Wednesday, 27 April 2011

பாஜக நிலம் ஒதுக்கியது செல்லாது! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!



பாஜக நிலம் ஒதுக்கியது செல்லாது!
உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

அரசியலில் 'தூய்மையானவர் நாங்கள்தான் என்று ஜம்பம் அடிப்பதில் பாஜகவுக்கு நிகர் யாரும் இல்லை. ஊடகங்களும் அவர்களின் பிரச்சாரகர்களாக செயல்பட்டு அதை மிகைப்படுத்துகின்றன. தெஹல்கா இணைய தளம் பங்காரு லஷ்மணன் பணம் வாங்குவதை வீடியோ எடுத்து ஒளிபரப்பி பாஜகவுக்கும், தூய்மைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியது.

அந்த வரிசையில் பாஜகவின் அடுத்த ஊழல் இப்போது சந்தி சிரிக்க ஆரம்பித்துள்ளது. மக்கள் நலப் பணிகளை செய்து வரும் இயக்கங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு ஆளும் அரசுகள் வருமான வரியில் சலுகைகள், நிதி உதவிகள், நிலம் ஒதுக்கீடு செய்தல் ஆகியவைகளை வழங்குவது இயல்பான ஒன்றுதான். ஆனால் விதிமுறைகளை மீறி மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த உமாபாரதி பாஜக அறக் கட்டளைக்கு நிலம் ஒதுக்கியதுதான் தற்போது பிரச்சினைக்குள்ளாகியுள்ளது.

பாஜக தலைவர்களுள் ஒருவராக இருந்து மறைந்த குஷாபாவ் தாக்கரே பெயரில் அறக்கட்டளை ஒன்று பாஜகவினரால் துவங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, வெங்கையா நாயுடு, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜகவின் முன்னணி தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த 2004ம் ஆண்டில் மத்தியப் பிரதேச முதல் மந்திரியாக இருந்த உமாபாரதி குஷாபாவ் தாக்கரே அறக்கட்டளைக்கு 30 ஏக்கர் நிலம் ஒதுக்கினார். இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அகில பாரதிய உபோக்தா காங்கிரஸ் என்ற அமைப்பு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாஸ்வதியா கிராமத்தில் இருந்த அரசுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை சட்ட விதிகளை மீறி அறக்கட்டளைக்கு ஒதுக்கி உள்ளது. அரசின் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு வந்தது.

மத்திய பிரதேச அரசு, "அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ள அறக்கட்டளைக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் இடம் ஒதுக்கீடு செய்கின்றன. எனவே அதில் தவறு எதுவும் இல்லை. நில ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக இருந்தால் மத்திய அரசு ஒதுக்கிய நிலங்கள் உள்பட எல்லாவற்றையும் சமமாக பார்க்க வேண்டும். அனைத்தையுமே உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக ஆய்வு செய்ய வேண்டும்...'' என வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 06-04-2011 அன்று, "2004ம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நில ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படுகிறது...'' என்று தீர்ப்பு கூறினர்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி, "ஊழலுக்கு எதிராக போராடுவதாக பாஜக கூறி வருகிறது. ஆனால் செயலில் காட்டுவதில்லை. கர்நாடகா, மத்தியப் பிரதேசம் என அது தொடர்கிறது. மத்தியப் பிரதேசத் தில் ரூ. 60 கோடி மதிப்பிலான நிலத்தை ஒரு ரூபாய்க்கு ஆர்.எஸ்.எஸ். சார்பு அறக்கட்டளைக்கு வழங்கி உள்ளனர். நில ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்...'' என்று கூறியுள்ளார்.

நேர்மை வேடம் போட்டு வந்த பாஜகவினருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.


- அபு சுபஹான்

No comments: