Thursday, 4 November 2010

பாபர் மஸ்ஜிதை மீட்க என்ன வழி?

Source: http://goo.gl/SZjoI



பாபர் மஸ்ஜிதை மீட்க என்ன வழி? Aloor Shanavas


1949 டிசம்பர் 22 ஆம் நாள் நள்ளிரவில், பாபர் மஸ்ஜிதின் உள்ளே ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த ராமருக்கு, 60 ஆண்டுகளுக்குப் பின் 'பிறப்புச் சான்றிதழ்' வழங்கி தீர்பளித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம்.

இனி, காசியிலும், மதுராவிலும், நாடு முழுவதிலும் உள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் இந்துக் கடவுள்களைப் பெற்றெடுக்கின்ற பெரிய வேலையை ஆர்.எஸ்.எஸ் தொடங்கி விடும்.

அடுத்தடுத்து கிருஷ்ணருக்கும், அனுமாருக்கும், விநாயகருக்கும், இந்துத்துவத்தின் ஆயிரக்கணக்கான கடவுள்களுக்கும் பிறப்புச் சான்றிதழ் கொடுக்கும் வேலையில் நீதிமன்றங்கள் மூழ்கி விடும்.

முஸ்லிம்களின் உரிமைகளைக் காவு கொடுக்கவும், இந்துத்துவ சக்திகளுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கவும் செய்கின்ற வழமையான கடமையை ஆற்றுவதற்கு அரசுகளும், அரசியல் கட்சிகளும் முனைந்து விடும்.

பாபர் மஸ்ஜித் விசயத்தில் அரசுகளும், நீதிமன்றங்களும் தொடர்ந்து முஸ்லிம்களை வஞ்சித்து வருகின்றன என்ற வரலாற்று உண்மை தெரிந்த பிறகும்,
மாற்று வழிமுறைகளைப் பற்றி சிந்திக்காமல், அரசையும், நீதிமன்றத்தையும் நம்பச் சொல்லி முஸ்லிம்களைத் தவறாக வழிநடத்தும் இயக்கத் தலைமைகள்,
'இனி உச்ச நீதி மன்றம் இருக்கிறது; நம்பிக்கை வைப்போம் அமைதி காப்போம்' என்று பழைய பல்லவியையே திரும்பப் பாடும்.

இவ்வாறு, இந்துத்துவ சக்திகளும், நீதி மன்றங்களும், ஆளும் அரசுகளும், அரசியல் கட்சிகளும், அறிவுக் கூர்மையோ, தூரநோக்குப் பார்வையோ இல்லாத முஸ்லிம் தலைமைகளும் அவரவர் வழியில், அவரவர் வேலைகளில் மூழ்கி விடுவார்கள். அப்பாவி முஸ்லிம்களாகிய நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதுதான் நம்முன் இருக்கும் மிகப்பெரும் கேள்வி?

பாபர் மஸ்ஜித் பிரச்சனையில் இந்திய முஸ்லிம்கள் முழுக்க முழுக்க தோல்வி அடைந்திருக்கிறோம் என்பது தான் நிதர்சன உண்மை.
''நாம் ஏமாற்றப் பட்டிருக்கின்றோம்; வஞ்சிக்கப் பட்டிருக்கின்றோம்; நம்பவைத்து கழுத்தறுக்கப் பட்டிருக்கின்றோம்'' என்றெல்லாம் ஒப்பாரி வைப்பதை விட, நமது தோல்வியை ஒப்புக் கொள்வது தான் நமது மீட்சிக்கான ஒரே வழி.

'இந்துத்துவ சக்திகள் வெற்றியடைந்து விட்டார்களே' என்று புலம்புவதை விட்டு விட்டு, நாம் ஏன் தோல்வியடைந்தோம் என்ற சுய பரிசோதனையில் முஸ்லிம்கள் இனி ஈடுபட வேண்டும்.

பாபர் மஸ்ஜிதை ராமஜென்ம பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு, பரப்புரை செய்து, வியூகம் அமைத்து, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகால உழைப்புக்குப் பின் இன்றைக்கு இந்துத்துவ சக்திகள் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அவர்களது அறுவடைகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிற நாம் எப்போதாவது அவர்களது திட்டமிடுதலையும் உழைப்பையும் கொஞ்சமாவது புரட்டிப் பார்த்திருக்கிறோமா?

பாபர் மஸ்ஜிதை அபகரிக்க அவர்கள் வகுத்த ஆயிரக்கணக்கான வியூகங்களில் ஒன்றையாவது பாபர் மஸ்ஜிதை மீட்க நாம் வகுத்தோமா? நமது பலவீனங்களை மறைத்து விட்டு, எதிரிகள் பலம் பெறுவதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் எப்படி நமக்கு மீட்சி வரும்?
அத்தகைய பலத்தை நாம் அடைவதற்காக வேறு என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? நம்மிடம் ஒரு புண்ணாக்கும் கிடையாது என்பது நமக்குத் தெரிகிறதோ இல்லையோ இந்துத்துவ சக்திகளுக்கு அது மிக நன்றாகவே தெரியும்.

''நேற்றைய வரலாற்றைப் படிக்காமல், நாளைய வரலாற்றைப் படைக்க முடியாது'' என்று சொல்வார்கள். நாளைய வரலாற்றை நாம் படைக்க வேண்டுமெனில் நம்மை வீழ்த்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் வரலாற்றை நாம் முதலில் படிக்க வேண்டும். முள்ளை முள்ளால் அகற்ற வேண்டும் என்பது போல ஆர்.எஸ்.எஸ்ஸின் சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் முறியடிக்க வேண்டும்.

'அரசியலை இந்து மயமாக்கு, இந்து மதத்தை ராணுவ மயமாக்கு' என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படைக் கொள்கை. இந்த இரட்டை வரிகளின் செயல் வடிவத்தைத் தான் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல்வேறு வகையில் நாம் கண்டு வருகின்றோம்.

1922 இல் சாவர்க்கர் எழுதிய 'இந்துத்துவா' என்னும் நூலைப் படித்த ஹெட்கேவார், அந்த நூலில் கூறப்பட்டிருந்த கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
நூலை எழுதிய சாவர்க்கரை சந்தித்து உரையாட வேண்டும் என்று பெரிதும் ஆவல் கொண்டார். 1925 மார்ச்சில் சாவர்க்கரும் ஹெட்கேவாரும் சந்தித்தனர்.
பின்பு ஹெட்கேவாரால் 1925 செப்டம்பரில் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப் பட்டது.

ஆர்.எஸ்.எஸ் தொடங்கப் பட்டதிலிருந்து ராமர் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் இல்லை என்கிற அளவுக்கு அதன் ஒவ்வொரு அசைவுகளிலும் ராமர் இருந்தார். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இதிகாசப் போரில் ராமர் ராவணனை முறியடித்தார் என்று சொல்லப் படும் விஜயதசமி நாளில் தான் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப் பட்டது. இராமர் பிறந்த நாள் என்று சொல்லப்படும் ராம நவமி நாள் அன்றுதான் ஆர் எஸ் எஸ்ஸுக்கு பெயர் சூட்டப்பட்டது. வடிவத்திலும் வண்ணத்திலும் ராமருடைய கொடி என்று கருதப்படும் காவிக் கொடிதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியக் கொடியானது.


இந்தியாவை இந்து நாடாக உருமாற்ற வேண்டுமெனில் ராமரின் பெயரில் கலகத்தை தூண்ட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் திட்டம் வகுத்தது. தனது திட்டத்தை செயல் வடிவமாக்க ஆர்.எஸ்.எஸ் கையிலெடுத்த முதல் ஆயுதம் கடப்பாறையல்ல. கடப்பாறைகளை விடவும் பல ஆயிரம் மடங்கு வலிமை உடைய இளைய தலைமுறையை நோக்கிச் சென்றது.20 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வளைத்துப் பிடித்து அவர்களின் பிரஷ்ஷான மூளையில் ராமரை நுழைத்தது. 'பள்ளிக் கூடங்களை இந்துத்துவத் தத்துவங்களைப் பரப்புவதற்கான பட்டறைகளாக மாற்றுங்கள்' என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாம் தலைவரான கோல்வால்கர் உத்தரவிட்டார். அவரது கட்டளையை ஏற்று பள்ளிக் கூடங்களை நிறுவுவதில் தனிக் கவனம் செலுத்தியது ஆர்.எஸ்.எஸ்.

1942 இல் 'முதல் இந்துத்துவப் பள்ளிக்கூடம்' தொடங்கப்பட்டது. தற்போது 20,000 க்கும் மேற்பட்ட ஆரம்ப,நடுநிலை,உயர்நிலைப் பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ் நடத்தி வருகிறது. இந்த பள்ளிக் கூடங்களில் சுமார் இருபது லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். 80,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் இந்தப் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன.

சரசுவதி பால சிசு மந்திர், பாரதீய வித்ய நிகேதன், கீதா வித்யாலயா போன்ற பெயர்களிலும், தமிழகத்தில் தமிழ் கல்விக் கழகம், விவேகானந்தா வித்யாலயா ஆகிய பெயர்களிலும் அவை இயங்கி வருகின்றன. பள்ளிக் கூடங்களைத் தவிர நூற்றுக்கணக்கான கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் இயங்கும் கல்விக் கூடங்களில் நடத்தப்படும் பாடங்கள் முழுவதிலும் ராமரைப் பற்றிய செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளுக்கான பாட நூல்களில் கேள்வி-பதில் வடிவில் ராமர் கோவில் பற்றிய சிந்தனைகள் விதைக்கப் படுகின்றன.

கேள்வி: 1528 இல் எந்த முகலாய ஆக்கிரமிப்பாளரால் ராமர் கோவில் இடிக்கப்பட்டது?
பதில்: பாபர்.

கேள்வி: பாபர் மஸ்ஜித் ஏன் பள்ளிவாசல் இல்லை?
பதில்: இன்று வரை அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்தவில்லை.

கேள்வி: கிபி 1528 முதல் கிபி 1914 வரை ராமர் கோயிலை மீட்பதற்காக எத்தனை ராம பக்தர்கள் தங்கள் உயிரை கொடுத்துள்ளனர்?
பதில்: மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பக்தர்கள்.

இப்படி பட்டியலிட முடியாத அளவுக்கு நீளுகின்றன கேள்வி-பதில்கள்.

பாபர் மஸ்ஜித் இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தரம் வீர் சர்மா, எந்தப் பள்ளிக் கூடத்தில் எந்தப் பாடத்திட்டத்தைப் படித்திருப்பார் என்று இப்போது விளங்க முடிகிறதா?

1942 லேயே பள்ளிக் கூடங்களை ஆர்.எஸ்.எஸ் தொடங்கி விட்டது என்னும் போது, இன்றைக்கு நீதிபதிகளாகவும், உயர் அதிகாரிகளாகவும், தொல்லியல் ஆய்வாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் இந்தியா முழுவதும் கோலோச்சி இருப்பவர்கள் எங்கே உற்பத்தியானவர்கள் என்பது தெரிகிறதா?

பாபர் மஸ்ஜித் வழக்கின் ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிக்கின்ற அதிகார பலமுள்ள சக்திகள் யார் என்பதும், அவர்களை உருவாக்கிய பாசறை எது என்பதும் இப்போது புரிகிறதா?

1925 இல் ராமர் கோயில் கனவோடு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ், 1926 இல் அதை வென்றடைந்து விடலாம் என்று அவசரப் படவில்லை. இன்றைக்கு விதைத்து நாளைக்கே அறுவடை செய்து விட வேண்டும் என்று நாம் துடிப்போமே அது போல ஆர்.எஸ்.எஸ் துடிக்கவில்லை.
நிதானத்தோடும் தொலைநோக்குத் திட்டத்தோடும் அது தன் இலக்கை நோக்கிப் பயணித்தது..

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின் நாடு முழுவதும் முஸ்லிம்களிடையே மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது.தென்னகத்தில் அதன் எதிரொலியாக பலமான இயக்கங்கள் கட்டப்பட்டன.குறிப்பாகத் தமிழகத்தில் பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டமும், முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியும் உச்சத்தை அடைந்தன. பாபர் மஸ்ஜிதை திரும்பக் கட்டக்கோரி டில்லிக்கே சென்று போராடியதன் மூலம், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய பெருமை தமிழகத்தையே சாரும். அப்படிப்பட்ட தமிழகத்தை நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்..

தமிழகத்தில் பாபர் மஸ்ஜித் மீட்பு இயக்கத்தின் இன்றைய கதி என்ன?

டிசம்பர் 6 அன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் ஒரு அமைப்பும், 12 மணிக்கு மெமோரியல் ஹால் முன்பு இன்னொரு அமைப்பும், மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மற்றொரு அமைப்புமாக போராட்டம் நடத்துகின்றன.ஒரே குரலில் ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டியவர்கள் பல கூறுகளாகப் பிளவு பட்டு நின்று போராட்டத்தின் வலிமையை சிதைத்து விட்டனர்.

டிசம்பர் 6 போராட்டம் என்பதே ஏதோ 'வருஷம் பாத்திஹா' சடங்கு போல ஆக்கப்பட்டு விட்டது. இத்தகைய வழிமுறைகளால் மக்களிடம் எப்படி உணர்வு தங்கும்? மக்கள் சலிப்படைவார்களா மாட்டார்களா? வழக்கம் போல இயக்கவாதிகள் மட்டுமே கூடுவதும், கடமை முடிந்தது என்று கலைந்து விடுவதும் தானே இன்று டிசம்பர் 6 இல் நடந்து வருகிறது. இதைத் தாண்டி பாபர் மஸ்ஜிதிற்காக நாம் செய்தது என்ன?

17 ஆண்டு காலமாக ஒரே மாதிரியான போராட்டத்தை மட்டுமே நடத்தி வந்த நாம், பாபர் மஸ்ஜித் முஸ்லிம்களுக்கு உரியது என்ற பொதுக்கருத்தை ஏற்படுத்தியிருக்கிறோமா? ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை உருவாக்கி லட்சக்கணக்கான குழந்தைகளிடமும், அவர்களின் மூலம் அவர்களது பெற்றோர்களிடமும், அந்தப் பெற்றோர்களின் மூலம் அந்தக் குடும்பத்தினரிடமும்,அதன் மூலம் அண்டை வீட்டாரிடமும், அண்டை வீட்டார் மூலம் தெரு மக்களிடமும், தெரு மக்கள் மூலம் ஊர் மக்களிடமும் இப்படி சங்கிலித் தொடராக ராமஜென்ம பூமி பற்றிய கருத்தியலைப் பரப்புவதற்கு ஆர்.எஸ்.எஸ் அடித்தளமிட்டது போல் நாம் என்ன தளம் போட்டோம்?

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றனவே, நமது முஸ்லிம் அமைப்புகளின் கீழ் எத்தனைப் பள்ளிக்கூடம் இயங்குகின்றன? எங்கள் அமைப்பில் இத்தனை ஆம்புலன்சுகள் இருக்கின்றன என்று பெருமையாக பட்டியல் வாசிக்கும் அமைப்புகளிடம் எத்தனை பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன? ஒரு மாவட்ட நிர்வாகத்திற்கு இரண்டு பள்ளிக்கூடம் என்ற அடிப்படையில் உருவாக்கி இருந்தால் கூட, தமிழகத்தில் இன்று பிரதானமாக செயல்படும் ஐந்து அமைப்புகளின் மூலம் குறைந்தது 250 பள்ளிக்கூடங்கள் உருவாகி இருக்க வேண்டுமே.

அப்படி உருவாக்கி இருந்தால் அதில் படிக்கும் குழந்தைகளுக்கு பாபர் மஸ்ஜித் பற்றிய வரலாற்றை பாடமாக்கி இருக்கலாமே. ஒரு பள்ளிக்கு ஐநூறு குழந்தைகள் என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைய தலைமுறையை பாபர் மஸ்ஜிதின் வரலாறு தெரிந்த தலைமுறையாக உருவாக்கி இருக்கலாமே. அந்தக் குழந்தைகள் மூலம் அவர்களின் பெற்றோருக்கும் புரிதலை ஏற்படுத்தி இருக்க முடியுமே. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை பல்கிப் பெருகி இருக்குமே.

ஒரு டிசம்பர் 6 போராட்டத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் நடக்கின்றன. சுவர் எழுத்துக்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் என ஏராளமான செலவுகள் செய்யப்படுகின்றன. பாபர் மஸ்ஜித் மீட்பில் அந்தப் போராட்டமும் ஒரு வழிமுறையே தவிர, அது மட்டுமே போதாதே..அந்தப் போராட்டத்திற்கு மட்டும் செலவிட்ட பொருளாதாரத்தையும், மனித உழைப்பையும் நாம் ஆக்கப்பூர்வமாகத் திருப்பி இருந்தால் இந்த 17 ஆண்டுகளில் அரசியல்,சமூக,கருத்தியல் தளத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமே?
சரி, ஏதாவது ஒரு அமைப்பு, அடையாளத்துக்கு அப்படி ஒரு போராட்டத்தை நடத்தி விட்டு மற்ற அமைப்புகளாவது வேறு வகையில் சிந்தித்திருக்கலாமல்லவா?

பாபர் மஸ்ஜித் இடத்தை ராமஜென்ம பூமியாக மாற்றுவதற்கும், அதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்குவதற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் விஷ்வ ஹிந்து பரிஷத்.
வி.ஹெச்.பி தனது இலக்கை அடைவதற்காக காட்டிய வேகமும், கையாண்ட வியூகமும் சாதாரணமானதல்ல. வி.ஹெச்.பி யின் கட்டமைப்பிலும் களப்பணியிலும் நாம் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் செய்திகள் இருக்கின்றன.

பாபர் மஸ்ஜித் இடத்தை கபளீகரம் செய்யும் தமது குறிக்கோளை அடைவதற்காக எல்லா தளத்திலும் வி.ஹெச்.பி திட்டமிட்டு வேலை செய்தது. 18 க்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்கை அமைத்து செயலாற்றியது. ஆர்.எஸ்.எஸ் பள்ளிக்கூடங்களைத் திறந்து இளம் தலைமுறையினரை ராமரின் பக்கம் ஈர்த்தது போல, வி.ஹெச்.பி இந்து சமூகத்தில் அதிகார மைய்யமாக விளங்கும் சாமியார்களையும் மடங்களையும் ஈர்த்தது.

'பசு பாதுகாப்புப் பிரிவு' என்னும் தனிப்பிரிவை தொடங்கி பசுக்களைப் பராமரிக்கும் நிலையங்களைத் திறந்து இந்துச் சாமியார்களின் அபரிமிதமான நன்மதிப்பை விஹெச்பி பெற்றது. நிர்வகிக்கப்படாத ஆலயங்களில் பணி செய்வதற்கு பூசாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் 'குருமார்கள் பிரிவு' என்னும் தனிப் பிரிவைத் தொடங்கியது. ஆலயங்களில் பஜனைகளை ஏற்பாடு செய்ய 'தர்ம அனுஷ்டானப் பிரிவு' என்று மற்றொரு பிரிவைத் தொடங்கியது. இத்தகைய பிரிவுகளின் மூலம் சாமியார்களையும், பூசாரிகளையும் தன் இயக்கத்தின் கீழ் கொண்டு வந்த விஹெச்பி, கோவில்களில் தனது அதிகாரத்தை நிறுவியது. அக்கோவில்களின் மூலம் கோடிக்கணக்கான இந்து பக்தர்களிடம் ராமர் கோவிலைப் பற்றிய உணர்வை ஊட்டியது.

விஹெச்பி யின் இந்த வியூகம் நமது இயக்கங்களிடம் துளியாவது இருக்கிறதா? பாபர் மஸ்ஜித் மீட்பு என்னும் முழக்கத்தை முன்வைத்து தொடங்கப்பட்ட நமது இயக்கங்களுக்கும் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் இடையே இங்கு எத்தகைய உறவு இருக்கிறது? பாபர் மஸ்ஜித் மீட்பைப் பற்றி பேசுகிற இயக்கங்கள் தவ்ஹீத் பேசுகிற இயக்கங்களாக இங்கு அடையாளப்பட்டுள்ளதால், பாரம்பரிய முஸ்லிம்களான சுன்னத் ஜமாத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளிவாசல்களில் இந்த இயக்கங்களின் குரல் எடுபடுவதில்லை என்பது தானே நிதர்சன உண்மை.

தவ்ஹீத் பேசுகிற பள்ளிவாசல்களில் கூட வெளியே சொல்ல முடியாத அளவு, இவர்களுக்குள்ளேயே பகையை வளர்த்து ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருக்கும் போக்குதானே நிலவுகிறது. டி.என்.டி.ஜே பள்ளிவாசலில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உரையாற்றவோ, ஜாக் பள்ளிவாசலில் பிஜே உரையாற்றவோ முடியாது என்னும் போது, ஒத்தக் கருத்துடையவர்களிடமே இவ்வளவு முரண்பாடும், பகையும் இருக்கும் போது, மாற்றுக் கருத்துடைய முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் எப்படி இவர்கள் மதிப்பு மிக்கவர்களாக நுழைய முடியும்?
உலமாக்களையும், பள்ளிவாசல்களையும், ஜமாத்துகளையும் ஈர்க்காத இயக்கங்களால் எப்படி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஈர்க்க முடியும்?

இன்றைக்கு அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு பற்றி எத்தனை பள்ளிவாசல் ஜும்மாக்களில் பேசப்பட்டது? அதைப் பேசினாலே சமூக அமைதிக்கு பங்கம் வந்துவிடும் என்கிற அச்ச உணர்வில்தானே இன்று வரை நமது பள்ளிவாசல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன? முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தகைய நிறுவனங்களிடமே இதைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் உருவாகவில்லை என்னும் போது முஸ்லிம்களிடம் எப்படி விழிப்புணர்வு வரும்?

ராமர் கோவிலைக் கட்டுவதற்காக விஹெச்பி யால் தொடங்கப்பட்ட பல பிரிவுகள் தமது இலக்கை அடைய ஒன்றிணைந்து நிற்பதையும், பாபர் மஸ்ஜித் மீட்புக்காகத் தொடங்கப்பட்ட நமது இயக்கங்கள் பல கூறுகளாகப் பிளவு பட்டு நிற்பதையும் தான் நம்மால் கான முடிகிறது.

விஹெச்பி கையிலெடுத்த மற்றொரு மிக முக்கியமான வியூகம், அது தலித் மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் தனது திட்டத்தைக் கொண்டு சேர்த்ததாகும். காடுகளிலும்,மலைகளிலும் வசிக்கக் கூடிய பழங்குடியின மக்களுக்கும், சேரிகளில் வசிக்கும் தலித் மக்களுக்கும் ராமர் சிலைகளை இலவசமாகக் கொடுத்து இந்து மதச் சடங்குகளைப் பரப்பியது விஹெச்பி. அம்மக்களின் குல தெய்வ வழிபாட்டு முறைகளை மறக்கடிக்கச் செய்து ராமரை கடவுளாக வணங்கும் நிலையை விஹெச்பி உருவாக்கியது.

அம்மக்கள், முஸ்லிம்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ மதம் மாறி விடாமல் தடுக்கவும், மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதம் திருப்பவும் தர்ம பிரச்சாரப் பிரிவு என்னும் பிரிவைத் தொடங்கி விஹெச்பி வேலை செய்தது. இந்தியாவின் பெரும்பான்மைச் சமூகமான தலித் மக்களிடம் ராமரைக் கொண்டு சேர்த்ததன் மூலம் விஹெச்பி யின் வேலை மிக எளிதாகி விட்டது.

ஆனால் நமக்கும் தலித் மக்களுக்குமான தொடர்பு என்ன? பழங்குடியினர் வாழ்கின்ற காடுகளுக்கும் மலைகளுக்குமான நமது உறவு என்ன? எத்தனை தலித் சேரிகளில் பாபர் மஸ்ஜித் பற்றிய பொதுக் கூட்டத்தை நாம் நடத்தியிருக்கிறோம். நமது தலைவர்களில் எத்தனை பேர் காடுகளுக்கும் மலைகளுக்கும் பயணம் செய்திருக்கிறார்கள். இன்றைக்கு ஒவ்வொரு முஸ்லிம் ஜமாத்துகளுக்கும் திருமாவளவன் உள்ளிட்ட தலித் சமூகத் தலைவரைத் தெரியும். ஆனால் எத்தனை சேரிகளுக்கு நமது முஸ்லிம் தலைவர்களைத் தெரியும்? முஸ்லிம்களை நோக்கி ஓடோடி வருகின்ற திருமாவின் வீரியமிக்க செயல்பாடு ஏன் நம் தலைவர்களிடம் இல்லை? சேரிகளை நோக்கி திட்டத்தோடு பயணிக்கின்ற விஹெச்பி யின் வியூகம் ஏன் நம் அமைப்புகளிடம் இல்லை?

ராமர் கோவிலை மக்கள் மயப்படுத்துவதற்காக பதிப்புத்துறையிலும் பரப்புரையிலும் விஹெச்பி காட்டிய வேகம் குறிப்பிடத்தக்கது. பாபர் மஸ்ஜித் பற்றிய உண்மை செய்திகளும், இந்துத்துவ கருத்தியலுக்கு எதிரான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வெளி வருவதால் அவை வெகு மக்களிடம் பெரிய அளவில் சென்றடைவதில்லை. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட விஹெச்பி பிராந்திய மொழிகள் அனைத்திலும் பல வெளியீடுகளைக் கொண்டு வந்து பரப்புரை செய்தது. ராமர் பற்றிய கதைகளையும், பாபர் மஸ்ஜித் பற்றிய அவதூறுகளையும் அச்சடித்து விநியோகித்தது. விஹெச்பி யின் வெளியீடுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டதுதான் இங்கே கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சம். ஆனால் நாம் என்ன செய்தோம்?

இங்கே ஒரு வேதனையான விசயத்தைக் குறிப்பிட வேண்டும். பாபர் மஸ்ஜித் ராம ஜென்ம பூமியா? என்ற தலைப்பில் பேராசிரியர் இ.அருட்செல்வன் எழுதிய ஒரு புத்தகம் 1990 களிலேயே தமிழில் வெளியிடப்பட்டது. பாபர் மஸ்ஜித் பிரச்சனை பற்றிய ஆழமான ஆய்வுகளோடு, மூவாயிரம் பிரதிகளோடு 1990 இல் வெளிவந்த அந்தப் புத்தகம், இந்த 20 வருட காலத்தில் இரண்டாவது பதிப்பே வெளிவராத அளவுக்கு முடங்கிப் போனது தான் மிகப்பெரும் சோகம்.

பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தில் 17 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கான இயக்கவாதிகளில் எத்தனைப் பேர் அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பார்கள்? 1990 களுக்குப் பிறகு பிறந்த இன்றைய 20 வயது முஸ்லிம் இளைஞனுக்கு, மறு பதிப்பே செய்யப்படாத அந்தப் புத்தகம் எப்படித் தெரியும்? இயக்கவாதிகளும், இளைஞர்களுமே படிக்கவில்லை என்றால்; அவர்களையே அது சென்றடையவில்லை எனில், பாமர முஸ்லிம்களுக்கு எப்படி பாபர் மஸ்ஜிதின் வரலாறு தெரியும்? முஸ்லிம்களுக்கே தெரியவில்லை என்றால் முஸ்லிமல்லாத மக்களுக்கு எப்படி நமது கருத்து சென்றடையும்? முஸ்லிமல்லாத மக்களை ஈர்க்காத வரை, அவர்களுக்கு நமது நியாயங்கள் புரியாத வரை நம்மால் எப்படி மஸ்ஜிதை மீட்க முடியும்?

இன்றைக்கும் கலைஞரையும் ஜெயலலிதாவையும் பிற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கச் செல்லும் போதெல்லாம், நம் சமுதாயத் தலைவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கத்தையும், நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பையும் கொண்டு போய் கொடுக்கின்றனர். ஒரே குரானை ஒரே தலைவருக்கு எத்தனை முறை கொடுப்பார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். குரான் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் ஒருவராவது அருட்செல்வன் எழுதிய அந்தப் புத்தகத்தை கருணாநிதிக்கும்,ஜெயலலிதாவுக்கும் கொடுத்திருக்கலாமல்லவா?
நாம் கொடுக்கும் குரானும் ஹதீசும், மீலாது நபிக்கும் ரம்ஜானுக்கும் அவர்கள் வாழ்த்து அறிக்கை விடவே பயன்படுகிறது.

வெகுமக்களின் சுவாசமாக விளங்குகின்ற ஊடகங்களில் நமது நிலை என்ன என்பதை ஏற்கனவே பலமுறை பேசி விட்டோம்.அத்தகைய ஊடகங்களில் இந்துத்துவ சக்திகளின் பங்களிப்பு என்ன என்பதை இப்போது சற்று அலசுவோம். தனியார் தொலைக்காட்சிகளின் பெருக்கம் இல்லாத காலத்தில், அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தொலைக்காட்சியான தூர்தர்சன் மட்டுமே காட்சி ஊடகமாக இருந்த நேரத்தில், அந்த ஒற்றை ஆயுதத்தையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது விஹெச்பி.

1990 களில் தூர்தர்சனில் ஒலிபரப்பப் பட்ட ராமாயணம் தொடர் ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் விவாதப் பொருளானது. அதிகாரத்தை இழந்து, தந்தையை இழந்து, மனைவியை இழந்து துயரத்தால் தத்தளிக்கிற ராமரை காட்சிப் பொருளாக்கி, இந்தியப் பெண்களின் செண்டிமெண்டை தூண்டி விட்டனர்.
அரசுத் தொலைக் காட்சியின் மூலம் இப்படி ராமர் கதையை பரப்பியவர்கள், தமது இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஒளிப்படங்களின் மூலம் இந்து இளைஞர்களை உசுப்பி விட்டனர்.
முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் வன்முறையாளர்கள், வாழத்தகுதியற்றவர்கள், தேசத் துரோகிகள் என்னும் விஷமக் கருத்துக்களைத் தாங்கிய ஒளிப்படங்களையும் ஓலிநாடாக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டது விஹெச்பி.

பாபர் மஸ்ஜிதை எப்படி இடிக்க வேண்டும் என்பது பற்றி காட்சி ரீதியாக வகுப்பு எடுக்கும் வகையில் படங்களை உருவாக்கி மூலை முடுக்கெல்லாம் அவற்றை போட்டுக் காட்டி வெறியூட்டினர்.
மிகப்பெரும் செய்தி நிறுவனங்களில் உயர் பொறுப்புக்களில் இருந்தவர்களை தன் வலையில் விழ வைத்ததோடு, எல்லா ஊடகங்களிலும் இந்துத்துவ சிந்தனை உடையவர்களை ஊடுருவச் செய்தது விஹெச்பி.

பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்ட போது கரசேவையில் பல வட இந்தியப் பத்திரிகையாளர்கள் பங்கேற்றதையும், அத்வானியின் ரதயாத்திரை செய்திகளை ஊடகங்கள் பிரதானப் படுத்தி வெளியிட்டதையும், வகுப்புக் கலவரங்களினால் ஏற்பட்ட முஸ்லிம்களின் இழப்புகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதையும் வைத்துப் பார்க்கும் போது ஊடகங்களில் விஹெச்பியின் ஊடுருவல் விளங்கும்.

ராமர் கோவில் திட்டத்தை செயல் படுத்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் வி.ஹெச்.பி க்கும் மிகப்பெரும் அளவில் பொருளாதாரம் தேவைப் பட்டிருக்குமே.,அதை எங்கிருந்து எப்படித் திரட்டினார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.

இந்தியாவில் செயல்படும் அமைப்புகளில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறுபவை இந்துத்துவ அமைப்புகள் தான் என்று, பல புள்ளிவிபரச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. 1973 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் மட்டும் அமெரிக்காவில் செயல்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் 5300 கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு அனுப்பியதாக அமிர்தா பாசு என்கிற அமெரிக்க ஆய்வாளர் அம்பலப்படுத்தி உள்ளார். இந்தக் காலகட்டத்தில் தான் ராமர் கோவிலை முன்னிறுத்தி இந்தியாவில் விஹெச்பி கோரத்தாண்டவம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

விஹெச்பி மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு வரும் பணம் குறித்து இந்தியாவில் சரியான தணிக்கை நடைபெறுவதில்லை. தணிக்கைத் துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் பார்ப்பனர்களாக இருப்பதும், அமெரிக்காவில் செட்டிலானவர்கள் ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்து விட்டுச் சென்ற பார்ப்பனக் குஞ்சுகள் என்பதும் தான், இந்துத்துவ சக்திகளின் கட்டற்ற பொருளாதார பலத்திற்கு காரணமாகும்.

இந்தியாவில் முஸ்லிம்கள் உயர் அதிகாரங்களை அடையாததும், வெளிநாட்டில் கூட கூலி வேலை செய்யும் உடலுளைப்புக் காரர்களாக முஸ்லிம்கள் இருப்பதுமே நமது அமைப்புகளின் பொருளாதார பலமின்மைக்குக் காரணம். அதையும் மீறி வசூலாகின்ற கொஞ்சப் பணத்தையும் நமது இயக்கங்கள் பல கூறுகளாகப் பிரிந்து பயனற்ற வகையில் செலவழித்து விரயமாக்குவது தனிக் கதை.

சர்வதேசத் தளத்தில் இருந்து நமக்கு பொருளாதாரம் தான் திரளவில்லை..ஆதரவாவது கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. பாலஸ்தீன் பிரச்சனைக்காகவும், இராக் மக்களின் விடிவுக்காகவும், ஆப்கான் சூறையாடப் படுவதை எதிர்த்தும் இங்கே நாம் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகத்தின் எந்த மூலையிலாவது பாபர் மஸ்ஜித் பிரச்சனைக்காக போராட்டம் நடந்ததுண்டா?

பாபர் மஸ்ஜித் பிரச்சனை என்பது வெறும் ஒரு பள்ளிவாசல் பிரச்சனை அல்; அது இந்திய முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையையும் வாழ்வுரிமையையும் கேள்விக்குள்ளாக்கிய பிரச்சனை என்கிற புரிதலை உலக நாடுகளுக்கு நாம் எடுத்துச் சென்றிருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா? குறைந்த பட்சம் முஸ்லிம் நாடுகளின் கவனத்தையாவது ஈர்த்திருந்தால் இந்தியாவுக்கு ஏதாவது ஒரு வகையில் சின்ன அழுத்தமாவது ஏற்பாட்டிருக்குமே? அப்படி சர்வதேசத் தளத்திலிருந்து எந்தவொரு நெருக்கடியும் இல்லாததால் தானே அலகாபாத் உயர் நீதிமன்றம் இப்படி கேவலமாகத் தீர்ப்பளிக்கிறது. இந்திய அரசு சிறு உறுத்தல் கூட இல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டது..

இப்படி தொடர்ச்சியாகப் பல வகைகளிலும் நமது இழப்புகளுக்கு நாமே காரணமாய் இருக்கிறோம்.நமது பலவீனங்களே எல்லா வகையிலும் இந்துத்துவ சக்திகளின் பலமாகி விட்டது.

1925 இல் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தொடங்கிய ஹெட்கேவார், தான் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு குறுகிய எண்ணத்தோடு காய் நகர்த்தவில்லை. தொலைநோக்குப் பார்வையோடு இயக்கத்தின் கட்டமைப்பை உறுதிப்படுத்தி திட்டமிட்டு செயலாற்றினார். 75 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தலைமுறையைச் சேர்ந்த வாஜ்பாய் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

ஆர்.எஸ்.எஸ் ஐப் போலத் திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலம் நாமும் பிற மக்களிடம் வெறுப்பை வளர்க்க வேண்டியதில்லை. பிற வழிபாட்டுத் தளங்களை இடிக்க வேண்டியதில்லை. நம்முடைய திட்டமிடுதலும், உழைப்பும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும், அரசியல் அதிகாரத்தை நோக்கி நாம் எழுச்சி பெறும் வகையிலும் அமைய வேண்டும்.

இனியாவது யோசிப்போமா?

[சமநிலைச் சமுதாயம் நவம்பர்-2010 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை]

No comments: