராளமான வாக்குறுதிகள் என்ற இந்த காகிதத் தோரணங்களின் இடையே பருண்மை அம்மணமாக உலா வருகின்றது.

இந்தியத் திருநாட்டில் இன்னும் கல்விக்கூடங்களை எட்டிப்பார்த்திராத குழந்தைகளின் எண்ணிக்கை 40 மில்லியன்களைத் தாண்டி விட்டது.

கல்வியானது மக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை உரிமையாகும் என்பது உலகமறிய ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாக இருந்தபோதிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விக்கொள்கையின் விளைவாக கல்வியானது மெல்ல மெல்ல தனியார் மயமாக்கப்படுகின்றது.

இந்த தனியார்மயமாக்கத்திற்கு வழிவிடும் வகையில் அரசு பள்ளிக்கூடங்களின் கழுத்து நெறிக்கப்படுகின்றது. பல அரசு பள்ளிக்கூடங்களில் பெயர்ப்பலகையைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.

நகர்ப்புறங்களில் வளர்ச்சியைக் காரணம் காட்டி சாதாரண மக்களை நகருக்கு வெளியே தூக்கி எறிந்து விடுகின்றனர். மேட்டுக்குடிகளுக்கோ இருக்கவே இருக்கின்றது தனியார் பள்ளிக்கூடங்கள். இவற்றின் விளைவாக நகர்ப்புறங்களில் இயங்கும் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மிக எளிதாக இழுத்து மூடி விடுகின்றனர்.
govt_school_380 
மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வாரம் ஒரு முறை மட்டும் செல்கின்றனர். அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கும் சேர்த்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு மலை இறங்கி விடுகின்றனர்.

கட்டமைப்பு வசதி குற்றுயிரும் குலைஉயிரும் ஆக்கப்பட்ட அரச கல்விக்கூடங்களின் காட்சிகள் இவையென்றால் முழு வசதிகளுடன் இயங்கும் அரச,  தனியார் கல்விக்கூடங்களில் கற்க வரும் மாணவர்களின் பிஞ்சு மனங்கள் எப்படி இன,  மத வேறுபாட்டால் குதறப்படுகின்றன என்பதைப் பாருங்கள்.

முன்னாள் துணை வேந்தரும், கல்விப் போராளியுமான வசந்தி தேவி அவர்கள் கூறியுள்ளது போல் இந்திய கல்வி முறையானது சமத்துவமற்ற சாதீய பாகுபாடுகளினால் சிதைக்கப்பட்டதாகத்தான் இருக்கின்றது.

இந்தியாவின் கிராமப் பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல நகர்ப்புறத்தில் உள்ள அரசு,  தனியார் நடத்தும் பள்ளிக்கூடங்களிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் சாதீய மற்றும் சிறுபான்மை வெறுப்பு தலைவிரித்தாடுகின்றது.

தலைநகர் புதுதில்லியிலுள்ள ஹிந்து நிர்வாகிகளையும், ஆசிரியர்களையும் கொண்ட அரசு,  தனியார் கல்விக்கூடங்களில் முஸ்லிம் சிறார்களை சேர்ப்பதில்லை அல்லது முஸ்லிம் சிறார்கள் அவற்றில் சேர விரும்புவதில்லை. அப்படி சேர விரும்பாததற்கு அச்சிறார்கள் சொல்லும் காரணம்:

எங்களின் உடை, உணவு பழக்க வழக்கங்களை ஆசிரியர்கள் கிண்டல் செய்கின்றனர். துலுக்கன் என்ற வசைச்சொல்லுக்கு சமமான மியான் என்ற ஹிந்தி சொல்லாடல் கொண்டு ஆசிரியர்கள் முஸ்லிம் மாணவர்களை அழைக்கின்றனர். இதன் காரணமாக வகுப்பிலுள்ள ஹிந்து மாணவர்கள் அனைவரும் உடன் பயிலும் முஸ்லிம் மாணவர்களை அப்படியே அழைக்கின்றனர்.

ஓடி ஒளித்து விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டிலும் கூட முஸ்லிம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள் என உடன் பயிலும் ஹிந்து மாணவர்களை கேட்டபோது மியான்களை நம்ப முடியாது என்கின்றனர்.

இதன் விளைவாக முஸ்லிம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் கல்விக்கூடங்களில் சேர்க்கின்றனர்.

2007—2011 ஆம் ஆண்டு வரை ஆவணப்படுத்தப்பட்ட விவரங்களின் படி இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் உயர் சாதியைச் சார்ந்த ஆசிரியர்களாலும்,  உடன் பயிலும் மாணவர்களாலும் சாதிய ஏளனம், மிரட்டல், புறக்கணிப்பு,  வசை பாடல் போன்றவற்றிற்கு ஆட்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை 18. 

ஆவணப்படுத்தப்படாத தற்கொலைகளும், கொலைகளும் இதை விட கூடுதலாகும்.

இந்திய தொழில்நுட்பக்கழகம்,  அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்,  இந்திய அறிவியல் கழகம், வேளாண் அறிவியல் கல்லூரி, பொறியியற் கல்லூரி, செவிலியர் பயிற்சி கல்லூரி, தேசீய நோய் தடுப்புத்திறனியல் கழகம், விளையாட்டு ஆணையம் போன்ற இந்தியாவின் உயர்ரக பெருமைமிகு அரசு கல்வி நிறுவனங்களில்தான் இந்த தலித் மாணவர்கள் உயர் சாதி வெறியால் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கின்றனர். 

அரசு பள்ளிகளில் சீர்கேடுகள் உள்ளது உண்மைதான். அதை சீர்படுத்துவது பற்றி உரையாடாமல் மொத்தமாக அரசு பள்ளிகளையே இழுத்து மூடி தனியார் பகல் கொள்ளைக்காரர்களின் கையில் அவற்றை ஒப்படைக்கச் சொல்லுகின்றார் வெள்ளாடைத் துறவி ரவி சங்கர்.

தலையில் உள்ள நோய் கட்டிக்கு சிகிச்சையாக தலையைச்சீவுவது போல் உள்ளது.

இங்கு தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஜெயலலிதா அரசு எடுத்த நிலைப்பாட்டைக் கண்டித்து பல மானுட நேச கல்வியாளர்கள் களம் இறங்கினர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வந்தவுடன் கல்விப்போராளிகளின் போராட்டம் அமைதியடைந்து விட்டது.

கல்வியானது முழுவதுமாக மக்களுக்கு சொந்தாமாகும் வரையில் பல்வேறு நிலைகளாகவும், கட்டங்களாகவும் நகர்த்தப்பட வேண்டிய போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.                      

"ரசு பள்ளிகளை தனியார் மயமாக்குங்கள். மாணவர்களை முன்மாதிரி குடிமக்களாக வளர்த்தெடுக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வர்” என கார்ப்பரேட் உலகின் ஆன்மா ஆசை வார்த்தை காட்டி தூண்டில் போடுகின்றது ஒரு புறம். 

"ஏழை மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதால்  கல்வி, தரம், ஒழுக்கம் கெட்டு விடும். ஆசிரியர்களிடம் ஒழுங்கு குலையும்.” என மறுபுறம் கொடுவாளை உயர்த்துகின்றது கார்ப்பரேட் உலகு.

கல்விக்கான உரிமைச்சட்டம் நடுவணரசால் இயற்றப்பட்டபோது சென்னை அடையாறில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகிகள் எய்த சொற்கள் இவை.
கார்ப்பரேட் சாமியார்களும், அவர்கள் இயக்கும் உலகும் அந்தரத்தில் ஒன்றும் உருவாகி சுழல்வதில்லை. இந்நிலவுலகில் அவை வேரூன்றி கிளை பரப்பிட ஒரு உழுது பண்படுத்தப்பட்ட நிலமும் கரிசனையான தோட்டக்காரன் ஒருவனும் வேண்டும் .

எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலை தளத்தில் அவரது வாசகர் ஒருவரின்
ஜக்கி, ஸ்ரீஸ்ரீ, பாபா, நித்தி கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா? என்ற கேள்விக்கு நீண்ட நெடிய விடை அளிக்கின்றார்.

அதிலிருந்து சில பகுதிகள் இதோ:
நவீன கல்வி என்ன செய்கிறதென்றால் இளமையிலேயே நம்முடைய தர்க்கபுத்தியை வலுவானதாக ஆக்கி நம்முடைய நம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறது.
பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய மனநிலை இல்லாமலாகிவிடுகிறது. ஒவ்வொன்றையும் காரண காரிய அறிவுடன் புரிந்துகொள்ளவேண்டிய ஆவலை உருவாக்கிவிடுகிறது.
சாதாரணமாக மனிதர்கள் இளமைப்பருவத்தைத் தாண்டி வாழ்க்கையின் சிக்கல்களையும் தற்செயல்களையும் சந்திக்கும் தருணத்துக்கு வரும்போது,  தங்கள் தர்க்க புத்தியின் எல்லைகளைத் தாங்களே உணர்ந்துகொண்டு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதே வழக்கம்.
மிகச்சிலரே அப்படி உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது
அவர்களுக்காகவே ஜக்கி, ரவிசங்கர் போன்ற நவீனகுருமார்கள் உருவாகி வரவேண்டியிருக்கிறது. அவர்கள் செய்யும் பணியை ஞான-கர்ம சமுச்சயம் என்று சொல்லலாம்.
ஞானமார்க்கத்தின் வழிகளையும் விடைகளையும் எளிமைப்படுத்தி கர்மமார்க்கத்தில் செல்பவர்களுக்கு அளிக்கிறார்கள்.
அதற்கான தேவை உள்ளது என்பதையே அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் செல்வாக்கு காட்டுகிறது.
ஞானம் தேடுபவர்கள் சிலர் என்றால் லௌகீகமான விளக்கமும் வழிகாட்டலும் தேடுபவர்கள் பல கோடி.
ஆகவே அவர் தன் குரல் அனைவரையும் சென்றடைவதற்காக அமைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்லும் கார்ப்பரேட் குரு என்ற முத்திரை விழுகிறது”.

கார்ப்பரேட் ஆன்மாவை விதைக்க தோட்டக்காரர் என்ன அழகாக பக்தர்களின் மன நிலத்தை சமன் செய்கின்றார் பாருங்கள்.

மானுட நேய மிக்க கல்விப்போராளிகள் தங்களது இலக்குகளை தெளிவாக வகுத்துக் கொள்வது நல்லது.

..... சாளை பஷீர் ....

1 comment:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அருமையான மிகவும் பயனுள்ள கட்டுரையை தந்தமைக்கு நன்றி...உங்களின் இப்பணி தொடர வாழ்த்துக்கள்..தொடர்ந்து ஆக்கபூர்வமான கட்டுரையை வெளியிடுங்கள்...எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள்.
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

குறிப்பு:கருத்து கூறுவோரின் பயனுக்காக வோர்ட் வேரிபிகேசனை(COMMENT)தூக்கவும்,இல்லையென்றால் கருத்துகூற பலரும் விரும்பமாட்டார்கள்...